Published : 28 Jan 2025 07:22 PM
Last Updated : 28 Jan 2025 07:22 PM
சமூகக் காணொளித் தளமான யூடியூபில் ‘நடிப்பு’ என்கிற சொந்தத் திறமையைக் கொண்டு முன்னேறியவர் ஹரி பாஸ்கர். இவரது ‘ஜம்ப் கட்’ வீடியோக்களுக்கு கணிசமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தாமே எழுதி நடித்த சொந்தக் கதைகள் மூலம் யூடியூபில் கவனம் ஈர்த்து வந்த இவர், முதல் முறையாக முழு நீளத் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் ‘Mr.ஹவுஸ் கீப்பிங்'. எவ்வித விளம்பர ஆரவாரமும் இன்றி ரிலீஸ் ஆகி இளம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இனி படம் குறித்த மதிப்பீட்டுக்குச் செல்வோம்.
கல்லூரி மாணவரான ஹானஸ்ட் ராஜ் (ஹரி பாஸ்கர்), சக மாணவியான இசையிடம் (லாஸ்லியா) கல்லூரிக் காலம் முழுவதும் துரத்தித் துரத்தித் தன் காதலைச் சொல்கிறார். இசையோ தன்னைத் துரத்துபவன், ‘பெண்ணை ஒரு பிகர்’ ஆகமாக மட்டுமே பார்ப்பவன் என்கிற மெச்சூரிட்டியான புரிதலுடன் அவனைத் துளியும் சட்டை செய்யாமல் நிராகரித்துவிடுகிறார். கடுப்பாகும் ஹானஸ்ட் ராஜ், நண்பர்கள் அனைவரும் சூழ்திருக்கும் கல்லூரியின் கடைசி நாள் விழாவில் இசையைப் பார்த்து, “உன்னை விட அழகான பெண்ணின் மனதில் இடம் பிடித்து, உன்னைவிட அதிகமாக சம்பாதித்து வாழ்க்கையிலும் ஜெயித்துக் காட்டுகிறேன். அப்படி என்னால் செய்ய முடியாவிட்டால் வாழ்நாள் முழுக்க உன் வீட்டில் வேலைக்காரனாக இருக்கத் தயார்” என்று சவால்விடுகிறார்.
இளமையின் துடிப்பில் இதுபோல் சவால் விடுவதெல்லாம் ஈராயிரக் குழவிகளுக்கு சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவது மாதிரி. ஆனால், அடுத்து வரும் 2 வருடங்களில் இரண்டாவது காதலும் ஒருதலையாக அமைந்துபோக, இரண்டாம் முறையும் ஹானஸ்ட் பாடம் கற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக இசையின் வீட்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் ‘ஹவுஸ் கீப்பிங்’ வேலைக்குச் செல்கிறான் ஹானஸ்ட். அதன் பிறகு இருவருக்குமான புரிதல் என்னவாக இருந்தது, என்னமாதிரியான சிக்கல்கள் அணிவகுத்தன, வாழ்க்கையில் இவர்கள் இணைந்தார்களாக என்பது கதை.
ஒருவரிக் கதையை விரித்து எழுதப்பட்ட காதல் திரைக்கதைகள் கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைவு. அருண் ரவிச்சந்திரன் எழுதி, இயக்கியிருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதையில் தற்செயல் நிகழ்வுகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், 2கே மற்றும் ஜென்z தலைமுறையின் ‘பாய் பெஸ்டி’, ‘லிவ் இன் உறவு’ உள்ளிட்ட உறவுமுறை சார்ந்த அணுகுமுறைகள் படத்தில் சரியான விதத்தில் எடுத்தாளப்பட்டுள்ளது.
2கே தலைமுறையிலும் தற்குறியாக இருக்கும் ஒரு நகர்புற வெள்ளந்தி 2கே இளைஞனான ஹானஸ்ட் ராஜ் கதாபாத்திரம் திரைக்கதையில் முதன்மைபெறும் படிநிலைகளை இயக்குநர் சரியாகவே எழுதியிருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஹரி பாஸ்கர், தனக்கென உருவாக்கிக்கொண்ட பாணியில் சற்று மிகையாக நடித்தாலும் அக்காதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார்.
90களின் குழவியான சாரா தரும் யோசனைகள நம்புவது, ‘வீட்ல இருக்க அம்மா, அப்பா நம்மகிட்ட பேசமா நம்மள தவிக்கவிடும்போது நாம உணர்ற வலி, லவ் பிரேக்கப்பைவிட அதிகம்’ என்று இசையிடம் கூறுவது.. இறுதியில் வேலையை ராஜினிமா செய்துவிட்டு எடுக்கும் முடிவு என தனக்கான ஸ்கோரிங் காட்சிகளில் நடிப்பில் அடக்கி வாசித்து அப்ளாஸ்களை அள்ளிக்கொள்கிறார் ஹரி பாஸ்கர். தமிழ் சினிமாவில் மக்களின் அபிமானம் பெற்று கதாநாயகன் ஆவது அத்தனை எளிதல்ல. ஆனால், ஹரி பாஸ்கர், பார்வையாளர்களின் இரக்கத்தை சம்பாதித்துகொள்ளும் ஹானஸ்ட் ராஜ் ஆக மனதில் தங்கிவிடுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கல்லூரியில் படித்த காலத்திலும் பின்னர் இரண்டாம் முறை அலுவலகத்திலும் ஹானஸ்டால் இன்னலுக்கு உள்ளானாலும் வாழ்க்கையில் எந்தவிதத்திலும் தனது வளர்ச்சியில் காதல் பாதிக்காத வண்ணம் அதை கட்ஸ் உடன் ஹேண்டில் செய்யும் வெற்றிகரமான பெண்ணாக உயர்ந்து நிற்கும் இசை கதாபாத்திரம், இன்றைய தன்னம்பிக்கைப் பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கும் விதம் அபாரம்! அப்படிப்பட்ட ‘இசை’ கதாபாத்திரத்தில் அவ்வளவு அழகாவும் நளினமாகவும் வரும் லாஸ்லியாவின் நடிப்பு, அவருக்கான புதிய பட வாய்ப்புகளை உறுதியாக கொண்டு வந்து சேர்க்கும். அந்த அளவுக்கு கன்வின்சிங் ஆன நடிப்பைக் கொடுத்து, கதாபாத்திரமாக நம்மை உணர வைக்கிறார்.
இன்றைய உறவுகள் பற்றிய போதிய புரிதலுக்கு நடுவில் நமது பண்பாடும் கலாச்சாரமும் தொலைக்காமல் வைத்திருக்கும் குடும்ப அமைப்பும் அதற்குள் நிறைந்திருக்கும் நிபந்தனையற்ற பாசம், சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட முகிழ்த்துப் பெருகும் மகிழ்ச்சி, கொண்டாட்டண்டம், சகிப்புத்தன்மை, குடும்பத்துக்கான உழைப்பு என பல அம்சங்களை, மேற்கத்திய உலகம் இங்கே இறக்குமதி செய்திருக்கும் ‘லிவ் இன்’ உடன் ஒப்பிட்டு அதை காலி செய்திருக்கும் அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரனுக்கு நல்வரவு கூறலாம். அதேபோல், இதுபோன்ற ஒரு தற்கால உறவுகளில் இருக்கும் போலித்தனத்தையும் அதுவொரு மாயை என்பதையும் பட்டவர்த்தனப்படுத்தும் இந்தப் படத்தின் கதை சொல்லப்படவேண்டைய ஒன்று என்பதைப் புரிந்துகொண்டு அதைத் தயாரித்திருக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் என். ராமசாமி - நிதின் மனோகர் ஆகிய இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
ஹரி பாஸ்கரின் அப்பாவாக, இளவரசு, அவருடைய அம்மாவாக உமா ராமச்சந்திரன், அவருடைய தந்தையாக வரும் பெண் ஆகியோர் அவ்வளவு அருமையாகப் பொருந்தி, தரமான நடிப்பால் நம்மை அவர்களுடைய குடும்பத்தில் ஒருவராக உணரவைக்கிறார்கள். லாஸ்லியாவின் நிறுவனத்தில் அவரது சக ஊழியரும் ஆண் நண்பராக வருபவர் என்று நடிகர் தேர்வு மிகுந்த தேர்ச்சியுடன் இருக்கிறது.
குலோத்துங்க வர்மனின் ஒளிப்பதிவு சென்னை, புறநகர் சென்னையின் நிலவெளிக் காட்சிகளிலும் உள்ளரங்கக் காட்சிகளிலும் காதலின் மென்மையையும் குடும்பத்தின் இணைவையும் ஒளியிலும் காட்சி மொழியிலும் இழைய விட்டிருக்கிறது. ஓஷோ வெங்கட்டின் இசையைப் போலவே ராமசுப்புவின் கச்சிதமான வெட்டுக்களும் (படத்தொகுப்பு) படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கின்றன.
படத்தில் குறை என்று பார்த்தால், ஐடி கம்பெனியில் இருப்பவர்களுக்கும் காதலுக்காக தரை லோக்கலாக இறங்கி அடித்துக் கொள்வார்கள் என்பதைப் போல அமைக்கப்பட்டுள்ள காட்சியை வேறுமாதிரி மாற்றி அமைத்திருக்கலாம். அந்தக் காட்சியின் இறுதியில் காவல் நிலையம் காட்டப்படுவதால், அதுவும் கூட கதையோட்டத்தில் தாக்குப் பிடிக்கிறது.
காதல் பற்றிய புரிதலில் போதாமையுடன் வாழும் ஒரு 2கே கிட் இளைஞனுக்கும் அவனது தலைமுறையைச் சேர்ந்த பெண் என்றாலும் எது காதல் என்பதில் தெளிவுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டம் நோக்கி நகரும் பெண்ணுக்குமான மோதலையும் முரண்களையும் நிறைவான பொழுதுபோக்குத் தன்மையுடன் நம்மை ஈர்க்கும் இந்த மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங், இளைஞர்களின் மனதை துடைத்து தூய்மை செய்வதில் கில்லாடியாக இருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment