Last Updated : 06 Dec, 2024 06:31 AM

 

Published : 06 Dec 2024 06:31 AM
Last Updated : 06 Dec 2024 06:31 AM

தரம் உயரும் சென்னை சர்வதேசப் படவிழா! | சிறப்புப் பார்வை

உலக சினிமாக்களைச் செயலிகள் வழியாகக் காண முடியும் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. ஆனால், உலக சினிமாக்களைப் பெரிய திரையில் காண்பதன் மூலமே முழுமையான திரை அனுபவத்தைப் பெற முடியும்.

அதிலும் மிகக் குறைந்த கட்டணத்தில் நூற்றுக்கும் அதிகமான பன்மொழித் திரைப்படங்களை ஒரு பெரும் கொண்டாட்டமாகக் காண முடியும் என்கிற சாத்தியத்தைச் சர்வ தேசப் படவிழாக்களே உருவாக்குகின்றன. அந்த வரிசையில் கோவா, திருவனந்தபுரம் பட விழாக்களுக்கு இணையான புகழைப் பெற்றிருக்கிறது சென்னை சர்வதேசப் பட விழா.

அதன் 22 வது பதிப்பைத் தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் நடத்த உள்ளனர். ஏவி.எம். கே.சண்முகம் (படவிழா இயக்குநர்), சிவன் கண்ணன், ஆனந்த் ரெங்கசுவாமி, சுரேஷ் மேனன் உள்ளிட்ட படவிழா குழுவினர் இம்முறை சென்னை சர்வதேசப் படவிழாவை மேலும் தரமுயர்த்தும் நோக்கத்துடன் பல மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள்.

டிசம்பர் 12ஆம் தேதி தொடங்கும் படவிழாவை, சென்னையின் அதிநவீன 4கே மற்றும் டால்பி அட்மாஸ் ஒளி - ஒலி தொழில்நுட்பம் நிறுவனப்பட்ட மல்டி ப்ளக்ஸ் திரையரங்குகளான சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள சத்யம் சினிமாஸ், மயிலாப்பூரின் ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள ஐநாக்ஸ் பி.வி.ஆர். ஆகிய வளாகங்களில் நடத்துகின்றனர்.

இம்முறை இணையம் வழியாக இரண்டே ‘கிளிக்’குகளில் மிக எளிதாகப் பதிவு செய்து சினிமா ஆர்வலர்கள் நுழைவுச் சீட்டுகளைப் பெறும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். கான் தொடங்கி உலகின் ‘டாப் 10’ சர்வதேசப் படவிழாக்களில் விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ள பல முக்கியமான புதிய படங்களின் தேர்வும், பன்னாட்டு தூதரங்களின் கூட்டுறவுடன் தருவிக்கப்பட்டுள்ள பன்மொழிப் படங்களின் தேர்வும் உலக சினிமா ஆர்வலர்களையும் திரைக் கல்விபயிலும் மாணவர்களையும் ஈர்த்திருக்கிறது.

குறிப்பாக, உலகப் படங்களுக்கான போட்டிப் பிரிவு தொடங்கப்பட்டிருக்கும் நிலையில், ஏராளமான பன்னாட்டுப் படங்கள் வந்து குவிந்தன. அவற்றிலிருந்து சிறந்த 12 படங்களை ஒளிப்பதிவாளர், இயக்குநர் சந்தோஷ்சிவன் தலைமையிலான தேர்வுக் குழுவினர் தேர்வு செய்து அசத்தியிருக்கிறார்கள். இந்த 12 படங்களைக் காண ஆர்வலர்கள் நிச்சயமாக முண்டியடிப்பார்கள். அதேபோல், தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரி மாணவர்களின் டிப்ளமா குறும்படங்களுக்கும் வரவேற்பு இருக்கும்.

தவிர, உலகப் பட போட்டிப் பிரிவில் பங்கேற்கும் பல இயக்குநர்கள் திரையிடலுக்குப் பிறகு பங்குகொள்ளும் ‘மாஸ்டர் டாக்ஸ்’ கலந்துரையாடல் மற்றும் மாஸ்டர் கிளாஸ் நிகழ்ச்சிகள், காட்சியியல் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பெரும் வரமாக அமையும் என நம்பலாம். இந்த விழாவை ஒழுங்கமைவு செய்யும் தன்னார்வலர்கள் பணியில் சென்னையின் புகழ்பெற்ற கல்லூரி களான ஆவிச்சி கலை - அறிவியல் கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை - அறிவியல் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுகின்றனர்.

இத்தனை சிறப்புகளைத் தாண்டி, படவிழாவின் ‘ஓபனிங் பிலிம் - குளோசிங் பிலிம்’ படங்கள் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தும் படங்க ளாக அமைவது அபூர்வம். அதை இந்த முறை சாத்தியமாக்கியிருக்கிறது படவிழா குழு. கோவா படவிழாவுக்குக்கூட கிடைத்திராத, கான் படவிழாவில் தங்கப்பனை விருதுபெற்ற காதல் திரைப்படமான ‘அனோரா’ (Anora) நிறைவு நாள் திரைப்படமாகத் திரையிடப்படுகிறது. தொடக்க விழா திரைப்படமாக ‘தி ரூம் நெக்ஸ்ட் டோர்’ (The Room Next Door) திரையிடப்படுகிறது. நட்பின் மேன்மையைப் பேசும் இப்படம், வெனிஸ் திரைப்பட விழாவில் தங்கச் சிங்கம் விருதை வென்றது.

கடும் போட்டி: தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில் கடந்த 5 ஆண்டுகளாக அதிகபட்சமாக 15 படங்கள் கலந்துகொண்டிருக்கின்றன. ஆனால் இம்முறை பார்வையாளர்களும் விமர்சகர்களும் கொண்டாடிய படங்களின் எண்ணிக்கை உயர்ந்தது. அது, தமிழ் படங்களுக்கான போட்டிப் பிரிவிலும் எதிரொலித்தது.

அமரன், போட், புஜ்ஜி அட் அனுப்பட்டி, செவப்பி, ஜமா, கொட்டுக்காளி, கோழிப்பண்ணை செல்லத்துரை, லப்பர் பந்து, மகாராஜா, மெய்யழகன், நந்தன், ரசவாதி, தங்கலான், வாழை, வெப்பம் குளிர் மழை, வேட்டையன், டிமாண்டி காலனி 2,கருடன், ஹாட்ஸ்பாட், லாக்டவுன், நீல நிற சூரியன், பார்க்கிங், டீன்ஸ், வல்லவன் வகுத்ததடா, அயலி (இணையத் தொடராக வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர், ஒரு திரைப்படமாக படத்தொகுப்பு செய்யப்பட்டு, போட்டியில் கலந்துகொண்டுள்ளது) உள்பட 25 படங்கள் போட்டியில் மோதுகின்றன.

பரிசுக்குரிய படங்களைத் தேர்வு செய்யும் நீதிபதிகள் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் யார் என்கிற விவரம் படவிழாவின் நிறைவு நாள் நிகழ்வில் தெரியவரும்.

- jesudoss.c@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x