Published : 19 Dec 2024 09:53 AM
Last Updated : 19 Dec 2024 09:53 AM
எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமது ரையுள் சிலை குனித்து ஐந்தலைய
பைந்நா கத்தலை பாய்ந்தவ னே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே
"அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நல்ல நாளொன்றில் வடமதுரையில் அவதரித்த கண்ணப்பெருமானே ! என்றைக்கு நாங்கள் உன் அடிமை என்று சாசனம் எழுதிக்கொடுத்தோமோ அன்றே நாங்கள் நற்கதியடைந்துவிட்டோம். மன்னன் கம்சனின் ஆயுதசாலைக்குள் புகுந்து அவனது வில்லை முறித்தவனே! காளிங்கன் என்னும் ஐந்து தலை நாகத்தின் மீது நடம் செய்தவனே ! உனக்கு நாங்கள் பல்லாண்டு பாடி மகிழ்கிறோம்"
கைவல்ய நிலையை விடுத்து, பெருமாளோடு இணைந்திருக்கும் இன்பமே மேலான இன்பம் என்பதை உணர்ந்த முன்னாள் கைவல்யார்த்திகள் பெருமாளுக்குப் பல்லாண்டு பாடுவது போல் பெரியாழ்வார் இயற்றியுள்ள இந்த பாசுரத்துக்கு இது தான் பொருள்.
"எழுத்துப்பட்ட" என்பதற்கு சங்கு, சக்கரம் ஆகிய திருச்சின்னங்கள் உடலில் சித்திரமாக எழுதப்பட்ட என்று அர்த்தம். 'இந்த ஜீவாத்மா, பரமாத்மாவாகிய நாராயணனுக்கே அடிமை' என்பதை அறிவிக்கவே இந்த சடங்கு. இந்தச் சித்திர அடையாளங்களை நீங்கள் ஒருபோதும் அழிக்க முடியாது. மேலும் எழுத்துப்பூர்வமான ஆதாரம் என்பது என்றைக்குமே ஒரு வலிய ஆவணம் அல்லவா!!
அவதாரம் என்ற வடசொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் தோன்றுதல். அதனால் தான், கண்ணபிரானின் அவதார நிகழ்வைச் சொல்லும் போது, "திருமதுரையில் செந்நாள் தோற்றி" என்கிறார் பெரியாழ்வார்.
அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் இணையும் நாளைத் தான் வடமொழியில் ஜெயந்தி என்பர். இவ்விரண்டும் இணைந்த நாளில் கிருஷ்ணன் பிறந்தான் என்பதால் அந்த நாளை கிருஷ்ண ஜெயந்தி என்கிறோம். ஆனால், இந்நாளில் ஜெயந்தி என்ற சொல்லை நாம் 'பிறந்த நாள்' என்னும் சொல்லில் பயன்படுத்துகிறோம். இது தவறு.
கண்ணன் பிறந்த நாள் என்பதால், செம்மையான நாள் என்னும் பொருள் பட 'ஜெயந்தி' என்னும் சொல்லை 'செந்நாள்' என்று அழகாக மொழிபெயர்க்கிறார் பெரியாழ்வார். ஜெயந்தி என்பதை நன்னாள் என்றோ திருநாள் என்றோ அவர் மொழிபெயர்த்திருக்கலாம். ஆனால், கண்ணன் பூமிக்கு வந்த நாள் தான், நாள்களில் சிறந்த நாள் என்று அவர் கருதியதாலோ என்னவோ 'செந்நாள்' என்னும் சொல் அவருக்குத் தோன்றியிருக்கிறது. இல்லை. கண்ணன் அவ்வாறு அவருக்குத் தோன்றச் செய்திருக்கிறான்.
- நிரஞ்சன் பாரதி, தொடர்புக்கு: niranjanbharathi@gmail.com
முந்தைய பகுதி > உயிருக்கு நிறமுண்டு | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 3
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT