Published : 31 Jul 2018 10:14 AM
Last Updated : 31 Jul 2018 10:14 AM
நமது விருப்பங்களும் தேர்வுகளும் காலந்தோறும் மாறிக்கொண்டே இருப்பவைதாம். 6-ம் வகுப்பு படிக்கும்போது, ’நீங்கள் என்ன ஆக நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்டால், ‘டிரைவராக ஆகப் போகிறேன்’ என்று சொல்லக்கூடும். 10-ம் வகுப்பில் நீங்கள் ‘கலெக்டர்’ ஆக நினைக்கலாம்.
அதன் பிறகும் நம்முடைய சூழல், அனுபவம், அறிவு, விருப்பம் ஆகியவற்றைப் பொறுத்து இலக்கை மாற்றிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், இதற்கு மாறுபட்டு ஒரே இலக்கை வைத்துக்கொண்டு அதை அடையும் லட்சியத்தைக் கொண்டவர்கள் அபூர்வம். அவர்களுள் ஒருவர் கார்வேந்தன்.
பிளஸ் டூ படிக்கும்போதே தேங்காய்த் தூள் வியாபாரம் செய்ய முயன்றிருக்கிறார் கார்வேந்தன். ஆனால், அவருடைய குடும்பச் சூழல் காரணமாக அதைச் செய்ய முடியவில்லை. தொடர்ந்து தொழில் தொடர்பாகப் புத்தகங்கள் வாசிப்பதும் வர்த்தகக் கண்காட்சிகளுக்குச் செல்வதுமாக இருந்துள்ளார். மேற்படிப்பிலும் இளங்கலைத் தொழில் மேலாண்மைப் படிப்பையே தேர்வுசெய்துள்ளார். அதிலேயே முதுகலையும் முடித்துள்ளார்.
தொடர் தேடல்
அதற்குப் பிறகு சென்னை, கோயம்புத்தூர், மும்பை, கொல்கத்தா எனப் பல நகரங்களில் நடக்கும் வர்த்தகக் கண்காட்சிகளில் கலந்துகொண்டு தொழில்கள் குறித்துத் தெரிந்துகொண்டுள்ளார். அப்படியான கண்காட்சி ஒன்றின் மூலம்தான் அவருக்குத் தகரக் கூரைகள் தயாரிப்புத் தொழில் அறிமுகமாகியுள்ளது. இந்தத் தொழிலைத் தொடங்க முற்பட்டபோது, குடும்பச் சூழலால் வேலைக்குச் செல்ல வேண்டியிருந்தது. கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக வேலைக்குச் சேர்ந்தவர், அங்கிருந்துகொண்டே தொழில் முனைப்பையும் மெருகேற்றினார்.
குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு தகரக் கூரைகள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அங்கே தகரக் கூரை தயாரிப்பிலுள்ள நுட்பங்களைப் பயின்றாலும் உடனடியாகத் தொழிலைத் தொடங்கிவிடவில்லை. பல மாவட்டங்களில் தகரக் கூரையின் தேவை இருப்பதை ஆய்வின் மூலம் அறிந்துகொண்டார். நாமக்கல் மாவட்டத்தில் அதற்கான தேவை அதிகமாக இருப்பதை அறிந்து ’ரித்விக் ரூஃபிங்’ (rithvig roofing) தொடங்கினார்.
வாடிக்கையாளர்தான் இலக்கு
“முதலில் இந்தத் தொழிலில் நான் உள்பட எங்கள் குடும்ப உறுப்பினர்கள் மூவர்தான் பணியாளர்கள். மெஷின் ஆபரேட்டர், மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ், மேனேஜர் எல்லாம் நான்தான். அப்போது பெரிதாக வருமானம் இல்லை. வாடிக்கையாளர்களைப் பெறுவதை மட்டுமே முதல் இலக்காக நிர்ணயித்தேன்” என்கிறார் கார்வேந்தன்.
முறையாக இயந்திரங்களை வாங்கிவிட்டாலும், அதை இயக்குவதில் சில சவால்கள் ஆரம்பத்தில் இருந்திருக்கின்றன. அதனால் சில வாடிக்கையாளர்களை இழக்க வேண்டியதாயிற்று. அதன் பிறகு தவறுக்கான காரணத்தைக் கண்டறிந்து அதை உடனடியாகக் களைந்து, வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பையும் ஈடுசெய்துள்ளார். அதன்மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் பெற்றுள்ளார்.
அவமானம் அல்ல வெகுமானம்
“ஆரம்ப காலத்தில் நேரிலும் தொலைபேசி வழியாகவும் மார்க்கெட்டிங் செய்தபோது பலரும் அவமானப்படுத்தும் விதமாகப் பதிலளிப்பார்கள். ஆனால், இன்று எனக்கு அவையெல்லாம் உற்சாகமூட்டும் டானிக்காகத் தெரிகின்றன. இன்றைக்கு மார்க்கெட்டிங் பார்ப்பதற்காகத் தனியாக ஆட்களை அமர்த்தியுள்ளேன். என்னைத் தவிர 12 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களிடம் இந்த அனுபவத்தைப் பகிர்ந்து வேலை பார்க்கச் சொல்வேன்” என்கிறார் கார்வேந்தன்.
வீட்டுக்குப் பயன்படுத்தப்படும் தகரக் கூரைகளில் பல வண்ணங்களைச் தீட்டித் தருவதுதான் இவரது தொழில். முன்புறக் கூரை, மொட்டை மாடிக் கூரை எனப் பல மாதிரிகளில் தயாரித்துக் கொடுக்கிறார். தொழில் தொடங்கிய புதிதில் மாதத்துக்கு 2000 ரூபாய்க்கும் குறைவாக ஈட்டியவர் இன்றைக்குக் குறைந்தது ரூ.50,000 சம்பாதிக்கிறார்.
- கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT