Last Updated : 06 Dec, 2024 12:15 PM

 

Published : 06 Dec 2024 12:15 PM
Last Updated : 06 Dec 2024 12:15 PM

கமனின் ரகசியம் வெற்றிக்கு அவசியம் | சக்ஸஸ் ஃபார்முலா - 29

இன்று மாலை விடுதியின் அறைக்கு வந்த சச்சுவின் முகம் வெளுத்துப் போயிருந்தது. அவர் கண்களில் கண்ணீர் நிரம்பி இருந்தது.

’என்ன ஆச்சு சச்சு?’ என்கிற ஒற்றைக் கேள்விக்காகக் காத்துக் கொண்டிருந்தது போல் தெரிந்தார்.

“சச்சு , என்ன ஆச்சு?”

இரண்டு கைகளால் முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தார்.

“வீட்ல இருந்து போன் ஏதாவது?”

இல்லை என்பது போல் அவர் தலை அசைந்தது. சில நிமிடங்கள் நானும் காத்துக் கொண்டிருந்தேன்.

“நஸீ வேலை போயிடுச்சு. எங்க டீம்ல இருந்து பத்துப் பேரைத் தூக்கிட்டாங்க.”

“இது எதிர்பாராத ஒன்றுதான். ஐந்து வருடம் வேலை செய்த கம்பெனி இப்படிப் பண்ணது வருத்தம்தான். ஆனா வேற ஒரு நல்ல வேலை கிடைக்க இது நடந்திருக்குனு நினைச்சிக்கோ. உனக்கு இருக்கும் எக்ஸ்பீரியன்ஸ்கு வேலைகிடைத்து விடும்.”

சச்சு பதில் சொல்லவில்லை. கண்களிலிருந்து வந்த கண்ணீரைத் தடுக்கும் வழி அவருக்கும் தெரியவில்லை. நான் அவருக்காக காபி வாங்கிக் கொடுத்தேன்.

காபியைக் குடித்துக் கொண்டே அவரைத் தேற்ற, ‘கமன்’ பற்றிப் பேச ஆரம்பித்தேன். ‘கமன்’ என்பது ஜப்பானியக் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு தத்துவம். வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு முழுமையான அணுகுமுறை என்றும் சொல்லலாம்.

எதிர்பாராத ஒன்று நடக்காமல் இருப்பதில்லை. ஏதோ ஓர் இழப்பு, ஒரு துரோகம், தோல்வி என்று அவ்வப்போது நம்மை உண்டு இல்லை என்று செய்துவிடுவது வாழ்க்கையின் இயல்பு.

அப்படி ஒன்று நடக்காமல் தடுக்க நம் யாராலும் முடியாது. ஆனால், அதை எப்படிக் கையாள வேண்டும் என்கிற முடிவும் தேர்வும் நம்முடையது. பொறுமையாக அந்த விஷயத்தை எதிர்கொள்வது, காத்திருப்பது என்று கமனைச் சுருக்கிக் கொள்ள இயலாது.

நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, சூழ்நிலைகளை அமைதியாக எதிர்கொள்ளும் திறனைக் கமன் கற்றுத் தருகிறது. தற்காலிக இன்பதுன்பங்களைத் துறந்து நீண்டகால இலக்குகளை நோக்கிப் பயணிக்கும் ஒரு மனநிலையை ’ கமன்’ தரும்.

நம் மனம் கவலைகளைப் பெரிதுபடுத்திப் பார்க்கும் இயல்புடையது. அந்த இயல்பிலிருந்து விடுவித்துக் கொள்ள கமன் அவசியம். அது மட்டுமல்ல, கமன் கற்றுத்தரும் முக்கியப் பாடம் பொறுமையே வெற்றியின் திறவுகோல். ஆனால், இன்றைய விரைவான உலகில், பொறுமையுடன் செயல்படுவது கடினமாகத் தோன்றலாம். ஆனால், உண்மையான, நிலையான வெற்றிக்கு இது அவசியம்.

கமனைக் கற்றுக் கொள்ள மனத் திடம் இருந்தால் போதும், இந்த 10 வழிகள் பலனளிக்கும்.

1. முதல் படி நமது சிந்தனை முறையை மாற்றுவது. தோல்விகளைத் தாண்ட முடியாத சுவர்களாகப் பார்க்காமல், நமது பாதையில் வரும் தற்காலிகத் தடைகளாகப் பார்க்க வேண்டும்.

2. ஏமாற்றத்தை உணரலாம், ஆனால் அதிலேயே மூழ்கிவிடக் கூடாது. சச்சுவின் சூழலில் அடுத்த வேலைகளுக்கு விண்ணப்பித்து நல்ல வேலை வரும் வரை பொறுமையுடன் இருக்க வேண்டும். அதுதான் கமன்.

3. எரிச்சல், கோபம் போன்ற எதிர்மறை உணர்வுகள் எழும்போது, ஆழ்ந்த மூச்சு எடுத்து, எதிர்வினையாற்றுவதற்கு முன் சிந்திக்க நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

4. உணர்வுகளை அடக்குவது அல்ல கமனின் நோக்கம். மாறாக, அவற்றைப் புரிந்துகொண்டு, அமைதியாகக் கையாள்வதே ‘கமன்’ கலை. ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி செய்வது, அமைதி தரும் இசையைக் கேட்பது போன்றவை பயன் தரும்.

5. நீண்டகால வெற்றிக்குக் கட்டுப்பாடும் கவனமும் மிகவும் அவசியம். நாம் தெளிவான இலக்குகளை நிர்ணயித்து, அவற்றைச் சிறிய, சாதிக்கக்கூடிய படிகளாகப் பிரித்து, முன்னேற்றத்திற்கான பாதையை உருவாக்க வேண்டும்.

6. தோல்விகளைப் பார்த்துச் சோர்ந்துவிட வேண்டாம். மீண்டும் ஆரம்பிக்க மனத்தைத் தயாராக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிய துவக்கம்தான். எத்தனை முறை தோற்றாலும் ஆரம்பிக்க ஆயத்தமாக இருங்கள்.

7. பெரிய புத்திசாலியாக, உழைப்பாளியாக இருப்பது பெரிதல்ல, அவனிடம் பதற்றம் இருந்தால் மற்றவை அனைத்தும் தண்ணீரில் கரைந்த உப்பாகிவிடும். பதற்றத்தைக் குறைக்கச் செயலில் முழுக் கவனமும் பொறுமையும் தேவை.

8. இன்றைய சிறு துன்பங்கள் நாளைய பெரிய மகிழ்ச்சிக்கான விதைகள். இந்தப் புரிதலுடன் முன்னேறும்போது, எந்தச் சவாலையும் தைரியத்துடன் எதிர்கொள்ள முடியும். இதுவே கமனின் ஆழமான பாடம், ’துன்பத்தில் அர்த்தம் காண்பது, அதன் மூலம் வலிமை பெறுவது.’

9. பெரிய பிரச்சினைகளைப் பார்த்துப் புலம்புவதோ அல்லது மனம் தளர்வதோ தீர்வாகாது. மாறாக, நாம் எந்தெந்த வழிகளில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிவதே அறிவுடைமை. நம்மால் முடிந்த சிறு மாற்றங்கள்கூட, காலப்போக்கில் பெரிய மாற்றங்களுக்கு வித்திடும்.

10. கமன் என்பது தனிமையில் போராடுவது அல்ல. உதவி கேட்பதும், நமது தேவைகளை வெளிப்படுத்துவதும் பலவீனத்தின் அடையாளம் அல்ல. மாறாக, மன ஆரோக்கியத்திற்கு இவை மிகவும் அவசியம்.

வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பயணம். அதில் வரும் சவால்களை எதிர்கொள்ள கமன் நமக்கு ஒரு வலிமையான கருவியாக அமைகிறது. பொறுமையுடனும் உறுதியுடனும் செயல்படுவோம்.

(தொடரும்)

- கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார். தொடர்புக்கு: writernaseeema@gmail.com

> முந்தைய அத்தியாயம்: நேரமும் பொன்னும் ஒன்றல்ல | சக்ஸஸ் ஃபார்முலா - 28

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x