Published : 31 Jul 2018 10:33 AM
Last Updated : 31 Jul 2018 10:33 AM

பிஞ்சுப் பாதங்களைத் தாங்கும் பள்ளி!

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பல்வேறு திட்டங்கள் தமிழகத்தில் எடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், பேருந்து வசதி இன்றி நெடுந்தூரம் பள்ளிக்கு நடந்து அல்லல்படும் குழந்தைகளைக் கண்டது திருப்பூர் ஊத்துக்குளி சாலை எஸ்.பெரியபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாரப்பாளையம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி. இதற்குத் தீர்வு காணும் விதமாகத் தங்களுடைய பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதியை ஏற்பாடு செய்து மாணவர்களிடம்  புத்துணர்வை விதைத்துள்ளது இந்தப் பள்ளி.

பாரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டுதோறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அக்கறையுடன் கல்வி வழங்குவதால், குழந்தைகள், பெற்றோரிடமிருந்து இந்தப் பள்ளி நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதாகக் கூறுகின்றனர் அப்பகுதியினர். சுற்றுவட்டாரப் பகுதி மட்டுமின்றி அக்கம் பக்கம் கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள்கூட இந்தப் பள்ளியில் படிக்க அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இடைநிற்றலைத் தடுக்க வேன் வசதி

“எங்கள் பள்ளிக்கு  2 கி.மீ. தொலைவில் உள்ள குளத்துப்பாளையம் கிராமத்தில் இருந்து 80-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வருகிறார்கள். இதில் ஒன்றாம் வகுப்பு தொடங்கி 5-ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களில் 40 பேருக்கு வேன் வசதியை ஏற்பாடுசெய்திருக்கிறோம். பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணியாற்றும் கூலித் தொழிலாளர்கள் என்பதால் காலை 8.30 மணிக்கு வேலைக்குச் சென்றுவிடுவார்கள். பள்ளியில் கொண்டுவந்து விட நேரம் போதாமை யால் சிலர் குழந்தைகளின் படிப்பையே நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

பலர் குழந்தைகளை நடக்கவைத்துப் பள்ளிக்கு அனுப்புவதால் காலையிலேயே குழந்தைகள் சோர்வடைவதைக் கண்டோம். சோர்வடையும்போது இயல்பாகவே படிப்பில் நாட்டம் குறைந்துபோனது. அவர்களுக்காக வேன் வசதியை ஏற்பாடுசெய்துள்ளோம்” என்றார் பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.அகிலா.

வேனுக்கு மாத வாடகை ரூ. 14,000 வருகிறது. பள்ளித் தலைமை ஆசிரியை, பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், தன்னார் வலர்கள், ஃபேஸ்புக் நண்பர்கள் ஆகியோர்  தங்களால் முடிந்த அளவு மாதந்தோறும் ரூ. 500-1000 வரை பண உதவி செய்ய உள்ளனர். பெற்றோரிடம் எவ்விதக் கட்டணமும் வசூலிக்காமல் இலவசமாக இந்த ஏற்பாட்டைச் செய்திருப்பதாக மனம் நெகிழ்கின்றனர் பள்ளி ஆசிரியர்கள்.

பயணத்தில் புத்துணர்வு

குழந்தைகளை  வேனில் பாதுகாப்பாக ஏற்றிக்கொண்டு காலை, மாலை வேளைகளில் பள்ளிக்கு வந்து செல்லும் பொறுப்பு இந்தப் பள்ளி ஆசிரியர்களுக்குச் சுழற்சி முறையில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தத் திட்டம் முழு வெற்றியை எட்டியுள்ளது என்கின்றனர் குழந்தைகளின் பெற்றோர்.

வேனில் வந்து செல்லும் பள்ளிக் குழந்தைகள் சிலர் கூறியபோது, “எங்களது குடும்பச் சூழலுக்குப் பள்ளியில் படிப்பது என்பதே பெரிது. அதிலும் வேனில் சென்று படிப்போம் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. நடந்து வரும்போது உடல் சோர்ந்து வகுப்பில் ஈடுபாட்டுடன் கவனிக்க முடியாமல் இருந்துவந்தது. தற்போது 2 கி.மீ., தூரம் நடக்காமல் வேன் வசதி செய்திருப்பதால் புத்துணர்வோடு பள்ளிக்கு வந்து பாடம் படித்துச் செல்கிறோம்” என்றனர் உற்சாகமாக.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x