Last Updated : 11 Dec, 2024 06:39 AM

 

Published : 11 Dec 2024 06:39 AM
Last Updated : 11 Dec 2024 06:39 AM

சொர்க்கம் எங்கே இருக்கிறது? | தேன் மிட்டாய் 32

வானில் என்பார்கள் பலர். கடவுள் எங்கே இருப்பாரோ அங்கேதான் சொர்க்கமும் இருக்கும் என்பது இவர்களுடைய நம்பிக்கை. தூய்மையான, மிருதுவான மேகக்கூட்டங்களுக்கு நடுவில்தான் சொர்க்கம் இருந்தாக வேண்டும் இல்லையா? எனக்கு எல்லா மதங்களிலும் நண்பர்கள் உண்டு என்பதால் எல்லாரிடமும் தனித்தனியே இது குறித்துப் பேசி இருக்கிறேன்.

எல்லாருமே வானத்தைத்தான் எனக்குக் காட்டினார்கள். சொர்க்கம் மேல் உலகில்தான் இருக்கிறது எல்வின். இதில் என்ன சந்தேகம் உனக்கு? இன்னொரு தரப்பு நண்பர்களோ, என்னது சொர்க்கமா? அது ஓர் அழகிய கற்பனை என்று கை விரித்துவிட்டனர்.

இவர்கள் அறிவியலை நம்புபவர்கள், நவீனத்துவத்தை நம்புபவர்கள். வானில் ஓர் உலகம் மிதந்து கொண்டிருக்கும் என்பதை இவர்களால் நம்ப முடியவில்லை. என்னால் சொர்க்கத்தை ஏற்கவும் முடியவில்லை, கைவிடவும் முடியவில்லை. இன்பமும் அமைதியும் அழகும் அரவணைப்பும் நிறைந்திருக்கும் ஓர் உலகம் நிச்சயம் எங்கேனும் ஒளிந்துகொண்டிருக்கும் என்று நம்பவே நான் விரும்பினேன். ஆனால் அது எங்கே இருக்கிறது?

ஒரு நாள் கோண்டு பழங்குடி மனிதர் ஒருவரைச் சந்தித்தேன். அது, இது என்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்தபோது, சரி இவரிடம் கேட்டுப் பார்த்தால் என்ன என்று தோன்றியது. எழுதவோ படிக்கவோ தெரியாது என்றாலும் நிச்சயம் பழங்குடிகளுக்கும் கடவுள் நம்பிக்கை உண்டு. அவர்களுக்கு நிச்சயம் சொர்க்கம் குறித்துத் தெரிந்திருக்கும். என்னதான் சொல்கிறார் என்று பார்ப்போமே!

மெல்ல பேச்சுக் கொடுத்தேன். உங்களுக்குச் சொர்க்கத்தில் நம்பிக்கை இருக்கிறதா? கடகடவென்று சிரித்தார் அவர். “இதென்ன இப்படி ஒரு கேள்வி கேட்கிறீர்கள்.

யாராவது மழையில் நனைந்துகொண்டே, மழையின்மீது உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்பார்களா? பழத்தைச் சுவைத்துக்கொண்டு இருக்கும் ஒருவர், பழம் என்றொன்று இருக்கிறதா என்று சிந்திப்பாரா? உங்கள் கேள்வி அப்படித்தான் இருக்கிறது.” திகைப்போடு அவரைப் பார்த்தேன். “அப்படியானால் சொர்க்கம் எங்கே இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் கண்டிருக்கிறீர்களா?”

இதற்கும் கடகடவென்று சிரிப்புதான் பதிலாக வந்தது. “நான் வணங்கும் கடவுளும் சொர்க்கமும் ஒன்றுதான். சொர்க்கத்தில்தான் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அங்கேதான் நீங்களும் நானும் நடந்தபடி இப்போது உரையாடிக் கொண்டிருக்கிறோம்.” நடப்பதை நிறுத்திவிட்டு ஒரு கணம் சுற்றிலும் பார்வையிட்டேன். இதுவா? இதுவா சொர்க்கம்? “ஆம், இதுவேதான்.

காடுதான் சொர்க்கம். காடுதான் கடவுள். கடவுளின் அருகில், அவர் விரல்களைப் பற்றிக்கொண்டு, அவருடைய அருள் நிறைந்த கண்களைப் பார்த்துக் கொண்டு, அவருடைய கதகதப்பான அணைப்புக்குள் நாம் அனைவரும் கட்டுண்டு, வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.”

“நாம் என்றால் என்னையுமா சொல்கிறீர்கள்? நான் பிரிட்டனைச் சேர்ந்த வெள்ளை மனிதன் அல்லவா? உங்கள் கடவுள் என்னையும் ஏற்றுக்கொள்வாரா?” “எல்லாரையும் ஏற்றுக் கொள்ளும் பண்பு இருப்பதால்தான் காட்டை நாங்கள் கடவுளாக வழிபடுகிறோம். நீங்கள் வெள்ளையா, கறுப்பா என்று பார்த்து காடு நிழல் தருவதில்லை, கனி தருவதில்லை.

நீங்கள் மனிதரா, விலங்கா, பூச்சியா என்றுகூடக் காடு பார்ப்பதில்லை. காட்டைப் பொறுத்தவரை நாம் அனைவரும் ஓர் உயிர். மேலான உயிர், கீழான உயிர், நல்ல உயிர், தீய உயிர் என்று எல்லாம் அது பேதம் பிரிப்பதில்லை. பறவைகளும் பாம்புகளும் பாய்ந்து கடிக்கும் விலங்குகளும்; மீன்களும் முயல்களும் வாய் திறந்து உறங்கும் முதலைகளும்; பூக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் பூரான்களும் அருகருகில் வாழும் இடம் இது.”

“எல்லா நம்பிக்கைகளுக்கும், எல்லாக் கனவுகளுக்கும், எல்லா வாழ்க்கை முறைகளுக்கும் காட்டில் இடம் இருக்கிறது. நாடிவந்த ஒருவரையும் பசியில் தவிக்க விட்டதில்லை காடு. குளிர், மழை, வெயில், வளம் எதையும் யாருக்கும் மறுத்ததில்லை காடு. உலகம் தொடங்கிய இடம் இது.

உலகம் முடிவடையும் இடமும் இதுவே. எல்லாச் சத்தங்களும் ஒலிப்பதால்தான் அமைதியான இடமாகக் காடு இருக்கிறது. எவருக்கும் சொந்தமானதல்ல என்பதால்தான் எல்லாருக்கும் சொந்தமானதாக இருக்கிறது காடு. அதனால்தான் காட்டைக் கடவுள் என்கிறோம். சொர்க்கம் என்றும் சொல்கிறோம்.”

சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் நரகமும் இருக்கும் அல்லவா? “ஆம், இருக்கிறது. சொர்க்கத்துக்கு மிக அருகில் நரகம் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அனைத்து நம்பிக்கைகளும் அனைத்து உயிர்களும் அனைத்து வாழ்க்கை முறைகளும் அனைத்து ஒலிகளும் அனைத்துக் கனவுகளும் ஒன்றுகூடி வாழும் ஓர் இடம் இருக்கக் கூடாது என்று நரகம் நினைக்கிறது.

வளங்கள் அனைவருக்கும் பொதுவானவை என்பதை நரகம் ஏற்க மறுக்கிறது. யார் வலிமை மிகுந்தவரோ அவரிடமே வளம் சேர வேண்டும். மற்றவர்கள் அவரிடம் கைகட்டி நிற்க வேண்டும் என்று நரகம் எதிர்பார்க்கிறது.”

“நரகம் ஓயாமல் சொர்க்கத்தோடு போரிட்டுக் கொண்டே இருக்கிறது. மரங்களை, நதிகளை, ஓடைகளை, மலைகளை, மலர்களை, உயிர்களை நரகம் தொடர்ச்சியாக விழுங்கிக்கொண்டே இருக்கிறது.

சொர்க்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றி அங்கு புகை கக்கும் தொழிற்சாலைகளையும் பிரம்மாண்டமான கட்டிடங்களையும் கட்டியமைக்க நரகம் துடிக்கிறது. பூக்களும் வண்டுகளும் மான்களும் செடிகளும் கொடிகளும் தேவை இல்லை. அகற்றுங்கள் என்று கூச்சலிடுகிறது நரகம். ஒரு பெரிய நாடு சிறிய நாட்டைக் கைப்பற்றலாம்.

வெள்ளை மனிதர்கள் கறுப்பு மனிதர்களை அடிமைப்படுத்தலாம். பெரிய கடவுள் சிறிய கடவுளை விழுங்கலாம். பெரிய மதம் சிறிய மதத்தை அகற்றலாம் என்று எல்லாம் சிந்திக்கிறது நரகம். சொர்க்கமோ, நீயும் வா. என்னிடம் நிறைய இடம் இருக்கிறது என்கிறது.

இப்போது சொல்லுங்கள், காடும் சொர்க்கமும் ஒன்றுதானே?” நான் அவர் கரத்தைப் பற்றிக்கொண்டு புன்னகை செய்தேன். “ஆம், ஒப்புக்கொள்கிறேன் நண்பரே. இனி உங்கள் கடவுள்தான் என்னுடையவர். இனி சொர்க்கத்தை வேறு எங்கும் தேட மாட்டேன்!”

வெரியர் எல்வின் | இங்கிலாந்தில் பிறந்து, இந்தியக் குடியுரிமை பெற்ற மானுடவியலாளர். இந்தியப் பழங்குடிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து, 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். இவர் எழுதிய நூல் ஒன்று, ‘உலகம் குழந்தையாக இருந்தபோது’ என்கிற தலைப்பில் தமிழிலும் வந்திருக்கிறது.

(இனிக்கும்)

- marudhan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x