Published : 11 Dec 2024 06:12 AM
Last Updated : 11 Dec 2024 06:12 AM
இருபத்திரெண்டே வயதேயான அன்பு படிப்பில் கெட்டிக்காரர். சிறு வயது முதலே எந்தவொரு செயலிலும் வெற்றிபெற வேண்டும் என்கிற முனைப்பு அன்புவுக்கு உண்டு. அப்படி விளையாட்டாகக் கிடைத்த ஒரு வெற்றிதான் அன்புவின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது.
நண்பர்களின் வற்புறுத்தலால் இணையவழி சூதாட்டம் ஆடத் தொடங்கியவருக்கு, ஆரம்பத்தில் கிடைத்த வெற்றி உற்சாகம் தர, ஆர்வத்தைத் தூண்டிவிட அந்த விளையாட்டுக்கு அடிமையானார். தமக்கு ஒரு சிறப்புத் திறமை இருப்பதால்தான் வெற்றி கிடைப்பதாக நம்பிய அவர், இணையவழி சூதாட்டத்தில் அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடத் தொடங்கினார்.
ஆனால், இணையவழி சூதாட்டத்தில் ஒரு கட்டத்தில் இழப்பு வர ஆரம்பித்தபோது அவரை அறியாமலேயே அதிலிருந்து மீளமுடியாத நிலைக்குச் சென்று இருந்தார். பாதகம் எனத் தெரிந்தும் அதிலிருந்து அவரால் வெளியே வரமுடியவில்லை. இழந்ததை மீட்கவும், இழப்பைச் சரிசெய்யவும் மீண்டும் இணையவழி சூதாட்டத்தையே கையில் எடுத்தார். கடன் வாங்கியாவது சூதாட வேண்டும் என்கிற மோசமான மனநிலைக்கு தள்ளப்பட்டிருந்த அவர் வேலையைத் தவிர்த்ததோடு, குடும்பத்தினர், நண்பர்களிடம் பொய் சொல்லவும் ஆரம் பித்தார்.
இந்நிலையில் தனது மன நிலையைக் கட்டுப்படுத்த முடியாமல் குற்றவுணர்வுக்கு உள்ளானதோடு செய்வதறியாது, வெளியிலும் சொல்ல முடியாமல் அவதிப்பட்டார். அவசர நிலையில் அவர் மேற்கொண்ட தவறான முடிவுகளால் பொருளாதார ரீதியான சட்டப் பிரச்சினை களிலும் சிக்கிக்கொண்டார்.
தனக்கு உதவி கிடைப்பது சாத்தியமில்லை என்கிற கையறு நிலையில், வாழ்வதில் என்ன பயன் என்கிற மனநிலை அவரை முழுமையாக ஆட்கொண்டிருந்தது. இணையவழி சூதாட்டத்தால் ஏற்பட்ட மனச்சோர்வில் இருந்து விடுபட போதைப்பொருளுக்கும், மதுப் பழக்கத்துக்கும் அடிமையானார். அன்புவைப் போன்று இணைய சூதாட்டத்தில் ஈடுபட்டு பாதிக்கப்படுபவர்கள் பெரும் பாலும் யாரிடமும் உதவி கேட்க முன்வருவதில்லை.
பொருளாதார நெருக்கடியினாலோ அல்லது அவர்களுக்கு ஏற்படும் இதர மனநல சிக்கல்களினாலோ உறவினர்கள் அல்லது நண்பர்கள் பாதிக்கப் பட்டவரை மருத்துவ ஆலோசனைப் பெற அழைத்து வருவார்கள். அப்படியொரு நிலையில்தான் அன்புவைக் கூட்டிக் கொண்டு அவரது தந்தை என்னைச் சந்திக்க வந்தார்.
இப்படிப் பொழுதுபோக்காக ஆரம்பிக்கும் இணையவழி சூதாட்டம், பின்பு ‘பணம் வந்தால் லாபம்தானே’ என்கிற மனநிலைக்கு ஒருவரைத் தள்ளிவிடுகிறது. இப்பழக்கத்தினால் பல மாணவர்களின் படிப்பும் எதிர்காலமும் கேள்விக்குறியாவது மட்டுமன்றி, பல குடும்பங்கள் நிம்மதியை இழந்துவிடுகின்றன.
மீண்டு வருவதற்கான வழிகள் எதிலும் ஈடுபாடு இல்லாமை, பெரும் பாலும் சோர்வுற்று இருப்பது, குடும்ப, அலுவலக வேலைகளில் கவனம் இல்லாதிருத்தல், உடல்நலத்தைப் பற்றியஅக்கறை இல்லாமல் இருப்பது, வாழ்க்கையைத் தொலைத்துவிட்டது போன்ற மனநிலையில் இருப்பது, அளவுக்கு அதிகமான சோகம், அதீதக் கவலை, தூக்கமின்மை போன்றவை இணையவழி சூதாட்டத்துக்கு அடிமையானதற்கான அறிகுறி களாக இருக்கலாம். எல்லையை மீறி, தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்பவராகவும் அவர் மாறலாம்.
இது போன்றதொரு சூழலில் இருந்த அன்புவிடம், இணையவழி சூதாட்டத்துக்கு அடிமையாகிவிட்ட நிலைக்கு அவரையே குற்றம் சாட்டாமல் அதேவேளை தீர்மான கரமாக மனதளவில் அதன் பிரச்சினையை ஒப்புக்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது. இதுவே மீண்டு வருவதற்கான முதல் படி. பாதிக்கப்பட்டவர்களைப் பிரச்சினைக்குரிய மனிதராக (problematic person) அணுகாமல், பிரச்சினை உடைய மனிதராக (per son with a problem) அணுகுவதே சரி.
அடுத்த கட்டமாக குற்ற உணர்வைக் களைந்து பிரச்சினையில் இருந்து மீண்டுவர வழிகள் இருக்கின்றன என்று அவருக்கு நம்பிக்கைத் தரப்பட்டது. பொருளாதார இழப்புகளை மருத்துவ ஆலோசனைகளால் ஈடுசெய்ய முடியாது. என்றாலும், இழப்பினைச் சரிசெய்வதற்குத் தேவையான முயற்சியை, சூழலைத் தனிமனித அளவிலும் குடும்பத்தினர் அளவிலும் உருவாக்க முடியும்.
கூட்டு முயற்சியால் அன்புவின் வாழ்க்கையில் மாற்றம் தொடங்கியது. இணையவழி சூதாட்டத்துக்குப் பதிலாக உடற்பயிற்சி மீது கவனத்தைத் திசைத்திருப்பினார் அன்பு. மனக் கவலை, மனச்சோர்வு, தற்கொலை எண்ணங்கள், மனப் பதற்றத்துக்கான ஆரம்பப்புள்ளியைக் கண்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சையின் மூலம் மீண்டு வந்தார் அன்பு. அவரால் முடியும்போது, இந்தப் பிரச்சினையில் இருந்து எல்லாராலும் மீண்டுவர முடியும்தானே?
(தொடர்ந்து பேசுவோம்)
- addlifetoyearz@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT