Last Updated : 01 Jan, 2025 06:32 AM

 

Published : 01 Jan 2025 06:32 AM
Last Updated : 01 Jan 2025 06:32 AM

ஓர் ஆசிரியர் எப்படி உருவாகிறார்?

முதல் குழந்தை. பிறந்தவுடன் என்னை அள்ளி எடுத்து அப்பாவின் கைகளில் கொடுத்தார்கள். அவர் ஆசையோடு என்னைத் தூக்கி, என் காதுக்கு அருகில் குனிந்து, கிசுகிசுத்தார். ‘தா...தின்...தின்னா!’ அம்மாவிலிருந்து உடன் இருந்தவர்கள் எல்லாரும் திகைத்து நின்றுவிட்டார்களாம்.

‘இதென்ன, வழக்கத்தை மாற்றுகிறீர்கள்? கடவுள் வழிபாட்டுப் பாடலை அல்லவா முதலில் குழந்தையின் காதில் நீங்கள் ஓத வேண்டும்? கடவுளின் பெயரைக் கேட்டபடி, அவரின் ஆசியைப் பெற்றுக்கொண்டு அல்லவா உங்கள் குழந்தை வளர வேண்டும்?’ அப்பா சிரித்தார். ‘இசைதான் என் கடவுள். தினமும் அந்தக் கடவுளைதான் வழிபட்டுக்கொண்டிருக்கிறேன். என் ஜாகிர் உசேன் தபலாவின் ஆசியோடு தன் வாழ்வைத் தொடங்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.’

அப்படித்தான் தொடங்கினேன். அப்படித்தான் இந்தக் கணம்வரை வாழ்கிறேன். எந்த மதத்தில் பிறந்தேனோ அந்த மதத்தின் கடவுளை அல்ல. என் காதில் முதல் முதலில் வந்து விழுந்த ஒலியையே என் கடவுளாக ஏற்றுக்கொண்டேன். காதில் வந்து விழுந்த ஒலியைப் பயபக்தியோடு பெற்றுக்கொண்டு என் இதயத்தில் பத்திரப்படுத்திக் கொண்டேன். என் அப்பா எனக்காக அளித்த முதல் ஆசிரியர், முதல் கடவுள், ‘தபலா.’

பல அற்புதமான ஆசிரியர்கள் அதன்பின் எனக்கு அமைந்தார்கள். எப்படித் தபலாவை நெருங்க வேண்டும், எப்படி வாசிக்க வேண்டும், எப்படித் தபலாவோடு என் உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும், நான் வேறு என் கருவி வேறு என்னும் நிலை மாறி தபலாவுக்குள் என்னை எப்படிக் கரைத்துக்கொள்ள வேண்டும் என்பதுவரை பல பாடங்களைப் பலரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

அப்பா தொடங்கி என் அத்தனை ஆசிரியர்களையும் மனம் முழுக்க நிறைத்துக்கொண்டுதான் ஒவ்வொரு முறையும் மேடை ஏறினேன். என் இத்தனை ஆண்டு காலக் கல்வியின் அடிப்படையில் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஒரு நல்ல ஆசிரியர் எதையும் கற்றுக் கொடுப்பதில்லை.

ஒருவர் யாருக்கும் எதையும் கற்றுக் கொடுக்க முடியாது. என் அப்பா எனக்காகச் செய்தது எல்லாம் ஒன்றுதான். ‘குழந்தை, இதுதான் தபலாவின் ஓசை. கேட்டுப் பார். மீண்டும், மீண்டும் முணுமுணுத்துப் பார். நீ வளர, வளர இசையும் உனக்குள் வளர்கிறதா என்று கவனி. வளர்கிறது என்றால் அது போதும். உனக்கு வேறு எதுவும் நான் அளிக்கத் தேவையில்லை.’ எண்ணற்ற இசை வித்வான்களிடம் வளர்ந்தேன். அவர்கள் என்னிடம் திரும்பத் திரும்பச் சொன்னது எல்லாம் இதுதான்.

‘நீ எவ்வளவு தூரம் நெருங்குகிறாயோ அந்த அளவுக்குத் தபலாவும் உன்னை நெருங்கிவரும். உனக்கும் உன் இசைக்கருவிக்குமான உறவை நீங்கள் இருவரும் சேர்ந்துதான் வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்னொருவர் வந்து இடையில் அமர முடியாது. நான் கற்றுக் கொடுத்தால் நீ என்னைப் போல் வாசிப்பாய். இன்னொருவரிடம் சென்று கற்றுக்கொண்டால் நீ அவராக மாறுவாய். எவ்வளவு பெரிய உஸ்தாதாக இருந்தாலும் நீ அவரின் பிரதியாக மாறத் தேவை இல்லை. நீ ஜாகிர் உசேனாக வளர வேண்டும். ஜாகிர் உசேனாகப் பளிச்சிட வேண்டும்.’

இவை தபலாவுக்கு மட்டுமேயான சொற்கள் அல்ல என்பதை நான் உணர்ந்தபோது உலகம் வேறொன்றாகக் காட்சி அளித்தது. இதுதான் எழுத்து, அதை இப்படி எழுத வேண்டும் என்று ஒருவர் சொல்லிக் கொடுக்கலாம். அந்தச் சொற்களைக் கொண்டு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை யாரும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்க முடியாது. இந்தா என்று ஒருவர் டால்ஸ்டாயை எடுத்து உங்கள் கரங்களில் வைத்து அழுத்தலாம். அமர்ந்து வாசிக்க ஒருவர் நாற்காலியை எடுத்து வந்து போடலாம். இன்னொருவர் தேநீர் கலக்கிக் கொடுக்கலாம்.

ஆனால், ஒவ்வொரு சொல்லாக, ஒவ்வொரு வரியாக அவர் எழுத்தை உள்வாங்க உங்களால் மட்டுமே முடியும். டால்ஸ்டாயை நீங்கள்தான் கண்டறிய வேண்டும். இவைதான் எண்கள், இதுதான் கணிதம் என்று ஒருவர் அறிமுகப்படுத்தலாம். கணக்கு உங்களுக்குப் பழக வேண்டும் என்றால் நீங்கள்தான் அதை நெருங்கிச் செல்ல வேண்டும்.

நகர்ந்து போ என்று உங்களை ஒருவர் தூண்டிவிடலாம், அவ்வளவுதான். ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்து கணக்கின் கரங்களைப் பற்றிக்கொள்ள வேண்டியது நீங்கள். இன்னொருவர் அதை உங்களுக்காகச் செய்ய முடியாது. ஓவியம், கவிதை, இசை, பாடல், நீச்சல் எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.

ஆசிரியர் என்று தனியே ஒருவர் இல்லை. நீங்கள் எப்போது ஒரு மாணவராக மாறுகிறீர்களோ அப்போது ஆசிரியர் தோன்றுகிறார். உங்களுக்கு என்ன தேவையோ அதை வழங்குகிறார். உங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள்தான் உணர வேண்டும். அதை எப்படிப் பெறுவது என்று நீங்கள்தான் யோசிக்க வேண்டும்.

யாரிடமிருந்து, எதைக் கற்பது என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதன்பின் உங்கள் சொற்களை, உங்கள் எண்களை, உங்கள் வண்ணங்களை, உங்கள் கனவுகளை நீங்கள்தான் உருமாற்ற வேண்டும். அந்த உருமாற்றத்தை நீங்கள்தான், நீங்கள் மட்டும்தான் நிகழ்த்த முடியும்.

என் முதல் ஒலியைப் பெற்றுக்கொண்ட அந்தக் கணம் நான் ஒரு மாணவனாக மாறினேன். ஆயிரம் மேடைகள் ஏறிய பிறகும், ஆயிரம் பாடல்கள் இசைத்த பிறகும் ஒரு மாணவனாகவே இருக்கிறேன். எனக்கான ஆசிரியர்கள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எல்லாரிடமிருந்தும் பெற்றுக்கொள்கிறேன். அதேநேரம், யாரையும் போல் அல்லாமல், நான் நானாகவே வளர்ந்துகொண்டிருக்கிறேன். என் தபலாவும் முழங்கிக்கொண்டே இருக்கிறது.

சிறந்த ஆசிரியரோ குருவோ இல்லை என்கிற கவலை வேண்டாம். சிறந்த மாணவராக இருக்க முயற்சி செய்யுங்கள். இசை உலகில் முன்னேற குறுக்குவழி கிடையாது. தொடர்ச்சியான கற்றலும் அர்ப்பணிப்புமே முன்னேற்றும். - ஜாகிர் உசேன், தபலா இசைக் கலைஞர்

(இனிக்கும்)

- marudhan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon