Published : 28 Dec 2024 06:27 AM
Last Updated : 28 Dec 2024 06:27 AM

மருத்துவ உலகம் கடந்து வந்த பாதை @ 2024

2024 ஆம் ஆண்டு முடிவடையவுள்ள நிலையில், இவ்வாண்டில் நிகழ்ந்த முக்கிய மருத்துவ நிகழ்வுகளில் சில..

புற்றுநோய் மேலாண்மை இயக்கம்: புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தகுந்த சிகிச்சை அளிக்கவும், புனர்வாழ்வு சேவை களை அளிப்பதற்காகவும் ‘புற்றுநோய் மேலாண்மை இயக்கம்’ செயல்படும் எனத் தமிழக அரசு அறிவித்தது. காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனைக்குத் தேவையான உயர்தர சிகிச்சைக்காகக் கூடுதல் உயர்நிலை புற்றுநோய்க் கருவிகள் வழங்கப்பட்டு, உயர்திறன் மையமாகத் தரம் உயர்த்தப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்தது.

எச்சரித்த ஆய்வு: முறையற்ற தூக்கமானது மார டைப்பு, பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிப்பதாக ‘ஜர்னல் ஆஃப் எபிடமியாலஜி & கம்யூனிட்டி ஹெல்த்’ (Journal of Epidemiology & Community Health) இதழ் நடத்திய ஆய்வில் தெரியவந்தது. 40 முதல் 79 வயதுக்கு உள்பட்ட 72,000 பேரிடம் அன்றாட உறக்க முறை குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையின் அடிப்படையில் இம்முடிவு வெளியிடப்பட்டது.

அதில் ‘தினமும் 8 மணி நேரத் தூக்கத்தை ஒருவர் பெற்றாலும் உறங்கும் நேரமும் எழுந்திருக்கும் நேரமும் ஒவ்வொரு நாளும் மாறுபட்டால் அந்தத் தூக்கம் முறை யற்றதாகக் கருதப்படுகிறது. இம்மாதிரியான உறக்கம் உடல்நலனைப் பாதித்து மாரடைப்பு, பக்கவாதம், இதயச் செயலிழப்பு போன்றவை ஏற்படுவதற்குக் காரணமாக அமைகிறது’ எனக் கண்டறியப்பட்டது.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: இந்தியாவில் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் காப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு 2024இல் அறிவித்தது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2018இல் தீனதயாள் உபாத்யாய பிறந்த நாளான செப்டம்பர் 25ஆம் தேதி மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இந்தியாவில் குறைந்த வருமானம் கொண்ட 40 சதவீத மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டை உறுதிசெய்யும் நோக்கத்தில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் அளவுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்படுகிறது.

அதிகரித்த கரோனா: அமெரிக்கா, ஐரோப்பா, மேற்கு பசிபிக் நாடுகளில் கரோனா பரவல் 2024 ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 15 வரை கணிசமாக அதிகரித்தது. இந்தியாவிலும் (ஜூன்-ஜூலை) அருணாசல பிரதேசம், அசாம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், மகாராஷ்டிரம், மேகாலயம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கரோனா அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கை தெரிவிக்கிறது. மேலும், கரோனா பாதிப்பு விகிதம் 5%க்கும் கூடுதலாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

புற்றுநோய்க்கு தடுப்பூசி: புற்றுநோய்க்கான எம்ஆர்என்ஏ தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்யா அறிவித்தது. இதை அந்நாட்டின் சுகாதாரத் துறை கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆண்ட்ரே கப்ரின் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தத் தடுப்பூசி ரஷ்யாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசி உருவாக் கத்தில் செயற்கை நுண்ணறிவு உதவியை நாட உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நோபல் பரிசு: மரபணுச் செல்பாடுகளை ‘நுண் ஆர்.என்.ஏ’ (micro RNA) என்கிற மரபுக் கூறுதான் கட்டுப்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்த அமெரிக்காவைச் சேர்ந்த விக்டர் ஆம்ப்ரோஸ், கேரி ரஃப்குன் ஆகியோருக்கு 2024க்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நுண் ஆர்.என்.ஏ. கண்டுபிடிப்பு மருத்துவ உலகில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, புற்றுநோய் குறித்த ஆராய்ச்சியில் இந்தக் கண்டுபிடிப்பு மிக முக்கியப் பங்காற்றும் என ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், பிறவியிலேயே கண் பார்வை உள்ளிட்ட பிற உடல் பாதிப்புகளை அசாதாரண ஆர்.என்.ஏ.க்களை மாற்றி அமைப்பதன் மூலம் தடுக்கும் வழிகளையும் கண்டறிய முடியும்.

போலியோ பாதிப்பு: வறுமை, போர்ச் சூழலில் உள்ள நாடுகளில் போலியோ பாதிப்பு தொடர்வதாக ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகள் நல அமைப்பான ‘யுனிசெஃப்’ தெரிவித்துள்ளது. 2024 அக்டோபர் 24, உலக போலியோ நாளை முன்னிட்டு யுனிசெஃப் ஆய்வு ஒன்றை நடத்தியது. அந்த ஆய்வு முடிவில், ‘2023இல் 541 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பாதிப்பில் 85 சதவீதம் வறுமை நிலை, போர் பாதிப்பு உள்ள 21 நாடுகளில் ஏற்பட்டுள்ளது. உலக அளவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் போலியோ பாதிப்பு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது’ எனத் தெரியவந்தது.

தனியார் மருத்துவமனையிலும் இலவசத் தடுப்பூசிகள்: தமிழகத்தில் தேசியத் தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு இலவசமாகப் போடப்படுகின்றன. இத்தடுப்பூசிகள் காசநோய், கல்லீரல் தொற்று, புற்றுநோய், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃபுளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப் போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், விட்டமின் - ஏ குறைபாடு உள்ளிட்ட 12 பாதிப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் வாரம்தோறும் புதன்கிழமையில் குழந்தைகளுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேநேரத்தில் தனியார் மருத்துவமனைகளில் இந்தத் தடுப்பூசிகள் கட்டணம் செலுத்தி வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் அரசு மருத்துவமனைகளைப் போலவே, தனியார் மருத்துவமனைகளிலும் தேசியத் தடுப்பூசி அட்டவணையில் உள்ள தடுப்பூசிகளை இலவசமாகப் போடும் திட்டத்தைத் தமிழக அரசு அறிவித்தது.

தீவிரமான மார்பர்க் வைரஸ்: ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டா, காங்கோ, கென்யா, உகாண்டாவில் 2024, செப்டம்பர் மாதம் மார்பர்க் வைரஸ் தீவிரமாகப் பரவியது. குறிப்பாக ருவாண்டாவில் மார்பர்க் வைரஸுக்குப் பலரும் பலியாயினர். மார்பர்க் வைரஸ் பழந்தின்னி வெளவால்களிடமிருந்து விலங்குகளுக்கும், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும் பரவுகிறது.

இந்த வைரஸ் மனிதர்களிடையே எளிதாகப் பரவுவதால் நோய் பாதிப்பு உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். மார்பர்க் வைரஸுக்குத் தடுப்பூசி எதுவும் இல்லை. காய்ச்சல், தலைவலி, உடல் வலி, வயிற்றுபோக்கு, வாந்தி உணர்வு, வயிற்றில் வலி போன்றவை ஏற்படும். கண், மூக்கு, காது, வாய், பிறப்புறுப்புகளில் ரத்தம் வருதல் ஆகியவை இந்த வைரஸின் தீவிர அறிகுறிகளாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

டிரகோமாவுக்கு முற்றுப்புள்ளி: உலக நாடுகளில் 2024இல் ஒழிக்கப்பட்ட நோய்களின் பட்டியலை உலகச் சுகாதார நிறுவனம் வெளியிட்டது. அதில் டிரகோமா நோய் இந்தியா, பாகிஸ்தான், வியட்நாம் ஆகிய நாடுகளில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாக அது பாராட்டு தெரிவித்துள்ளது. 1950 முதல் 1960 வரை இந்தியாவில் பொதுச் சுகாதாரப் பிரச்சினையாக டிரகோமா இருந்தது.

குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் டிரகோமாவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். அப்போதைய மக்கள்தொகையில் 50%க்கும் அதிகமானோர் டிரகோமாவால் பாதிக்கப்பட்டனர். 1971இல் இந்தியாவில் ஏற்பட்ட பார்வையிழப்புக்கு 5% டிரகோமாவே காரணமாக இருந்தது. இந்த நிலையில் இந்திய அரசின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் டிரகோமாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

- தொகுப்பு: மாயா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x