Published : 27 Dec 2024 11:56 AM
Last Updated : 27 Dec 2024 11:56 AM
ஜோசப் ரொமால்ட்
கிறிஸ்துமஸ் பாடல்களில் மிகவும் புகழ்பெற்றது, ‘சைலண்ட் நைட், ஹோலி நைட்’ பாடல்தான். உலகம் முழுவதும் பாடப்படும் பாடல்களில் முதன்மையானது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 24 அன்று இரவு ஆஸ்திரியாவின் ஓபர்ண்டோர்ப் நகரில் உள்ள சிறிய தேவாலயத்தின் முன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் கூடுகிறார்கள். ’சைலண்ட் நைட், ஹோலி நைட்’ பாடல் இயற்றப்பட்ட ஜெர்மானிய மொழியில் பாடுகிறார்கள். பின்னர் அவரவர் மொழியில் பாடுகிறார்கள்.
1818ஆம் ஆண்டு ஜெர்மானிய மொழியில் இயற்றப்பட்டு, 206 ஆண்டுகளாகப் பாடப்பட்டு வருகிறது இந்தப் பாடல். இதை எழுதியவர் ஜோசப் மோர் என்கிற இளம் பாதிரியார். இசையமைத்தவர் பள்ளி ஆசிரியரும் இசைக் கலைஞருமான பிரான்ஸ் சேவர் க்ரூபர். இந்தப் பாடல் 300க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 2011ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் ‘கலாச்சாரப் பாரம்பரியச் சொத்து’ என்று அறிவிக்கப்பட்டது.
ஜோசப் மோர்
இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரியாவின் ஓபண்டோர்ப் கிராமம் வறுமமையில் வாடியது. எவ்வளவு துன்பத்திலும் கடவுள் நம் மீது அக்கறை கொண்டவராக இருக்கிறார் என்கிற நம்பிக்கையை அளிக்கும் விதத்தில் இந்தப் பாடல் எழுதப்பட்டு, கிறிஸ்துமஸ் இரவில் பாடப்பட்டது. இந்தப் பாடலின் இசையும் வரிகளும் மொழி, கலாச்சாரம் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாக மாறியது.
முதல் உலகப் போரில் இந்தப் பாடல் ஒருவகையில் உலக அமைதிக்குத் தற்காலிகமாக வழிவகுத்தது. 1914, ஜூன் மாதத்தில் ஆரம்பித்த போர் விரைவில் முடிந்து, கிறிஸ்துமஸுக்கு வீரர்கள் வீட்டுக்கு வந்துவிடுவார்கள் என அனைவரும் நினைத்தனர். ஆனால், டிசம்பரிலும் போர் நடந்துகொண்டிருந்தது. போரால் ஆண்கள் உடல்ரீதியாகவும் பெண்கள் உணர்வுரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்தனர். பிரிட்டனைச் சேர்ந்த 101 குடும்பத் தலைவிகள் இணைந்து எழுதிய ஒரு மடல், போர் நிறுத்த முயற்சிகளை ஆரம்பித்து வைத்தது. டிசம்பர் 24 அன்று அதிகாரபூர்வமற்ற போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. அன்று வழக்கத்தைவிட குளிர் வாட்டியது. பிரிட்டன் வீரர்கள் தங்கள் பதுங்குக் குழிகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தனர். வெளிச்சம் எதிரிகளின் கவனத்தை ஈர்க்கும் என்பதால், போர்க்காலத்தில் மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கு அனுமதி இல்லை.
கிறிஸ்துமஸைக் கொண்டாடுவதற்காக வீரர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றி, ‘அமைதி இரவு, புனித இரவு’ என்கிற பாடலைப் பாட ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் ஜெர்மன் வீரர்களின் பதுங்குக் குழிகளில் இருந்தும் அதே பாடல் வெளிவந்தது. நம்பிக்கையோடு பிரிட்டன் வீரர்களும் ஜெர்மானிய வீரர்களும் மெழுகுவர்த்திகளை ஏந்திக்கொண்டு வெளியே வந்தனர். போரில் தோல்வி அடைந்து, சரணடையும்போது மட்டுமே துப்பாக்கி இன்றி கைகளை மேலே உயர்த்துவார்கள். ஆனால், அந்த இரவு ஒரு பாடல் அந்த விதியை மாற்றியது. இரண்டு நாட்டு வீரர்களும் ஒருவருக்கு மற்றொருவர் வாழ்த்துகளையும் இனிப்புகளையும் பரிமாறிக்கொண்டனர். தாங்கள் அனுபவித்த மிகச் சிறந்த கிறிஸ்துமஸ் விருந்து இதுதான் என்று பல வீரர்கள் தங்கள் குடும்பத்துக்குக் கடிதங்களை அனுப்பினர்.
மீண்டும் பதுங்குக் குழிகளுக்குத் திரும்பும்போது, ஒரு ஜெர்மானிய வீரர் பிரிட்டன் வீரரின் கையைப் பிடித்தபடி, “ஏன் நாம் அனைவரும் வீட்டுக்குச் சென்று நிம்மதியாக வாழக் கூடாது” என்று கேட்டார். மனித உயிர்களின் மதிப்பையும் அன்பையும் ஒரு பாடல் உணர்த்திவிட்டது! இப்போது நடந்துகொண்டிருக்கும் போர்களையும் நிறுத்துமா இந்தப் பாடல்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment