Published : 18 Dec 2024 06:12 AM
Last Updated : 18 Dec 2024 06:12 AM
மழைக் காலங்களில் விடுக்கப்படும் ஆரஞ்சு, மஞ்சள், சிவப்பு எச்சரிக்கைகளுக்கு என்ன அர்த்தம், டிங்கு? - ஜி. இனியா, 8-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
இந்திய வானிலை ஆய்வு மையம் சில வண்ணக் குறியீடுகள் மூலம் வானிலை எச்சரிக்கைகளை விடுக்கிறது. பச்சை வண்ணம் லேசான மழை அல்லது வறண்ட வானிலையைக் குறிக்கிறது. இதற்கு எச்சரிக்கை கிடையாது. மஞ்சள் வண்ணம் மிதமான மழையைக் குறிக்கிறது. கடுமையாக இல்லாவிட்டாலும் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களைச் சற்றுக் கவனமாக இருக்கச் சொல்கிறது.
24 மணி நேரத்துக்குள் 115.6 மி.மீ முதல் 204.4 மி.மீ. வரை கனமழை இருக்கும் என்பதைக் கணிக்கும்போது, ஆரஞ்சு வண்ண எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்பதைத் தெரிவிக்கிறது. 24 மணி நேரத்துக்குள் 204.5 மி.மீ.க்கு மேல் மிகவும் கடுமையான மழைப் பொழிவு இருக்கும்போது சிவப்பு வண்ண எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. இது உயிருக்கும் உடைமைக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் பாதுகாப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது, இனியா.
இசைக்கு நாம் மயங்குவது ஏன், டிங்கு? - க. முனீஸ்வரன், 6-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.
நமது மூளையில் நடக்கும் சில அற்புதமான விஷயங்களால்தான் இசை நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நாம் இசையைக் கேட்கும்போது 'டோபமைன்' என்கிற மகிழ்ச்சி ஹார்மோனை நம் மூளை சுரக்கிறது. இது நமக்கு மகிழ்ச்சியான உணர்வைத் தருகிறது. நாம் கேட்கும் பாடல்கள் நம் இனிமையான நினைவுகளை மீண்டும் நினைவூட்டுகின்றன.
நாம் இசையைக் கேட்கும்போது தலையை ஆட்டுகிறோம், கால்களைத் தட்டுகிறோம். எனவேதான், நாம் சோகமாக இருக்கும்போதுகூட இசையைக் கேட்டால் நமக்கு மகிழ்ச்சி வருகிறது. இது நம் மூளையின் அற்புதமான செயல்பாடு, முனீஸ்வரன்.
தான் செய்த தவறுக்கு தோழி மன்னிப்பு கேட்கிறாள். நான் மன்னிக்கலாமா, வேண்டாமா, டிங்கு? - வி. நிர்மலா குமாரி, 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.
ஏதோ ஒரு சூழலில் தவறு செய்துவிட்டாலும் அது தவறு என்பதை உணர்ந்து, உங்களிடம் மன்னிப்பும் கேட்கிறார் என்றால், அந்தத் தோழியை மன்னித்து விடலாம் நிர்மலா குமாரி. இந்த மன்னிப்பு அவருக்கு இன்னொரு முறை தவறு செய்யும் எண்ணத்தைத் தடுத்துவிடும். உங்கள் மீது முன்பிருந்ததைவிட மதிப்பும் அன்பும் அதிகமாகும். உங்கள் தோழிதானே, மன்னித்துவிடுங்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT