Published : 08 Jan 2025 06:14 AM
Last Updated : 08 Jan 2025 06:14 AM
பார்த்ததும் படித்ததும்: கல்விச் சிந்தனைகள், ச.மாடசாமி
எதிர் வெளியீடு, தொடர்புக்கு: 9942511302
சாதி, மதம், வன்முறை எனப் பாடத்தைத் தவிர்த்து மாணவர்களின் போக்கைக் கெடுக்கும் மற்ற விஷயங்கள் வகுப்பு அறைக்குள் நுழைந்துவிட்டன. இவற்றை மாணவர் களிடம் இருந்தும், கல்விக்கூடங்களில் இருந்தும் அப்புறப்படுத்த வேண்டும் என்பதை ஓய்வு பெற்ற பேராசிரியரும், கல்வியாளருமான ச. மாடசாமி இந்நூலில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இப்படி கல்வி சார்ந்து அவர் எழுதியிருக்கும் 15 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியாகியுள்ளது.
சமகாலக் கல்விச் சிந்தனைகள், சு.உமா மகேஸ்வரி
நாற்கரம், தொடர்புக்கு: 9551065500
அரசுப் பள்ளி ஆசிரியரும், கல்வித் துறைச் செயல்பாட்டாளாருமான சு. உமா மகேஸ்வரியின் கல்வி நூல்களின் புதுவரவு ‘சமகாலக் கல்விச் சிந்தனைகள்’. மிகச்சிறிய கட்டுரைகள் கொண்ட, குறைந்த பக்கங்களுடைய நூல் இது என்றாலும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை, கல்வி முறையின் எதார்த்தத்தை எளிய முறையில் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
மக்கள் மயமாகும் கல்வி, வே.வசந்திதேவி
எதிர் வெளியீடு,
தொடர்புக்கு: 9894875084 / 9942511302
2022,2023ஆம் ஆண்டுகளில் எழுந்த கல்வி சார்ந்த பிரச்சினைகளைப் பற்றி கல்வியாளர், முன்னாள் துணை வேந்தர் வே. வசந்திதேவி எழுதி வெவ்வேறு பத்திரிகைகளில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். கற்பித்தல் முறைகள், கல்வி மொழி, தேர்வு முறைகள் அனைத்தும் வர்க்க-சாதியத் தன்மை கொண்டவை என்பதை சுட்டிக்காட்டி சமத்துவம், சமூக நீதி, மதச்சார்பின்மை ஆகிய ஆதார விழுமியங்களை சமரசமின்றி நிறுவும் கல்வியை, மனித நேயக் கல்வியை நாட்டின் அனைத்துக் குழந்தைகளுக்கும் பிறப்புரிமை ஆக்க வேண்டும் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.
சாதீ: பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை, முனைவர் சீமான் இளையராஜா
திராவிடன் ஸ்டாக், தொடர்புக்கு: 9092787854
சாதீயின் தோற்றம் அதன் நீட்சி அதனால் மானுடம் படும் பாடுகள், கேடுகள் என நீண்டு, அச்சாதியெனும் நச்சுக்காற்று கல்விக்கூடங்களில் நுழைந்து எப்படியெல்லாம் இன்னல் தருகிறது என்பதை ஆய்வுகளோடு வழங்கி இருக்கிறார் நூலாசிரியர் சீமான் இளையராஜா. இந்நிலை மாறி கல்விக்கூடங்களில் சமத்துவம் நிலவ வேண்டும் என்பதை இந்நூல் எடுத்துரைக்கிறது.
தமிழகத்தில் ஆசிரியர்களும் மாணாக்கர்களும்: தமிழ்வழிப் பள்ளிகள், கல்வி நிலை,மேற்கத்தியத் தாக்கம் மற்றும் புதுப் பரிமாணங்கள், (1567-1887); எஸ். ஜெயசீல ஸ்டீபன்,
தமிழில்: கி. இளங்கோவன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், தொடர்புக்கு: 044 26258410
காலனிய காலத்தில் தமிழ்வழிப் பள்ளிகள் இயங்குவதில் படிப்படியாக தேக்கம் ஏற்பட்டு எவ்வாறு வீழ்ச்சியடையத் தொடங்கின என்பது பற்றியும், ஐரோப்பியரின் வருகையால் தமிழகத்தில் காலனிய காலக் கல்வி கட்டமைக்கப்பட்டது பற்றியும் விவரிக்கப்பட்டுள்ளது அக்காலத்தில் மேற்கத்திய முறைப்படி பல்வேறு பாடங்கள் பாடத்திட்டத்தில் அறிமுகப் படுத்தியதைப் பகுப்பாய்வு செய்து வரலாற்றில் கல்வி முறை கண்ட மாற்றங்கள் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
இயர்புக் 2025 இந்து தமிழ் திசை,
தொடர்புக்கு: 7401296562 / 7401329402
யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கக்கூடிய ‘இந்து தமிழ் இயர்புக் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் வெளியாகிறது. இந்த ஆண்டுக்கான இயர்புக்கில் துறைசார் நிபுணர்களின் சிறப்புக் கட்டுரைகள், 2024இல் கவனம்பெற்ற 40 விஷயங்களுக்கான விரிவான விளக்கங்கள், முக்கிய நிகழ்வுகள், ஆளுமைகள், அறிவியல் கேள்வி-பதில் தொகுப்பு, சுவாரசியமான ஒரு பக்கக் கட்டுரைகள், தமிழின் முக்கிய நூல்களும் ஆசிரியர்களும் ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment