Last Updated : 17 Jul, 2018 10:30 AM

 

Published : 17 Jul 2018 10:30 AM
Last Updated : 17 Jul 2018 10:30 AM

அக்கினிக்குஞ்சு 08: கல்வியே ஆற்றல் மிகு ஆயுதம்!

‘வெள்ளையினத்தவரின் ஆதிக்கத்தை மட்டுமல்ல; கறுப்பினத்தவரின் ஆதிக்கத்தையும் ஏற்க மாட்டேன்’ என்ற பிரகடனத்துடன் சமத்துவத்தை நிலைநாட்டப் பாடுபட்ட நிறவெறி எதிர்ப்புப் போராளி நெல்சன் மண்டேலா. தன்னுடைய தேசத்தின் விடுதலை மட்டுமின்றி நிறம், இனம், பாலின பேதம் கடந்த மனிதகுல விடுதலையைத் தன் வாழ்நாள் கனவாகக் கொண்டவர்.

அவர் பிறந்த தினமான ஜூலை 18, ‘மண்டேலா தினம்’ என்ற பெயரில் உலக விடுதலையைக் குறிக்கும் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அது மட்டுமின்றி தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான மண்டேலாவுக்கு நாளை 100-வது பிறந்த நாள்.

நெல்சன் மண்டேலா ஆற்றிய அரசியல் உரைவீச்சுகளில், An ideal I am prepared to die for, The 100 days speech உள்ளிட்டவை உலகப் புகழ்வாய்ந்தவை. அவை தமிழ் வாசகர்களுக்கும் கொண்டுசேர்க்கப்பட்டிருக்கின்றன. மறுபுறம் ‘கல்வியே உலகை மாற்ற வல்ல சக்தி வாய்ந்த ஆயுதம்!’ என்ற சிந்தனையை முன்வைத்து தென் ஆப்பிரிக்க மக்களுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியைக் கொண்டு சேர்க்கத் தொடர்ந்து செயலாற்றியவர் மண்டேலா.

தொலைக்காட்சியில் கல்வி

‘கல்விதான் தனிமனித வளர்ச்சிக்கான பெரிய உந்துசக்தி. கல்வி மூலமாகத்தான் ஒரு விவசாயியின் மகள் மருத்துவராக முடியும், ஒரு சுரங்கத் தொழிலாளியின் மகன் அந்தச் சுரங்கத்துக்கே முதலாளியாக முடியும், ஒரு விவசாயக் கூலியின் குழந்தை பெரும் தேசத்துக்கே அதிபராகவும் ஆக முடியும்’ என்றார் மண்டேலா. கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் சமூக நீதியை நிலைநாட்ட 1999-ல் ‘நெல்சன் மண்டேலா அறக்கட்டளை’யை நிறுவினார்.

கல்வி, சுகாதாரத்தில் பின்தங்கிய நாடாக உலக அரங்கில் பார்க்கப்படும் ஆப்பிரிக்காவின் கல்வித் தரத்தை உயர்த்த Mindset Network என்ற கல்விச் செயற்கைக்கோள் திட்டத்தை 2003-ல் அறிமுகப்படுத்தினார். வீடுதோறும் தொலைக்காட்சி வழியாகக் கணிதம், அறிவியல், ஆங்கிலம் மொழியைப் பயிற்றுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அவருக்கு ஆப்பிரிக்காவின் பெருமைவாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான ‘விட்வாட்டர்ஸ்ராண்ட்’ (Witwatersrand) 1991-ல் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. கல்வியும் அரசியலும் எதிர் எதிர் துருவங்கள் என்பது எத்தனை தவறான பார்வை என்பதையும், கல்வியின் மூலம் அரசியலைத் தூய்மைப்படுத்த முடியும் என்பதையும் அன்று அவர் ஆற்றிய ஏற்புரை உலகுக்கு உணர்த்தியது. அது மட்டுமின்றி தேசத்தின் மறைக்கப்பட்ட வரலாற்றை மீட்டெடுப்பதிலும் உன்னதமான உலகைக் கட்டமைப்பதிலும் ஒரு கல்வி நிறுவனம் ஆற்றக்கூடிய மகத்தான பங்களிப்பைச் சுட்டிக்காட்டியது. அதன் சுருக்கம்:

கல்வியும் அரசியலும்

முரண்பாடுகளை ஊக்குவிக்கும் சமூகக் கட்டுமானம் எங்கெல்லாம் நிலவுகிறதோ, எங்கெல்லாம் வன்முறை ஊக்குவிக்கப்படுகிறதோ, முரண்பாடுகளே அன்றாடமாயிருக்கும் சூழ்நிலை எங்கு இருக்கிறதோ அங்கே எந்த நிறுவனமும் - குறிப்பாக ஒரு கல்வி நிறுவனம் செயல்படவே முடியாது. அதிலும் நிறவெறி பிடித்தாட்டும் சமூக அமைப்பில் உண்மையை விழையும் எந்த நிறுவனமும் செழித்தோங்க முடியாது.

இதற்கிடையில் நிறவெறி ஒடுக்குமுறையை எதிர்த்து நின்று அனைவருக்கும் சுதந்திரமான கல்வியை உறுதிப்படுத்துவதிலும் தரம் வாய்ந்த கல்வியை அளிப்பதிலும் இந்தப் பல்கலைக்கழகம் தடம் பதித்திருக்கிறது. இதுபோன்ற கல்வி நிறுவனம்தான் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சிக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய விழுமியங்களைப் பகிர வேண்டும்.

எங்களுடைய கட்சியோடு அமைப்புரீதியாக இந்தப் பல்கலைக்கழகம் தொடர்பு வைத்திருப்பதாகவோ, வைத்திருக்க வேண்டுமென்றோ நான் சொல்ல வரவில்லை. கல்வி நிறுவனங்களின் சுயேச்சைத்தன்மையை நாங்கள் மதிக்கிறோம். அத்துடன் அரசியல் அமைப்புகள், அரசு அமைப்புகளைச் சாராமல் சுதந்திரமாக அவை செயல்பட வேண்டுமென்று கருதுகிறோம். நமது காலகட்டத்தின் முக்கியமான பாடமாக இது இருக்க வேண்டும்.

17CH_Autobiographyகூடிய விரைவில் விடுதலை

ஜனநாயகம், அமைதி, சமத்துவம், நிறவெறி மறுப்பு, பாலினச் சமத்துவம் போன்ற உலகளாவிய மதிப்பீடுகளை நாம் பரஸ்பரம் பகிர்ந்துகொள்கிறோம். அது, இயற்கையாகவே நம்மிடையே கூட்டுறவை உருவாக்குவதோடு, நிறவெறிக்கு எதிரான கூட்டாளிகளாகவும் நம்மை ஆக்குகிறது. அத்துடன் ஜனநாயக அடித்தளத்தை உருவாக்குவதற்கு ஆதாரமான அமைதியைப் பாதுகாப்பதற்கும் நாம் சேர்ந்து பணியாற்ற வேண்டிய அவசியமுள்ளது.

வருங்காலத்தில் சாத்தியமாகக்கூடிய கூட்டு வேலைகள் குறித்து விவரிப்பதற்கான இடமல்ல இது. பொருளாதாரம், ஆரோக்கியம், நில உரிமைகள் சார்ந்து எங்கள் கொள்கைகளை உருவாக்குவதில் ஏற்கெனவே எங்கள் கட்சியினருக்கு உங்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிஞர்கள் உதவியிருக்கின்றனர். வளாகத்துக்கு வெளியேயும் உங்கள் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிஞர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகளிலிருந்து மிகுந்த பலன்களைப் பெற்றுள்ளோம்.

குறிப்பாக, இந்த நாட்டின் வரலாறு குறித்த ஐரோப்பிய நோக்கைக் களைந்து, மறைக்கப்பட்ட நமது போராட்டத்தின் வரலாற்றின் மீது வெளிச்சம் பாய்ச்சுவதற்கும், இதுவரை ஏட்டில் ஏறாத எளிய மக்களின் வரலாற்றைத் தெரிந்துகொள்வதற்கும் அவர்கள் உதவியிருக்கின்றனர். முன்பு எழுதப்பட்ட நூல்களில் வெள்ளையினத்தவரின் நாடுபிடித்தலுக்குத் தடைகளாகவே கறுப்பினத்தவர் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

நம் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றிய அற்புதமான மாணவர்களையும் மாணவிகளையும் இந்தப் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. மற்றவர்கள் என்றோ ஒரு நாள் சுதந்திரமாக வாழ அந்த அற்புதமான மனிதர்கள் தங்களுடைய இன்னுயிரை நீத்திருக்கிறார்கள். அவர்கள் கனவு கண்ட விடுதலை கூடிய விரைவில் வந்தே தீரும்.

நெல்சன் ஆன மண்டேலா

1925 - பெற்றோரால் சூட்டப்பட்ட ‘ரொலிஹ்லஹ்லா மண்டேலா’ என்ற பெயருக்கு முன்னால் ‘நெல்சன்’ என்ற பெயரை மண்டேலாவின் தொடக்கப் பள்ளி ஆசிரியர் சேர்த்தார்.

1944 - ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியை நிறுவினார்

1964 - தென் ஆப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய இனவெறியை எதிர்த்ததால் கைதுசெய்யப்பட்டு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார்

1993- நோபல் அமைதி பரிசால் கவுரவிக்கப்பட்டார்

1994 - தென் ஆப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரானார்

1994- Long Walk to Freedom சுயசரிதை வெளியானது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x