Last Updated : 27 Dec, 2024 06:26 AM

 

Published : 27 Dec 2024 06:26 AM
Last Updated : 27 Dec 2024 06:26 AM

காதலின் எதிர்பாரா ‘தருணம்’ | இயக்குநரின் குரல் 

வெற்றிப்பட இயக்குநர்களாக ஒளிரும் பத்திரிகையாளர்களின் வரிசையில், அருள்நிதி நடித்த ‘தேஜாவு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் அரவிந்த் ஸ்ரீநிவாசன். அவரின் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகியிருக்கும் படம் ‘தருணம்’. கிஷன் தாஸ் - ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் காதல் - ஆக் ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இப்படம், பொங்கல் திருநாளில் ரிலீஸ் ஆகிறது. படம் குறித்து இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

அரவிந்த் ஸ்ரீநிவாசன்

அஜித் - விக்ரம் - ராம் சரண் எனப் பெரிய ஹீரோக்களின் படங்களோடு ‘தருணம்’ படத்தை வெளியிடும் துணிச்சலுக்கான காரணம் என்ன? - பொங்கல் பண்டிகை வெளியீடு எனும்போது நான்கு படங்களுக்கு ‘ஸ்பேஸ்’ இருக்கும் என நம்புகிறேன். ஏனென்றால் குறைந்தது நான்கு நாள் விடுமுறை வரும். படம் பார்த்து பண்டிகையைக் கொண்டாடும் மனநிலை என்பது பொங்கலுக்குச் சற்று அதிகமாகவே இருக்கும்.

முதல் இரண்டு நாள்கள் பெரிய நட்சத்திரங்களின் படங்களைப் பார்த்துவிட்டால்கூட அடுத்து வரும் நாள்களில் எங்கள் படத்துக்கு வருவார்கள். அதேபோல் முதல் இரண்டு நாள்களின் ‘ஓவர் ஃப்ளோ ஆடியன்ஸ்’, ‘தருணம்’ படத்தைத் தேர்வு செய்வார்கள் என்கிற முழு நம்பிக்கை இருக்கிறது. படத்தின் டிரைலருக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பே அதற்குச் சாட்சி.

ஓடிடியில் வெளியாகியிருந்தாலும் ‘முதலும் நீ முடிவும் நீ’ படத்தில் கிஷன் தாஸ் தனியாகத் தெரிந்தார். இந்தப் படம், அவரை அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்துமா? - நிச்சயமாக! கிஷன் தாஸுக்கு திரையரங்கில் வெளியாகும் முதல் படம் இது. கிஷனிடம் நல்ல அர்ப்பணிப்பு உணர்வு, எதையும் கேட்டுச் செய்வது, சிறப்பான ஆலோசனைகளைச் சொல்வது என ஒரு ஹீரோவுக்கான பல நல்ல குணங்கள் அவரிடம் இருக்கின்றன.

அதேபோல், ஸ்மிருதி வெங்கட் மிகத் திறமையானவர். அவர் கதாநாயகியாக நடித்திருக்கிறார். ‘தேஜாவு’ படத்தில் நீங்கள் 10 நிமிடம்தான் வருவீர்கள்; ஆனால், கதை உங்களைச் சுற்றித்தான் இருக்கும் என்று சொன்னேன். என்னை நம்பி ஒப்புக்கொண்டார். ஆனால், எதிர்பாராத அளவுக்கு அந்தக் கதாபாத்திரத்துக்கு அவ்வளவு எனர்ஜியுடன் உயிர் கொடுத்திருந்தார்.

ரசிகர்கள், விமர்சகர்கள் ஆகிய இரண்டு தரப்புமே அவரைப் பாராட்டி னார்கள். இவரது திறமைக்கு முழுமையான ‘ஸ்பேஸ்’ கிடைத்தால் இன்னும் ஸ்கோர் செய்வார் என்பதை அறிந்தே ‘தருணம்’ படத்துக்குக் கதாநாயகி யாகத் தேர்வு செய்தோம். அட்டகாசம் செய்திருக்கிறார். ராஜ் அய்யப்பன் ‘செகண்ட் லீட்’ செய்திருக்கிறார். இவர்களுடன் பால சரவணன், கீதா கைலாசம், ஸ்ரீஜா ரவி எனப் பலர் முக்கியத் துணைக் கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.

படத்தின் கதையும் களமும் என்ன? - வாழ்க்கையில் நாம் கடந்து போவது எல்லாமே ஏதோவொரு நல்ல விஷயத்துக்காகத்தான். இப்படி எல்லாவற்றையும் உணர வைப்பது ஒரு தருணம்தான். அது, காதல் இணையைச் சந்திக்கிற தருணமாகவும் இருக்கலாம், நண்பனை, எதிரியைச் சந்திக்கும் தருணமாகவும் இருக்கலாம். புதிய மனிதர்களுடனான சந்திப்பு பெரும்பாலான தரு ணங்களில் வாழ்க்கையின் போக்கையே மாற்றிவிடும். அப்படிப்பட்ட தருணங்களில் ஒளிந்திருக்கும் திருப்பங்களும் விளைவுகளும்தான் கதை.

கிஷன் தாஸ் எப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் வருகிறார்? - அவர், சி.ஆர்.பி.எஃப் காவல் அதிகாரியாக வருகிறார். அவர் பணி புரிவது காட்டில் பணி அமர்த்தப்படும் ‘கோப்ரா ஸ்குவாடு’ என்கிற படையில். ஹீரோவின் பணி அனுபவம், அவர் எதிர்பாராத வகையில் சந்திக்கும் சண்டைக் காட்சிகளுக்கு எப்படி உதவுகிறது என்பதும் டான் அசோக் சண்டைக் காட்சிகளை வடிவமைத் துள்ள விதமும் ரசிகர்களைப் பெரிய அளவில் உற்சாகம் கொள்ள வைக்கும். அதேபோல், நாயகி ஸ்மிருதி வெங்கட்டின் கதாபாத்திரம் உருவாக்கும் அதிர்வுகள்தான் கதையை யூகிக்க முடியாத திசையில் நகர்த்தும். காதலை இதில் மிகவும் ‘மெச்சூர்டு’ ஆக டீல் செய்திருக்கிறேன்.

படத்தின் தொழில்நுட்பக் குழு பற்றி கூறுங்கள்.. தயாரிப்பாளர் புகழ் எனக்கு 18 வருட நண்பர். அவரும் ஈடனும் இணைந்து படத்தைத் தயாரித்திருக்கிறார்கள். படத்தின் தரம் சிறப்பாக வரவேண்டும் என்று நான் எடுத்த எல்லா முயற்சிகளுக்காக இருவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். தர்புகா சிவா 4 பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

பாடல்கள் கதையின் ஓட்டத்தை மேலும் விரைவுபடுத்துமே தவிர, திணிப்பாக இருக்காது. அஷ்வின் ஹேமந்த் பின்னணி இசை தந்திருக்கிறார். இரண்டு இசையமைப்பாளர்களுமே போட்டி போட்டு இசையைத் தந்திருக்கிறார்கள். ராஜா பட்டாசார்ஜி ஓளிப்பதிவையும் அருள் இ சித்தார்த் படத்தொகுப்பையும் கவனித்திருக்கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x