Last Updated : 16 Dec, 2024 09:32 AM

1  

Published : 16 Dec 2024 09:32 AM
Last Updated : 16 Dec 2024 09:32 AM

பாலாடை போன்ற பக்தர்கள் | ஆழ்வார்களின் அமுதத் தமிழ் - 1

ஆணாகப் பிறந்தாலும் பெருந்தாய்மையின் திருவுருவாய்த் திகழ்ந்தவர் பெரியாழ்வார். அதனால்தான் எல்லாம் வல்ல திருமால் மீது யாரேனும் கண் வைத்து விடுவார்களோ என்று அவருக்கு பயமாயிருந்தது. இந்த பயம் பக்தியின் உச்ச நிலை. ஆனால், பெரியாழ்வாருக்கு இது போதவில்லை. தன்னைப் போலுள்ள ஏனைய பக்தர்களும் திருமாலுக்குப் பல்லாண்டு பாட வேண்டும் என்று அவர் விரும்பினார்.

பகவல்லாபார்த்திகள், கைவல்யார்த்திகள், ஐஸ்வர்யார்த்திகள் என பக்தர்கள் மூன்று வகைப்படுவர். பரமாத்மாவான திருமாலை அனுபவிக்க விரும்புவோர் பகவல்லாபார்த்திகள். சீவாத்மாவை மட்டும் அனுபவிக்க விரும்புவோர் கைவல்யார்த்திகள். உலகியல் இன்பங்களை மட்டும் அனுபவிக்க விரும்புவோர் ஐஸ்வர்யார்த்திகள்.

இந்த மூவகை பக்தர்களில், ‘கைவல்யார்த்தி’ களை அழைக்கும் பெரியாழ்வார்,

‘ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்து

கூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ

நாடுநகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்று

பாடுமனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே’

என்று பாடுகிறார்.

‘கைவல்யம் என்னும் குற்றத்திற்குரிய நிலையைக் கைவிடுங்கள். ஆத்மானுபவம் போதும் என உங்களுக்கு நீங்களே ஏற்படுத்திக் கொண்ட சிறையிலிருந்து வெளியே வாருங்கள். ‘நமோ நாராயணாய’ என்று ஊரறியப் பாடி இறைவனுக்குத் தொண்டு செய்து மகிழும் பகவல்லாபார்த்திகள் நாங்கள். எங்கள் குழுவில் விரைந்து இணைந்து, இறைவனுக்குப் பல்லாண்டு பாடுங்கள்’ - இது தான் இந்தப் பாசுரத்தின் பொதுவான பொருள்.

இதில் ‘கைவல்யம்’ என்னும் நிலையைக் குறிப்பிடும்போது, ஏடுநிலம் என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார் பெரியாழ்வார்.

இங்கே ஏடு என்றால் உடல். நிலம் என்றால் பூமி. ‘ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம்’ என்றால், இறப்பதற்கு முன் கைவல்ய நிலையை விட்டுவிடுங்கள் என்பது ஒரு பொருள். ஆனால், வைணவ ஆசாரியர்கள் ‘ஏடுநிலம்’ என்பதற்கு சூட்சுமமான இன்னொரு பொருளைச் சொல்கிறார்கள்.

ஸ்தூல சரீரமென்றும் சூட்சும சரீரமென்றும் நம் உடல் இருவகைப்படும். ஸ்தூல சரீரத்தை பருவுடல் என்றும், சூட்சும சரீரத்தை நுண்ணுடல் என்றும் தூய தமிழில் குறிப்பிடுவர். ஸ்தூல சரீரத்தை பார்க்கலாம், தொடலாம். ஆனால், ஸ்தூல சரீரத்துக்குள் இருக்கும் சூட்சும சரீரத்தைப் பார்க்கவோ தொடவோ முடியாது. உணர மட்டுமே முடியும்.

பாலில் திரண்டிருக்கும் ஏடு எப்படி அந்தப் பாலின் சாரமாக விளங்குகிறதோ, சூட்சும சரீரமானது, ஸ்தூல சரீரத்தின் சாரமாக விளங்குகிறது. எனவே ‘ஏடு’ என்பது சூட்சும சரீரத்தையும் குறிக்கும்.

இந்த சூட்சும சரீரத்திற்குள் காரண சரீரம் என்னும் இன்னொரு சரீரமும் உள்ளது. இதற்குள்ளே சூட்சும சரீரம் போய் ஒன்றி அமிழ்ந்திருப்பதைத் தான் நாம் ‘கைவல்யம்’ என்கிறோம். இதைத் தான் ஆசாரியர்கள், ‘ஆத்மானுபவம்’, ‘சமாதி நிலை’ என்கிறார்கள். ஆதலால், ‘ஏடுநிலத்தில் இடுவதன் முன்னே’ என்பதற்கு ‘ஆன்மா தன்னைத் தானே அனுபவிக்கும் அந்த கைவல்ய நிலைக்குச் செல்லும் முன்னே’ என்பது பொருள்.

கைவல்யார்த்திகளைத் தொடர்ந்து ஐஸ்வர்யார்த்திகளையும் அழைக்கிறார் பெரியாழ்வார். அதை எப்படிச் செய்கிறார் என்று அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

- தொடர்புக்கு: niranjanbharathi@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x