Published : 23 Dec 2024 12:23 PM
Last Updated : 23 Dec 2024 12:23 PM

மைக்கேல் ஃபாரடே | விஞ்ஞானிகள் - 14

வேதியியலாளராகவும் இயற்பியலாளராகவும் முக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கிறார் மைக்கேல் ஃபாரடே. மின்காந்தவியல், மின்வேதியியல் துறைகளில் இவர் அளித்த பங்களிப்பின் காரணமாக, மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகக் கொண்டாடப்படுகிறார். இவர் முயற்சியின் காரணமாகவே மின்சாரம் பொதுப் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

1791, செப்டம்பர் 22 அன்று இங்கிலாந்தில் பிறந்தார் ஃபாரடே. தந்தை குதிரைக்கு லாடம் அடிப்பார். அந்த வருமானத்தில் தந்தையால் ஃபாரடேவுக்குக் கல்வியை அளிக்க இயலவில்லை. அதனால் அவரே தன் கல்வியைப் பார்த்துக்கொண்டார். 14 வயதில் புத்தகக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அப்போது பல புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வேலை முடித்து வீட்டிற்கு வந்தால், படித்த அறிவியல் சோதனைகளைச் செய்து பார்ப்பார். இப்படி அறிவியல் அறிவைப் படிப்படியாக வளர்த்துக் கொண்டார்.

புத்தக விற்பனையிலிருந்து பைண்டிங் பிரிவுக்குப் பதவி உயர்வு கிடைத்தது. அங்கும் பைண்டிங்கிற்கு வந்த அறிவியல் புத்தகங்களைப் படித்தார். புரியாத சந்தேகங்களைக் குறித்துக்கொண்டார். புத்தகத்திற்கு உரியவர் வரும்போது, அவரிடமே சந்தேகங்களைக் கேட்டார். அப்படியும் தீராத சந்தேகங்கள் இருந்தன.

ஃபாரடேவின் அறிவியல் தாகத்தைத் தீர்க்க நினைத்தார் முதலாளி. ஹம்ப்ரி டேவி என்கிற வேதியியலாளர் ராயல் கழகத்தில் விரிவுரை ஆற்ற இருந்தார். அந்தக் கூட்டத்திற்கு நுழைவுச் சீட்டு வாங்கிக் கொடுத்தார். ஃபாரடே அதில் கலந்து கொண்டார். டேவி பேசிய அனைத்தையும் குறிப்பெடுத்தார். அதை பைண்டிங் செய்து அவருக்கே அனுப்பி வைத்தார். அதில் வேலை கேட்டு ஒரு கடிதத்தையும் வைத்திருந்தார். குறிப்புகளைப் படித்துப் பார்த்த டேவி, ஃபாரடேயின் விருப்பப்படி உதவியாளராகச் சேர்த்துக்கொண்டார்.

ஒரு வருடத்தில் டேவி தன் மனைவியுடன் ஐரோப்பா புறப்பட்டார். அதில் ஃபாரடேவையும் இணைத்துக்கொண்டார். பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, இத்தாலி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் பல புகழ்பெற்ற விஞ்ஞானிகளைச் சந்தித்தனர். அவர்களின் திறனை அருகில் இருந்து கவனித்தார் ஃபாரடே. அனுபவங்களை உள்வாங்கிக்கொண்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து நாடு திரும்பினர். ராயல் நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றினார்.

ஃபாரடே வேதியியல் பகுப்பாய்வுகள், ஆய்வக நுட்பங்களில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றார். டேவியின் ஆராய்ச்சிக்கு உதவி செய்து கொண்டே தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். புதிய கரிம சேர்மங்களைக் கண்டறிந்தார். வேதியியல் பகுப்பாய்வாளராகப் புகழ் பெற்றார். தனக்குக் கிடைத்த வாய்ப்புகளால் விஞ்ஞானிகளை வழிநடத்தும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றார்.

1821இல் மின்காந்த சுழற்சி பற்றிய கட்டுரையை வெளியிட்டார். அது பலருடைய கவனத்தைக் கவர்ந்தது. காந்தப்புலத்திலிருந்து மின்னோட்டத்தைத் தயாரித்தார். மின் மோட்டாரையும் டைனமோவையும் கண்டறிந்தார். மின்சாரத்திற்கும் ரசாயனப் பிணைப்பிற்கும் உள்ள தொடர்பை நிரூபித்தார். ஒளியில் காந்த விளைவைக் கண்டறிந்தார்.

1826 முதல் வெள்ளிக் கிழமைகளில் ராயல் கழகத்தில் சொற்பொழிவு ஆற்ற ஆரம்பித்தார். அதே ஆண்டு கிறிஸ்துமஸ் விரிவுரையும் தொடங்கி வைத்தார். இன்று வரை இந்த இரண்டு பழக்கங்களும் தொடர்கின்றன.

1831இல் மின்மாற்றியைக் கண்டறிந்தார். அதைத் தொடர்ந்து ஜெனரேட்டரின் பின்னணியில் உள்ள மின்காந்தத் தூண்டலைக் கண்டறிந்தார். இந்தக் கண்டறிதல்தான் மின்துறையில் சக்திவாய்ந்த புதிய தொழில்நுட்பமாக மாறியது. மின்சாரம் பற்றிய கருத்துகளைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து மேம்படுத்தினார். மின் கட்டணத்திற்கும் மின் கொள்ளளவுக்கும் யூனிட்டைப் பயன்படுத்தினார்.

டிரினிட்டி ஹவுஸின் அறிவியல் ஆலோசகர், ராயல் மிலிட்டரி அகாடமியில் வேதியியல் பேராசிரியர் எனப் பல பதவிகள் ஃபாரடேவைத் தேடிவந்தன. ஒரு முறை விஞ்ஞானி ஹம்ப்ரி டேவியிடம் உங்கள் கண்டறிதலில் எதைச் சிறப்பாகக் கருதுகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு, ”மைக்கேல் ஃபாரடே” என்று பதிலளித்தார் ஹம்ப்ரி டேவி.

1867, ஆகஸ்ட் 25 அன்று 77-வயதில் ஃபாரடே மறைந்தார். எளிய முறையில் ஆரம்பித்த அவரின் வாழ்க்கை, அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க எளிய முறையில் அடக்கம் செய்யப்பட்டது. சாதனையாளராக உருவாக ஆர்வமும் விடா முயற்சியும் இருந்தால் போதும், வறுமையோ உயர்கல்வியோ தடையில்லை என்பதை உணர்த்தியிருக்கிறார் மைக்கேல் ஃபாரடே.

- கட்டுரையாளர், எழுத்தாளர்

> முந்தைய அத்தியாயம்: ரைட் சகோதரர்கள் | விஞ்ஞானிகள் - 13

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x