Published : 25 Dec 2024 06:12 AM
Last Updated : 25 Dec 2024 06:12 AM
ராஜிக்கு சைக்கிள் ஓட்ட ரொம்பப் பிடிக்கும். ஆனால் அவளிடம் சைக்கிள் இல்லை. ஆனால், அவள் அண்ணனுக்கு சைக்கிள்
வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
"அண்ணனுக்கு மட்டும் சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்கீங்க, எனக்கு?" என்று கேட்டாள் ராஜி.
"அண்ணன் பள்ளிக்கூடம் போறதுக்கு சைக்கிள்தானே வசதி?" என்றார் அப்பா.
"நானும்தான் பள்ளிக்கூடம் போறேன். எனக்கு மட்டும் சைக்கிள் வேணாமா?"
"அப்பாவே உன்னை பைக்கில் கூட்டிட்டுப் போய் பள்ளியில் விடுறாங்க. உனக்கு எதுக்கு சைக்கிள்?" என்று சிரித்தான் சேகர்.
"எனக்கும் சைக்கிள் வாங்கினால், நானும் பள்ளிக்கு சைக்கிளிலேயே போவேன்" என்று அடம்பிடித்தாள் ராஜி.
"இங்க பாரு, சேகர் எட்டாவது போயிட்டான். சைக்கிள் வாங்கிக் குடுத்திருக்கோம். நீயும் எட்டாவது போகும்போது வாங்கித் தருவோம்" என்று அவள் அம்மா சமாதானம் செய்தார்.
உடனே சைக்கிள் கிடைக்காது என்பதில் வருத்தம்தான் என்றாலும் வருங்காலத்தில் தனக்கும் சைக்கிள் வாங்கித் தருவார்கள் என்கிற நம்பிக்கையில் சமாதானம் அடைந்தாள் ராஜி.
எட்டாம் வகுப்பு போவதற்குள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டுவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் அண்ணனின் சைக்கிளை ஓட்டிப் பழகினாள்.
சேகர் சில நாள் அவளுக்கு சைக்கிள் தருவான். சில நாள் அவள் சைக்கிளை எடுக்கும்போது அவனுக்குக் கோபம் வந்துவிடும்.
"நீ பாட்டுக்கு ஓட்டி சைக்கிளை நாசம் பண்ணிடற. இது என் சைக்கிள்… தொடாதே” என்று கோபப்படுவான் சேகர்.
ஆனால், ராஜி அதை எல்லாம் பொருள்படுத்தவே மாட்டாள். அவள் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒரு சுற்றுச் சுற்றிவிட்டுதான் வீட்டில் கொண்டுவந்து வைப்பாள். இத்தனைக்கும் அவளுக்குக் குரங்கு பெடல்தான் ஓட்டத் தெரியும்!
"நான் சீட்டுல உட்கார்ந்து ஓட்டணும். கொஞ்சம் வந்து புடிண்ணா" என்று தன் அண்ணனைக் கெஞ்சுவாள்.
"எனக்குத் திண்பண்டத்தில் பாதியைத் தரணும். அப்பதான் புடிப்பேன்" என்று சேகர் சொல்வான்.
சைக்கிள் ஓட்டும் ஆவலில் அவளும் சரி என்பாள்.
சேகர் வந்து சைக்கிளைப் பிடித்தாலும், இருக்கையில் அமர்ந்து ஓட்ட அவளுக்குக் கால் எட்டாது. கால் எட்டினால்தானே பெடலை அழுத்த முடியும், சைக்கிளை ஓட்ட முடியும்.
"நீ இன்னும் வளரணும். அப்பதான் சைக்கிளை சீட்டுல உட்கார்ந்து ஓட்ட முடியும். அதுவரைக்கும் குரங்கு பெடல்தான்" என்று கிண்டல் செய்வான் சேகர்.
இப்படியே ஒரு வருடம் ஓடிவிட சேகர் ஒன்பதாம் வகுப்புக்கும் ராஜி ஆறாம் வகுப்புக்கும் வந்துவிட்டார்கள். ராஜி இன்னும் சைக்கிள் பெடலை எட்டும் அளவுக்கு வளரவில்லை. அதனால் அவள் குரங்கு பெடலில்தான் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தாள்.
அன்று பள்ளியிலிருந்து வந்ததும் சேகரின் சைக்கிளை எடுத்து ஓட்ட ஆரம்பித்தாள். தெருவில் நடந்து வந்துகொண்டிருந்த ஒரு பாட்டி திடீரென்று விழுவதைக் கண்டாள்.
உடனே ராஜி சைக்கிளை வேகமாகத் தள்ளிக்கொண்டு பாட்டியிடம் வந்தாள்.
"ஐயோ, பாட்டி என்ன ஆச்சு?"
"ஆ... கல் குத்திருச்சு கண்ணு..." என்று சொல்லிக்கொண்டே பாட்டி தன் காலைப் பிடித்துக்கொண்டு வலி பொறுக்க முடியாமல் துடித்தார். ரத்தம் வழிந்தது.
ராஜிக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. ஆனால், வலியில் துடிக்கும் பாட்டிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.
"பாட்டி, சைக்கிள் பின்னால உக்காருங்க. பக்கத்துலதான் டாக்டர் இருக்காரு. நான் கூட்டிட்டுப் போறேன். வாங்க" என்றாள் ராஜி.
"வேணாம் கண்ணு. நான் அப்படியே வீட்டுக்குப் போயிருவேன். உன்னால என்னை வச்சு ஓட்ட முடியாதும்மா" என்றார் பாட்டி.
"அப்படியே வீட்டுக்குப் போனா காயம் எப்படி ஆறும்? ரத்தத்தை நிறுத்தணும். வாங்க" என்று வற்புறுத்தி அந்தப் பாட்டியை சைக்கிளின் பின்னால் ஏற்றிக்கொண்ட ராஜி, "கெட்டியா பிடிச்சிக்கோங்க பாட்டி. இப்ப போயிடலாம்" என்று சைக்கிளை ஆரம்பச் சுகாதார மையத்தை நோக்கிச் செலுத்தினாள்.
மருத்துவரைப் பார்த்துவிட்டு, பாட்டியை அவர் வீட்டில் விட்டுவிட்டு, வீட்டுக்கு வந்தாள் ராஜி.
"எங்கே போன? உன்னை எங்கெல்லாம் தேடுறது?" என்று கடிந்துகொண்டார் ராஜியின் அம்மா.
"சைக்கிளைக் கீழே போட்டியா?" என்று சேகர் கேட்டான்.
அதற்குள் பாட்டியின் வீட்டிலிருந்து ஒருவர் ராஜியைத் தேடிக்கொண்டு
வந்தார்.
அவர் நடந்ததை ராஜியின் பெற்றோரிடம் சொல்லிவிட்டு, ராஜிக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றார்.
"அடேங்கப்பா! குரங்கு பெடலடிச்சிக் கிட்டே அந்தப் பாட்டியை டாக்டர்கிட்டே கூட்டிட்டுப் போயிட்டீயே! கிரேட்!" என்று சேகர் தன் தங்கையைப் பாராட்டினான்.
"நல்லதுதான் பண்ணியிருக்க ராஜி. இப்படித்தான் எப்பவும் எல்லாருக்கும் உதவி செய்யணும்" என்று ராஜியின் கையைப் பிடித்துக் குலுக்கினார் அவள் அப்பா.
அன்று முதல் குரங்கு பெடல் என்று ராஜியைக் கிண்டல் செய்வதை விட்டுவிட்டான் சேகர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT