Published : 07 Jan 2025 05:29 PM
Last Updated : 07 Jan 2025 05:29 PM

வேண்டும் வரம் அருளும் சுயம்பு மாவூற்று வேலப்பர்!

பக்தர்கள் வேண்டும் வரம் அருளும் சுயம்பு மாவூற்று வேலப்பர், வருசநாடு மேற்குத் தொடர்ச்சி மலையின் குன்றில் மேல் அருள்பாலிக்கிறார்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், தெப்பம்பட்டி அருகிலுள்ள சுயம்பு மாவூற்று வேலப்பர் கோயில், வருசநாடு மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் ஓர் குன்றின் மேல் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஆதி காலத்தில் இங்குள்ள மலைவாழ் மக்கள் உணவுக்காக இருவழி மரக்குச்சியின் மூலம் மண்ணில் வள்ளிக்கிழங்கு தோண்டும்போது, அந்த மரக்குச்சி இரும்பாக மாறி ரத்தம், பால் பொங்கியது.

அருகிலுள்ள மருத மரம், மாமரத்துக்கு அடியில் ஊற்றுநீர் பொங்கியது. இந்த அதிசயத்தை கண்டவுடன் வள்ளிக்கிழங்கை மேலும் தோண்டியபோது, கிழங்குக்கு கீழ் சுயம்பு மாவூற்று வேலப்பர் காட்சியளித்தார். பின்னர், மலைவாழ் மக்கள் அருகிலுள்ள கண்டமனூர் ஜமீன்தாரிடம் தகவல் தெரிவித்தனர். அதற்குப் பின்னர், இவ்விடத்திலேயே சுயம்பு மாவூற்று வேலப்பருக்கு கோயில் கட்டி வழிபட்டனர்.

இங்கு மலைவாழ் மக்களே பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் செய்து வருகின்றனர். சுயம்பு மாவூற்று வேலப்பரை முதன்முதலில் கண்டுபிடித்த அந்த மரக்கட்டையையும் மூலவர் அருகிலேயே வைத்து பூஜை செய்து வருகின்றனர். இக்கோயிலில் சித்தர்கள் தவம் புரிந்த குகைகளும் உள்ளன. கோயில் அடிவாரத்தில் காவல் தெய்வமாக கருப்பராயர் சுவாமி அருள் பாலிக்கிறார். மேலும், கோயிலில் அபிஷேகம் செய்து, அந்த மரக்கட்டையை கையில் பிடித்து வேண்டுதல் செய்தால் வேண்டிய வரம் கொடுப்பார் வேலப்பர்.

கருப்பராயர் சந்நிதி.

குழந்தை வரம் வேண்டியும், திரு மணத்தடை அகலவும், தொழில் விருத்தியடையவும், தீராத நோய் குணமடையவும் வேண்டுகின்றனர். மூலிகை கிழங்கை வேலப்பருக்கு பூஜை செய்து சாப்பிட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

அடிவாரப் பகுதியில் உள்ள கருப்பராயருக்கு கிடா வெட்டி பூஜை செய்கின்றனர். வேலப்பருக்கு அபிஷேகம் செய்த பின், அடிவாரத்திலுள்ள கருப்பராயருக்கு மாலை சாற்றுகின்றனர். மேலும், இக்கோயிலில் வற்றாத ஊற்றுநீரில் 48 நாட்களுக்கு குளித்தால் தோல் சம்பந்தமான நோய்கள் குணமடையும்.

தினமும் காலை 7 முதல் 8 மணி வரை, மாலையில் 4 முதல் 5 மணி வரை அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. கோயில் நடை காலை 7 முதல் நண்பகல் 12 மணி வரையும், பிற்பகல் 3 முதல் 6 மணி வரையும் திறந்திருக்கும். மாதந்தோறும் அமாவாசை, கார்த்திகை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வந்து வழிபடுகின்றனர். மேலும், ஆடி அமாவாசை, தை அமாவாசை, தைப்பூசம், சித்திரை பெருந்திருவிழா சிறப்புற நடைபெறுகிறது.

வற்றாத மாவூற்று.

திருவிழாக்களின்போது பக்தர்கள் காவடி எடுத்து, அலகு குத்தி வழிபடுகின்றனர். இந்துசமய அறநிலையத் துறைக்குட்பட்ட கோயில் என்பதால், தினமும் நண்பகல் 12 மணியளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் படுகிறது. இக்கோயில் மதுரையிலிருந்து 79 கி.மீ. தொலைவிலும், தேனியில் இருந்து 39 கி.மீ. தொலைவிலும், மதுரை-தேனி சாலையில் ஆண்டிபட்டியிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x