Last Updated : 17 Jul, 2018 10:30 AM

 

Published : 17 Jul 2018 10:30 AM
Last Updated : 17 Jul 2018 10:30 AM

புதுத் தொழில் பழகு 13: மெத்து மெத்தான தொழில்

 

சொ

ல் புதிது, பொருள் புதிது - பாரதியின் வரிகள். அதுபோல நம் செயல்கள் ஒவ்வொன்றிலும் புதுமை அவசியம். இது தொழிலுக்கும் பொருந்தும். ஏற்கெனவே உள்ள மரபான தொழில்களிலிருந்து வேறுபட்டு யோசிப்பவர்கள்தாம் வெற்றிபெற்ற தொழில்முனைவோர் ஆவார்கள். அப்படித் தனித்துச் சிந்தித்தவர்தான் செந்தில்நாதன். அவர் தேர்ந்தெடுத்த தொழில் குழந்தைகளுக்கான படுக்கை தயாரிப்பது.

குழந்தைகளுக்கான சோப், ஷாம்பு, துண்டு போன்றவை விற்கப் பிரத்யேகமான கடைகள் இன்று வந்துவிட்டன. இந்தப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிலும் மிகப் பெரிய அளவில் வளர்ந்திருக்கிறது. இந்தத் தொழிலுக்குள் பல நிறுவனங்கள் நுழைந்துள்ளன. ஆனால், தரமான பொருட்கள் கிடைப்பதில்லை. இந்தச் சூழலைப் பயன்படுத்தி அந்தத் தயாரிப்புத் தொழிலில் இறங்கியுள்ளார் செந்தில்நாதன்.

சேய்க்குத் தாயின் அன்பு

தொழில் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்ற செந்தில், முதலில் இந்தத் தொழிலை ஆய்வுசெய்துள்ளார். குழந்தைகளுக்கான பொருள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் பணிக்குச் சேர்ந்து அனுபவம் பெற்றுள்ளார். அந்த அனுபவம் தந்த நம்பிக்கையில் இந்தத் தொழிலைத் தொடங்கியுள்ளார்.

“ஒரு பத்திருபது வருஷமாகத்தான் குழந்தைகளுக்கான பொருட்களுக்குத் தனிக் கடைகள் வந்துள்ளன. அதுக்கு முன்பு குழந்தைகளுக்கான பொருட்களுக்குப் பிரத்யேகமான கடைகள் கிடையாது. சில பொருட்கள் மருந்துக் கடைகளில் கிடைக்கும். சில பொருட்கள் துணிக் கடைகளில் கிடைக்கும். குழந்தைகளுக்கான சோப்பு, பவுடர் வாங்குவதற்கு வேறு ஒரு கடைக்குப் போக வேண்டும். இப்போது இது எல்லாம் சேர்ந்து ஒரே கடையில் கிடைக்கிறது” என்னும் செந்தில் குழந்தைகளுக்கான பொருட்கள் விற்கும் கடையும் ‘க்யூட்டி பேபி (Cutie Baby)’ என்ற பெயரில் தொடங்கியுள்ளார்.

17CH_Thozilகூடுதல் அக்கறை

“பொதுவாக இந்தத் தொழிலில் இருக்கும் பெரிய நிறுவனங்களின் பொருட்கள் மீது நம்பிக்கை குறைவாக இருக்கிறது. குழந்தைகளுக்கான படுக்கையைப் பொறுத்தமட்டில் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்வது அவசியம். படுக்கையில் பயன்படுத்தப்படும் பஞ்சின் தரத்தைப் பொறுத்து குழந்தைகளுக்குத் தோல் வியாதி வரும் ஆபத்தும் உள்ளது. இந்த இடத்தில்தான் நாங்கள் வேலைசெய்கிறோம். உள்ளூர்த் தயாரிப்பு என்பதால் நாங்கள் தரத்தைச் சமரசம்செய்துகொள்வதில்லை.

எங்களுக்குச் சொந்தமாகக் கடையும் இருக்கிறது. அதனால் எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தரமான பொருளைத் தர வேண்டும் என்ற அவசியமும் எங்களுக்குள்ளது. மேலும் குழந்தை பிறந்த உடன் தூக்கிச் செல்வதற்குப் படுக்கை தேவை. அந்த முதல் பொருளே தரமாகக் கொடுக்க வேண்டும் என்ற அக்கறையும் எங்களுக்குள்ளது” என்கிறார் செந்தில்.

குழந்தைகளுக்கான பொம்மைகளையும் செந்தில் தயாரித்து வருகிறார். பொதுவாக, இப்போது சீனாவில் இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளே அதிகமாகச் சந்தையில் கிடைக்கின்றன. இதற்கு மாற்றாக இங்கேயே பொம்மைகள் தயாரிக்கலாம் என முடிவெடுத்து, அது குறித்து விசாரித்து அறிந்து அதையும் தயாரித்து வருகிறார்.

பொம்மைகள், குழந்தைகளுக்கான படுக்கை உள்பட 20 பொருட்களைத் தயாரித்து ‘மம்ஸ் லவ்’ என்ற பிராண்ட் பெயரில் இவர் விற்றுவருகிறார். தொடக்கத்தில் சந்தையில் தாக்குப்பிடிப்பதில் சில சவால்கள் இருந்தாலும், தரத்தின் வழியே வெற்றியைத் தொட்டுவிட முடியும் என நம்பியிருக்கிறார் செந்தில். அது இப்போது அவருக்கு வசமாகியிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x