Published : 27 Dec 2024 06:19 AM
Last Updated : 27 Dec 2024 06:19 AM
சமூக வலைதளங்களில் 2024இல் தமிழகத்தில் வைரலான சில நிகழ்வுகள்.
* ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியைத் தொடங்கிய விஜயின் மாநாட்டு உரை, கொள்கை போன்றவை வரவேற்பையும் விமர்சனத்தையும் ஒருசேரப் பெற்றன.
* நடிகை நயன்தாராவின் வாழ்க்கை வரலாற்று ஆவணப் படம் தொடர்பாக நடிகர் தனுஷ் மீது குற்றச்சாட்டை முன்வைத்து நயன்தாரா வெளியிட்ட அறிக்கை சமூக ஊடகங்களில் அல்லோல கல்லோலப்பட்டது. திரைத் துறையைச் சேர்ந்த இருவருடைய மோதலை அவலாக்கி ருசி பார்த்தது சமூகவலைதள சமூகம்.
* ‘தல’ என்று அழைக்க வேண்டாம் என்று அன்பு கட்டளையிட்டிருந்த நடிகர் அஜித்தை அவருடைய ரசிகர்கள், ‘கடவுளே அஜித்தே..’ என ‘புரோமோட்’ செய்து அவஸ்தைப்படுத்தினார்கள். அதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்ததுதான் அஜித் ஸ்பெஷல்.
* இந்த ஆண்டு ‘இந்தியன் 2’. ‘கங்குவா’ போன்ற படங்கள் சமூக ஊடகர்கள் கையில் சிக்கிச் சின்னாபின்னமாகின. இதற்குப் பதிலடி கொடுக்க சினிமா துறையினரும் புதுப்புது உத்திகளைக் கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
* 2024இல் ‘பால் டப்பா’ என்கிற அனிஷின் ‘காத்து மேல’, சாய் அபயங்கரின் ‘கட்சி சேர’, ‘ஆச கூட’, ‘அசல் கோளாறு’ பாடிய ‘பையா டேய்’ ஆகிய சுயாதீனப் பாடல்கள் வைரல் பேர்வழிகளுக்குத் தீனிப் போட்டன.
* இது யூடியூபர்களின் காலம். இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இளம் யூடியூபர் களின் தகவல் தொகுப்பு, பிரசார உத்திகள் சமூக ஊடகங்களில் சக்கைப்போடு போட்டன.
* மறைந்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன், பவதாரிணியின் குரல்கள் இந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பம் மூலம் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டன. இதற்கு வரவேற்பு இருந்தாலும், ஏஐயின் போக்கு அச்சத்தைத் தருவதாகவும் விமர்சனம் எழுந்தது.
* குழந்தைகளுக்கான பிரபல ‘சோட்டா பீம்’ கார்ட்டூனின் வசனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. ‘சின் தபக் டம் டம்’ - என்கிற இந்த ஜாலி வசனம் திடீரென வீடியோ மீம் மெட்டீரியலானது.
* சுட்டீஸ் முதல் பாட்டீஸ் வரை வயது வித்தியாசம் இல்லாமல் திறமையைக் காட்டவும், பிடித்த துறையில் ‘இன்புளூயன்சர்’களாக மாறும் போக்கும் இந்த ஆண்டும் ‘டிரெண்’டிங்கில் நீடித்தது.
* கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளியிட்டது, பிரசவத்தின்போது வீடியோ எடுத்து வெளியிட்டது என யூடியூபர் இர்ஃபானை சர்ச்சைகள் சுற்றின. எல்லாவற்றுக்கும் ஒரு ‘மன்னிப்பை’க் கேட்டு அவர் எஸ்கேப் ஆனது தனிக்கதை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT