Last Updated : 06 Jan, 2025 03:08 PM

 

Published : 06 Jan 2025 03:08 PM
Last Updated : 06 Jan 2025 03:08 PM

ஆனை பட்ட அருந்துயர் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 7

“உன்னை தரிசனம் செய்வதற்காக தேவர்களும் அரசர்களும் தங்கள் படை பரிவாரங்களோடு வந்து காத்திருப்பதால் ஸ்ரீரங்கமே அலைகடல் போல ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறது. அந்தச் சத்தம் உன் காதில் விழவில்லையா? சீக்கிரம் எழுந்திரு” என்று தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய பிறகும் பெருமாள் கண் விழிக்கவில்லை. ஆனாலும் ஆழ்வார் கண் அயரவில்லை. அவர் உடனே இன்னொரு பாசுரத்தைப் பாடுகிறார்.

கொழுங்கொடி முல்லையின் கொழுமல ரணவிக்

கூர்ந்தது குணதிசை மாருத மிதுவோ

எழுந்தன மலரணைப் பள்ளிகொள் ளன்னம்

ஈன்பனி நனைந்தத மிருஞ்சிற குதறி

விழுங்கிய முதலையின் பிலம்புரை பேழ்வாய்

வெள்ளெயி றுறவதன் விடத்தனுக்

கனுங்கி அழுங்கிய ஆனையி னருந்துயர் கெடுத்த

அரங்கத்தம்மா! பள்ளி யெழுந்தரு ளாயே.

‘கிழக்கிலிருந்து வீசும் காற்று பித்தெழச் செய்யும் அழகிய முல்லைப்பூவின் மணத்தைத் தன் மேல் ஏற்றிக்கொண்டு செல்கிறது. தாமரை மஞ்சத்தில் துயில் கொண்டிருந்த அன்னப்பறவைகள் பனியால் நனைந்திருக்கும் தங்கள் பெரிய சிறகுகளை உதறித் துயிலெழுந்துவிட்டன. முன்னொரு நாள் ஆதிமூலம் என்ற பெயருடைய யானையை முதலையிடமிருந்து மீட்டவனே!! திருவரங்கனே!! பள்ளி எழுந்தருள மாட்டாயா?’ என்று தொண்டரடிப்பொடியாழ்வார் கோருகிறார்.

இங்கே அன்னம் என்பது பறவை மட்டுமன்று. தூய்மையின் அடையாளச் சொல்லும் கூட. ‘பாலையும் நீரையும் கலந்து வைத்தால் அன்னப்பறவை பாலை மட்டும் அருந்தும்’ என்ற தொன்மக்கதையும் இதை வலியுறுத்தும். பரமஹம்சர் என்பதில் வரக்கூடிய ‘ஹம்ச’ கூட அன்னம் (அப்பழுக்கில்லாமை) என்பதைக் குறிக்கும் சொல்லே.

இறை சிந்தனை என்னும் சூரியன் உதித்ததும், மனமாகிய தாமரையில், நல்லெண்ணங்களாகிய அன்னங்கள், உலக வாசனையாகிய பனித்துளிகளை உதறுகின்றன. தன்னைச் சுற்றி முல்லை மணம் வீசினாலும் அன்னங்கள் மயங்கவில்லை. பித்தேறச் செய்யும் முல்லைப்பூவின் மணம் நம்மை அடிமை செய்யும் புலன் இன்ப நாட்டங்களுக்கான குறியீடு.

அன்னப் பறவைகள், பெருமாளுக்குப் பணிவிடை செய்யும் நித்ய சூரிகளையும் குறிக்கும் என்றும் பள்ளி கொள்ளுதல் என்ற சொல்லை அதனால்தான் அன்னங்களுக்குத் தொண்டரடிப்பொடியாழ்வார் பயன்படுத்துகிறார் என்றும் வைணவ ஆசார்யர்கள் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.

உண்மையில், ஆதிமூலம் என்பது யானையன்று. மனிதர்களாகிய நாம் தான். யானையைப் போல மனிதனுக்கும் மதம் பிடிக்கும். அந்த மதத்திற்கு அகங்காரம் என்று பெயர். யானையைக் கவ்வியது முதலையன்று. பற்றின்பம். அவை நம்மைப் பற்றி சம்சாரமாகிய பெருங்குளத்தில் ஆழ்த்த முயல்கின்றன. அந்தக் குளத்தில் மூழ்கும்போது மீள முடியாத பெருந்துன்பத்துக்கு ஆளாகிறோம். இதனால் தான் ‘விழுங்கிய முதலையின் பிலம்புரைபேழ்வாய் வெள்ளெயி றுறவதன் விடத்தனுக்கனுங்கி’ என்று பாடுகிறார் தொண்டரடிப்பொடியார்.

இந்த 'முதலை' கவ்வினாலே நம்மை அது விழுங்கிவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்படும். விழுங்கப்பட்டால் வெளியே வருவது மிகவும் கடினம். ஏனெனில் 'அந்த' முதலையின் வாய் ஒரு பாதாள உலகம். பிலம் புரை பேழ் வாய் என்ற வரி வருவது இதனால்தான். இந்த வாயில் அகப்பட்டால் உயிர் போகும் வலி உண்டாகும். அதனால் தான் 'இந்த' முதலைக்கு நஞ்சுண்டு என்கிறார் ஆழ்வார்.

இந்தப் பாசுரத்தின் நிறைவில் 'ஆனையின் அருந்துயர் கெடுத்த' என்று ஆழ்வார் எழுதுகிறார். இங்கே அருமை என்றால் அரிதினும் அரிதான என்று பொருள். கொடிதினும் கொடிதான துயரம் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். ஆனால், ஆசார்யர்கள் இச்சொல்லுக்கு நுட்பமான இன்னொரு பொருளைச் சொல்கிறார்கள்.

பெருமாளே ஓடோடி வந்து யானையைக் காப்பாற்றுகிறார் என்றால் அந்த யானை பட்ட துன்பம் எத்துணை மேலானது!! பெருமாளை நேருக்கு நேர் பார்க்க முடிகிறது என்றால் அந்தத் துன்பத்தை நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் அனுபவிக்கலாமே!!

எனில், அந்தத் துன்பம் ஓர் அருமையான துன்பம் தானே!!

முந்தைய பகுதி > ஐந்தும் தணியும், ஆறும் பணியும் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 6

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x