Published : 06 Jan 2025 04:18 PM
Last Updated : 06 Jan 2025 04:18 PM

மார்கழி மாத கோலத்தின் நடுவில் பூசணிப் பூவுக்கு இடம் ஏன்?

மார்கழி மாதத்தில் அதிகாலை பெண்கள் எழுந்து மா கோலம் இடுவதும், கோலத்தின் நடுவில் பூசணிப் பூக்கள் பசுஞ்சாணத்தில் நடுவதும் இன்றளவும் தொடரும் நிகழ்வாக உள்ளது.

மார்கழி மாதம் முழுவதும் கன்னிப்பெண்கள் அதிகாலையில் நீராடி, குளக்கரையில் இருக்கும் விநாயகரை வழிபடுகின்றனர். பெரும்பாலான கிராமங்களில் மார்கழி மாதத்தில் பெண்கள் நீராடி, ஒரு குடம் சுத்தமான தண்ணீர் எடுத்து வந்து விநாயகர் மீது ஊற்றி வழிபடுகின்றனர். தண்ணீர் தீட்டு பெறாமல் இருக்க எண்ணி, பெண்கள் ஊற்றுநீர் அல்லது குழாயில் பிடிக்கின்றனர்.

வழிபாடு முடிந்த பின் வீட்டுக்கு வந்து அரிசி மாக்கோலம் அல்லது வண்ணப்பொடிகளில் கோலம் போடுகின்றனர். பசுஞ்சாணத்தை கூம்பு வடிவில் பிடித்து கோலத்தின் நடுவே வைக்கின்றனர். அதனை விநாயகராக மக்கள் கருதுகின்றனர். இம்மாதிரியான விநாயகர் மற்ற விசேஷ நாட்களில் பசுஞ்சாணம் அல்லது மஞ்சள் பொடியில் பிடித்து வழிபடுவது மரபாக உள்ளது. மார்கழி மாதத்தில் வைக்கப்படும் பசுஞ்சாணத்தாலான விநாயகருக்கு மஞ்சள், குங்குமம் மற்றும் சந்தனத்தால் பொட்டு வைத்து அலங்கரிப்பதும் உண்டு. பின்னர், பூசணிப்பூவை கோலத்தின் நடுவே உள்ள பசுஞ்சாணத்தின் உச்சியில் வைப்பதும் மரபாக உள்ளது.

இதுகுறித்து மதுரை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் மீ.மருதுபாண்டியன் கூறியதாவது: மார்கழி மாதத்தில் அதிகாலையில் பெண்கள் எழுந்து வீட்டு வாசலில் மாக்கோலமும், அதில் பசுஞ்சாணத்தில் பூசணிப்பூ வைப்பதும் தொன்றுதொட்டு தமிழர்களின் வாழ்வியலோடு இணைந்துள்ளது. ஒவ்வொரு தினமும், கோலத்தின் மீது வைக்கப்பட்ட பூசணிப்பூ வாடி வதங்கிய பின், மாலையில் பசுஞ்சாணத்தை மட்டும் சேகரித்து வீட்டின் ஒரு பகுதியில் வைப்பதுண்டு. கிராமப்புறங்களில் சேகரித்த பசுஞ்சாணத்தை வீட்டின் வெளிப்புறச் சுவர்களில் எருவாகத் தட்டி காய வைப்பர். மார்கழி மாத இறுதியில் சேகரித்த அனைத்து பசுஞ்சாணத்தையும் ஒன்றுசேர்த்து எரித்து போகிப் பண்டிகையாகக் கொண்டாடுகின்றனர்.

மார்கழி மாதக் கோலங்களில் ஏன் பூசணிப் பூ வைக்கும் மரபு வந்தது என்பது ஆய்வுக்குட்பட்டது. மற்ற காய்கறிகளின் பூக்கள் இருக்கும்போது, ஏன் பூசணிப் பூ வைக்கும் மரபு ஏற்பட்டது என்பது கவனிக்கத்தக்கதாகும். பூசணிப் பூ என்பது வளமையின் சின்னம். கிடைக்கும் காய்கறிகளில் பூசணியில் (வெள்ளைப் பூசணி) மட்டும் தான் அதிக நீர்ச்சத்து உள்ளது. இங்கு பூசணி என்பது பெண்ணின் வயிறாக கருது வதுண்டு.

அதனுள் இருக்கும் நீர் என்பது உயிர் என்று பொருள். உலக உயிர்களுக்கு நீர் இன்றியமையாதது. வேளாண் மைக்கும் நீர் அவசியம். ஆகாயத்தில் இருந்து விழும் நீரானது, பூமியில் விழுந்து விவசாயம் செழிப்பது போல், வாழ்வு சிறக்கவேண்டும் என்பதன் எச்சமாகத்தான் பூசணிப் பூவினை வைக்கும் மரபு இருந்துள்ளது.

‘பொங்கலுக்கு பூசணிக்காய் சாப்பிடாதவன் அடுத்த பிறவியில் பூதப் பிறப்பு பிறப்பான்’ என்பது தமிழர் பழமொழியாகும். இம்மாதிரியான பழமொழிகள் தென் தமிழகத்தில் அதிகம் உள்ளது. ஆகையால், தமிழர்களின் பொங்கல் திருவிழா அன்று பொங்கல் படைப்பதோடு, மதிய உணவில் பூசணிக்காய் கூட்டும் இடம்பெறுவது வழக்கம். நம்மில் பலர் பூசணிக்காயின் மகத்துவம் தெரியாமல் உள்ளோம். இதற்கு பரங்கிக்காய் என்றும் பெயர் உண்டு. இவ்வாறாக பரங்கிக்காய் என்கிற பூசணிக்காய் தமிழர்களின் அன்றாட வாழ்வில் அதிக முக்கியத்துவம் பெறுவதோடு, அவற்றை விழாக்களில் தெய்வமாகவும் போற்றுவதும் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x