Published : 13 Dec 2024 01:44 PM
Last Updated : 13 Dec 2024 01:44 PM
தெய்வங்களின் லீலா விநோதங்கள், புராணக் கதைகளாகி நல்ல குணங்களை மக்கள் உணர உதவுகின்றன. பொய் சொன்னால் என்னவாகும் என்பதையும், அகந்தை கொள்ளக் கூடாது என்பதையும் விளக்குவதே அண்ணாமலையார் ஜோதியாய் உருவான கதை.
படைக்கும் தொழில்கொண்டவர் பிரம்மா. பக்தர்களைக் காக்கும் கடவுள் விஷ்ணு. இவர்களிடையே யார் பெரியவர் என்ற வாக்குவாதம் எழுந்தது. அப்பொழுது அங்கு வந்த சிவபெருமான், அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார். தான் ஜோதி ரூபமாக வானத்துக்கும் பூமிக்குமாக உயர இருப்பதாக கூறி, தனது அடி, முடியை யார் முதலில் கண்டு வருகிறாரோ அவரே பெரியவர் என்றார். இந்த போட்டிக்கு இருவரும் ஒப்புக்கொண்டனர்.
தீப மங்கள ஜோதி ரூபமாய் விஸ்வரூபம் எடுத்தார் சிவன். அன்னமாய் மேல் நோக்கி பயணித்தார் பிரம்மா. பன்றி ரூபம் கொண்டு பூமியை துளைத்து சென்றார் விஷ்ணு. பிரம்மாவின் வழியில் தென்பட்டது தாழம்பூ ஒன்றின் மடல். பிரம்மாவுக்கு ஆச்சரியம், பூமியில் பூக்கும் தாழம்பூ வானத்துக்கு வந்தது எப்படி என்பதே அது.
பூவிடமே கேட்டார். சிவன் தலையில் இருந்து விழுவதாக பொய் சொன்னது அந்தப் பூ. உடனே பிரம்மன் பொய் நாடகம் ஒன்றை கணப்பொழுதில் உருவாக்கினார். சிவன் முடியைத் தொட்டு இந்த தாழம்பூவை எடுத்து வந்ததாக தான் கூறப்போவதாகவும், அதனை உண்மை என்று தாழம்பூ கூற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
தாழம்பூ சம்மதித்தது. சிவனிடம் சென்றார்கள். இந்தப் பொய் நாடகத்தை நிறைவேற்றினார்கள். ருத்திர ரூபனான, ஒளிப் பிழம்பான சிவன், இப்பொய் நாடகத்தைக் கண்டு மேலும் கோபத்தால் சிவந்தார். உண்மையைப் போட்டு உடைத்தார். அவர்களுக்கு தண்டனையையும் வழங்கினார். தாழம்பூ இனி தான் தரிக்கத் தகுந்தது அன்று என்றார். பிரம்மனுக்கோ இனி புவியில் பூஜையும் இல்லை, கோயிலுமில்லை என்றார். விஷ்ணுவோ போட்டியின்றி வென்றார்.
அந்த அக்னி ரூபமே அண்ணா மலையானார். அவரது ஆத்ம பத்தினியாக உண்ணாமுலையார் என பெயர் பெற்ற பார்வதி. அடி, முடி காண முடியாத ஜோதி ரூபமாய் சிவன் விஸ்வரூபம் எடுத்து நின்ற தலம் திருவண்ணாமலை. ஈசன் பக்தர்கள் வாழ்வுக்கு ஒளியை வாரி வழங்கும் நாள் கார்த்திகை தீபத் திருநாள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT