Last Updated : 07 Jan, 2025 03:55 PM

 

Published : 07 Jan 2025 03:55 PM
Last Updated : 07 Jan 2025 03:55 PM

கேல் ரத்னா விருதுகள் முதல் சட்டப்பேரவை முதல் கூட்டம் வரை: சேதி தெரியுமா? @ ஜன. 1-7

சேதி தெரியுமா?

டிச.31: கேரளத்தின் பாலக்காட்டைச் சேர்ந்த செவிலியரான நிமிஷா பிரியாவுக்கு 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்புக்கு ஏமன் நாட்டு அதிபர் ரஷாத் அல்-அலிமி அனுமதி வழங்கினார்.

ஜன.1: சென்னை, மதுரை, திருச்சி உள்பட 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகளை விரிவாக்கம் செய்யவும், கன்னியாகுமரி உள்பட 14 நகராட்சிகள், 25 பேரூராட்சிகளை உருவாக்குவதற்கான மறுசீரமைப்புப் பணிகளையும் தமிழ்நாடு அரசு தொடங்கியது.

ஜன.1: 2024இல் தமிழ்நாட்டில் மூளைச் சாவு அடைந்த 268 பேரிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 1,500 பேருக்கு மறுவாழ்வு கிடைத்ததாக மாநில உறுப்பு மாற்று ஆணையத்தின் உறுப்பினர் செயலர் என். கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜன.1: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஃபிடே உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் மகளிர் பிரிவில் இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர். வைஷாலி வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஜன.1: டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 907 புள்ளிகள் குவித்து இந்திய வீரர் ஜஸ்பிரீத் பும்ரா முதலிடத்தைப் பிடித்தார். இந்தியப் பந்துவீச்சாளர்களில் 2016இல் ரவிச்சந்திரன் அஸ்வின் 904 புள்ளிகள் குவித்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.

ஜன. 2: சமூக வலைதளங்களில் பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்தைப் பதிவிட்ட வழக்கில் பாஜகவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகருக்கு விதிக்கப்பட்ட ஒரு மாதச் சிறைத் தண்டனையை உறுதிசெய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜன.2: உயரிய விருதான கேல் ரத்னா விருது தமிழகத்தைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ், துப்பாக்கி சுடுதல் வீரர் மனு பாகர், இந்திய ஆண்கள் ஹாக்கி அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா ஒலிம்பிக் வீரர் பிரவீன் குமார் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

ஜன.2: தமிழ்நாட்டைச் சேர்ந்த துளசிமதி முருகேசன் (பாரா தடகளம்), நித்யஸ்ரீ (பாரா பாட்மிண்டன்), மனிஷா ராமதாஸ் (பாரா பாட்மிண்டன்) உள்பட 32 பேர் அர்ஜூனா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.

ஜன.2: நீட் தேர்வு தொடர்பாகச் சிறப்புக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்தது.

ஜன.2: அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் விவகாரத்தை அரசியல் ஆக்குவது ஏன் என்று அரசியல் கட்சியினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஜன.2: போபால் யூனியன் கார்பைடு பூச்சிக் கொல்லி ஆலையிலிருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றப்பட்டன. 1984இல் போபால் விஷவாயு விபத்தில் 5,479 பேர் உயிரிழந்தனர்.

ஜன.3: தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகனுக்குச் சொந்தமான காட்பாடி வீட்டிலும், அவருடைய மகனும் திமுக எம்.பி.யுமான கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரி உள்பட 4 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.

ஜன.3: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் 17ஆம் நூற்றாண்டில் முகலாயர்களால் கட்டப்பட்ட ‘முபாரக் மன்சில்’ எனப்படும் அரண்மனை புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது.

ஜன.4: தமிழ்நாட்டில் பரவிவரும் ஸ்கரப் டைபஸ் தொற்றால் இதுவரை 5,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜன.5: விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாட்டில் அக்கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ.சண்முகம் தேர்வு செய்யப்பட்டார்.

ஜன.6: இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

ஜன.6: 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆலன் பார்டர் - கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்கிற விகிதத்தில் கைப்பற்றியது.

ஜன.6: சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கம் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் ஜனவரி 5ஆம் தேதி அன்று தொடங்கியது.

ஜன.6: சட்டப்பேரவையின் இந்த ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என் ரவி தனது உரைக்கு முன்பாக தேசிய கீதம் பாடப்படவில்லை என்கிற கருத்தை வலியுறுத்தி அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் அவையில் இருந்து வெளியேறினார்.

ஜன.6: கனடா நாடாளுமன்றத்துல் லிபரல் கட்சி பெரும்பான்மையை இழந்ததால் பிரதமர் பதவியிலிருந்து ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்தார்.

ஜன.7: சென்னை தலைமைச் செயலகத்தில் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட வாக்காளர் இறுதிப்பட்டியல்படி 6 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 950 வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். தமிழ்நாட்டில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதியில் 6,90,958 வாக்காளர்களும், குறைந்தபட்சமாக நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 1,76,505 வாக்காளர்களும் உள்ளதாக அவர் அறிவித்தார்.

ஜன.7: திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இடிபாடுகளில் சிக்கி 126 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

ஜன.7: டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக 70 தொகுதிகளுக்கு பிப்ரவரி 5இல் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் பிப்.5இல் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

தொகுப்பு: மிது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon