Published : 04 Feb 2025 01:31 PM
Last Updated : 04 Feb 2025 01:31 PM

ஸ்டீபன் ஹாக்கிங் | விஞ்ஞானிகள் - 20

ஸ்டீபன் ஹாக்கிங் 1942, ஜனவரி 8 அன்று இங்கிலாந்தில் பிறந்தார். தந்தை ஃபிராங்க் மருத்துவர், தாய் இசபெல். இரண்டாம் உலகப்போரால் ஆக்ஸ்போர்டிற்குக் குடிபெயர்ந்தது குடும்பம். செயின்ட் ஆல்பன்ஸ் பள்ளியில் படித்தார் ஹாக்கிங். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பாடத்தில் இளங்கலை முடித்தார்.

அண்டவியல் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபாடு அதிகமானது. எனவே முதுகலையை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்றார் ஹாக்கிங். நவீன அண்டவியலின் முக்கியமான ஆசிரியரோடு ஹாக்கிங்கின் ஆராய்ச்சி தொடர்ந்தது.

அப்போதுதான் ஹாக்கிங் தசை சிதைவு நோய்க்கு உள்ளானார் . ஒவ்வொரு உறுப்பாகச் சிதைத்து அசையவிடாமல் செய்தது. மருத்துவர்கள் ஹாக்கிங்கிற்கு இரண்டு ஆண்டுகள் ஆயுள்காலம் நிர்ணயித்தனர். உறுப்புகள் செயலிழந்தாலும் மூளை நன்றாகச் செயல்படுகிறதே என்றாராம் ஹாக்கிங்ஸ். அந்த அளவுக்குத் தன்னம்பிக்கையும் மூளை பலமும் உள்ளவர். ஹாக்கிங்ஸ் 1966இல் கருந்துளை குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார்.

அண்டவியல் மீதான ஆர்வத்தால் பிரபஞ்ச உருவாக்கத்தில் சிறிய துகள்கள் குறித்து ஆராய்ந்தார். பெருவெடிப்புக் கொள்கையை ரோஜர் பென்ரோஸ் உடன் இணைந்து ஆராய்ச்சி செய்தார். எலெக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்கள் இணைந்து அணுவை உருவாக்குகின்றன. நம்மைச் சுற்றி இருக்கும் பொருள்கள் அனைத்தும் இந்த மூன்று துகள்களின் இணைப்பு. அந்த மூன்று துகள்களையும் இணைக்கும் ஒட்டுப்பொருள் எது எனக் கண்டறிந்துவிட்டால் பிரபஞ்ச ரகசியத்தை அவிழ்த்துவிடலாம் என நினைத்தார் ஹாக்கிங்.

அதற்காக CERN என்கிற அணு ஆராய்ச்சிக் கூடத்தை அமைத்தனர். அங்கு புகழ்பெற்ற விஞ்ஞானிகள் பலரும் இணைந்து ஆராய்ச்சி செய்தனர். CERNஇல் அணுக்களை வேகமாக மோதவிட்டு பெருவெடிப்பை நிகழ்த்தினர். அணுக்களின் ஒட்டுப்பொருள் என்ன என்று கண்டுபிடித்தனர். அது 12 துகள்களின் சேர்க்கை. அதில் 12வது துகளைக் கடவுள் துகள் என்றழைத்தனர். ஹாக்கிங் அந்தக் கடவுள் துகளின் ஆபத்தைச் சுட்டிக்காட்டினார். அது அதிக எலெக்ட்ரான் வோல்ட்டில் அதிநிலைத்தன்மை பெற்றால் பிரபஞ்சம் அழியும் என்று எச்சரிக்கை செய்தார்.

மீண்டும் கருந்துளை ஆராய்ச்சியில் ஈடுபட்டார் ஹாக்கிங். உள்ளே நடக்கும் எதையும் வெளியிலிருந்து பார்க்க முடியாது என்பதால் அதன்பெயர் கருந்துளை. கருந்துளைக்குள் மின்காந்த அலைகள், ஒளி என எதைச் செலுத்தினாலும் வெளியே வராது. அதிக ஈர்ப்பு சக்தி கொண்டதால் இழுத்து வைத்துக்கொள்ளும் என்பது முந்தைய ஆராய்ச்சியின் முடிவு. ஆனால் ஹாக்கிங்ஸின் ஆராய்ச்சி முடிவு வேறானது.

1970-இல் கருந்துளையிலிருந்து ஒருவித வெப்ப ஆற்றல் வெளியேறுகிறது. அதனால் காலப்போக்கில் கருந்துளைகள் கரைந்து காணாமல் போகும் என்றார். ஹாக்கிங்கின் இந்தக் கண்டுபிடிப்பைப் பாராட்ட கருந்துளையிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சிற்கு ’ஹாக்கிங் கதிர்வீச்சு’ என்று பெயரிட்டனர். கருந்துளைப் பற்றி ’பிளாக் ஹோல்ஸ் அண்டு பேபி யுனிவர்ஸ்’ என்கிற புத்தகத்தை எழுதி உலகப் புகழ்பெற்றார்.

1974-இல் ராயல் கழகத்தின் உறுப்பினரானார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் லூகாசியன் பேராசிரியர் பொறுப்பில் 30 ஆண்டுகள் இருந்தார். ஹாக்கிங்கின் ஆராய்ச்சிகள் ஒருபுறம் தொடர மறுபுறம் நோயின் தாக்கம் அதிகரித்தது. உடலுறுப்புகள் செயலிழந்தன. 1985இல் நிமோனியா தாக்கியது. அதன் சிகிச்சையில் தன் பலமான பேசும் திறனை இழந்தார் ஹாக்கிங். கன்னச்சதை அசைவின் மூலம் பேசும் கருவியைக் கண்டறிந்து பொருத்தினர்.

சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டே, காலங்களைக் கடந்து பயணம் செய்யும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். விரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சம் ஒரு கட்டத்தில் சுருங்கும். அப்போது காலம் பின்னோக்கி நகரும் என்றார். ’எ பிரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்’ என்கிற புத்தகம் உலகப் புகழ்பெற்றது. விற்பனையிலும் சாதனை படைத்தது. அந்தப் புத்தகத்தை வைத்தே காலத்தால் பின்னோக்கி நகரும் அறிவியல் புனைகதைகள் உருவாயின.

ஹாக்கிங்கின் சுயசரிதையான ’மை பிரீஃப் ஹிஸ்டரி’ என்கிற நூலும் உலகப் புகழ்பெற்றது. ஹாக்கிங்கை மரணம் ஒவ்வொரு நொடியும் துரத்தியது. 77 ஆண்டுகள் மனச்சோர்வின்றி ஈடுபாட்டோடு வாழ்ந்தார். வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதில் வெற்றிக்கான வழியும் இருக்கிறது என்பதை வாழ்ந்துகாட்டிய ஹாக்கிங், 2018, மார்ச் 14 அன்று மறைந்தார்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

> முந்தைய அத்தியாயம்: நீல்ஸ் போர் | விஞ்ஞானிகள் - 19

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x