Published : 12 Mar 2025 06:23 AM
Last Updated : 12 Mar 2025 06:23 AM

வெப்பநிலையைக் குறைக்கும் கால்கள்! | பறப்பதுவே 13

பறவைகளுக்குப் பல விதங்களில் அவற்றின் கால்களும் பாதங்களும் உதவுகின்றன. கால்களின் நீளம் அவற்றின் தேவைக் கேற்ப சிறிதாகவும் பெரிதாகவும் இருக்கின்றன. விமானம்போல் சிறிது தூரம் ஓடிப் பறக்க ஆரம்பிக்கும் பறவைகளுக்கு உந்துவிசையைக் கொடுப்பதற்காக எம்பி குதிக்கும்போது அவற்றின்கால், மேல் நோக்கு விசையை உருவாக்க உதவுகிறது.

நீண்ட கால்கள் ஆழமாக இருக்கும் தண்ணீரில் இறங்கி, உடல் நனைந்துவிடாமல் இரை தேடுவதற்கு உதவுகின்றன. புல்பரப்புகளின் மீது நடந்து இரை தேடுவதற்கும் இவை உதவுகின்றன. கால்களின் நீளம் அதிகம் என்றால் வேகமாக நடந்து செல்ல அவை பயன்படும். இரையை லாகவமாகப் பிடித்து, தூக்கிக்கொண்டு செல்லவும் இவை உதவுகின்றன.

பறக்காமல் நடந்து செல்லும் பறவைகளுக்குக் கால்களின் அமைப்பு வேறுபடுகிறது. எடை அதிகமான கிவி, வலிமையான தசைகள் மூடிய கால் அமைப்பைக் கொண்டுள்ளது. பறக்கும் மற்ற பறவைகளுக்கு மெல்லிய கால் அமைப்பைப் பார்க்கலாம். தசைகள் குறைவாக, இறகுகள் இல்லாத கால் அமைப்புதான் பறவைகளின் உடல் வெப்பநிலையைச் சமநிலைப்படுத்த உதவுகிறது. மனிதர்களைப் போன்று பறவைகளும் வெப்ப ரத்த உயிரினங்கள்.

அதாவது எந்தச் சூழ்நிலையில் வாழ்ந்தாலும் பறவையின் உடலைக் குறிப்பிட்ட வெப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும். மனிதர்களின் உடல் வெப்பநிலையைவிட இது சற்று அதிகம். 102 – 109 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பறவைகளின் தன்மைக்கு ஏற்ப அவற்றின் உடல் வெப்பநிலை இருக்கும். குளிர்ச்சியான பகுதியில் பறவை கால் வைக்கும்போது அந்தக் குளிரினால் உடல் வெப்பநிலை குறையாமல் பார்த்துக்கொள்ளப் பறவையின் கால்கள் உதவுகின்றன.

பறவையின் இதயத்தில் இருந்து தமனிகள் மூலம் சூடான ரத்தம் கால்களை நோக்கிச் செல்கிறது. அப்படிச் செல்லும்போது கால் பாதம் குளிர்ந்த நிலையில் இருப்பதால் அதன் வெப்பநிலை குறைகிறது. பின்னர் சிரை வழியாக அந்தக் குளிர்ந்த ரத்தம் பறவையின் இதயத்தை நோக்கிச் செல்கிறது. அப்படிச் செல்லும்போது சூடான ரத்தம் செல்லும் தமனியும் சிரையும் அருகருகே செல்லுமாறு அதன் அமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் சூடாக இருக்கும் ரத்தத்தில் இருந்த ஆற்றல் குளிர்ந்த நிலையில் இருக்கும் ரத்தத்தைச் சூடுபடுத்த உதவுகிறது.

இந்த வெப்பப் பரிமாற்றம் நடைபெறுவதற்குக் கால்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதனால் உடலில் இருந்து வளர்சிதை மாற்றத்திற்கு அதிக ஆற்றலைச் செலவு செய்யாமல், உடல் வெப்பநிலையைப் பறவைகளால் பராமரிக்க முடிகிறது. இதே போன்று வெப்பநிலை அதிகமான காலத்திலும் உடலின் அதிக வெப்பநிலையை வெளியேற்றுவதற்கு பறவையின் கால்கள் உதவுகின்றன.

பறவைகளின் வாழ்விடத்தைப் பொறுத்து அவற்றின் பாத அமைப்பு வேறுபடுகிறது. வேட்டை யாடி உண்ணும் கழுகு, பருந்து போன்றவற்றுக்குக் கூர்மையான நகங்களும் உறுதியான பிடிப்புத் தன்மையும் உடைய விரல் அமைப்பைப் பார்க்க முடியும். நம் கைகளால் ஒரு பொருளைப் பிடித்துத் தூக்குவதற்கு, விரல்களுக்கும் பொரு ளுக்கும் இடையே உள்ள உராய்வு விசை உதவுகிறது. எண்ணெய் போன்ற பொருள்கள் கையில் இருந்தால் உராய்வு விசை குறைகிறது. மனிதனின் கைகளுடன் ஒப்பிடும்போது 10 மடங்கு அதிகப் பிடிப்புத்தன்மையைக் கழுகின் கைகள் கொண்டுள்ளன. அது போன்று மனிதர்களைவிட 5 மடங்கு பிடிப்புத்தன்மையை ஆந்தையும் கொண்டுள்ளது.

மரக்கிளைகளின் மீது எளிதாக நடந்து செல்ல நெகிழ்வான பாதங்களைக் கிளி போன்ற பறவைகள் கொண்டுள்ளன. வாத்து, கொக்கு போன்ற நீர்நிலைப் பறவைகள் எளிதாக நீந்துவதற்குத் தேவையான பாத அமைப்பைக் கொண்டுள்ளன. நெருப்புக்கோழி, ஈமு போன்ற பறவைகள் வேகமாகப் பல கிலோமீட்டர் வேகத்தில் தரையில் ஓடுவதற்குத் தேவையான பெருவிரல்கள் போன்ற அமைப்பைத் தங்கள் பாதங்களில் கொண்டுள்ளன.

மரத்தைப் பிடித்து எளிதாக ஏறுவதற்குக் கூரிய நகங்கள் கொண்ட அமைப்புடன் சில பறவை களையும் பார்க்க முடியும்.
பாதத்தின் அளவைப் பொறுத்து எவ்வளவு அழுத்தம் தரையில் செலுத்தப்படுகிறது என்பது முடிவு செய்யப்படுகிறது. சிறிய பறவைக்குப் பெரிய கால்கள் இருந்தால் கால்களில் செயல்படும் அழுத்தம் குறைவாக இருக்கும்.

ஆப்ரிக்காவில் குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் வாழும் யகானா ((African Jacana) பறவைதான் நீண்ட பாதங்களை உடைய பறவை. இதன் பாதங்களின் நீளம் 6 - 20 அங்குலம் வரை இருக்கும். அல்லி, தாமரை போன்று தண்ணீரில் மிதக்கும் இலைகளின் மீது தனது பாதத்தை வைத்து எளிதாக இந்தப் பறவையால் நடந்து செல்ல இயலும். யானை பெரிய உருவமாக இருந்தாலும் அதன் பாதங்கள் பெரிதாக இருப்பதால், மனிதர்கள் நடக்கும்போது ஏற்படும் அழுத்தத்தைவிட, யானைகள் நடக்கும்போது உருவாக்கும் அழுத்தம் குறைவாகத்தான் இருக்கும். ஆப்ரிக்க யகானா போல் மனிதர்களும் நீரின் மீது நடக்க வேண்டும் என்றால் பல சதுரடி பரப்பளவு கொண்ட பாதங்கள் தேவைப்படும்.

(பறப்போம்)

- writersasibooks@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x