Published : 04 Dec 2024 06:06 AM
Last Updated : 04 Dec 2024 06:06 AM
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வு களை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) நடத்துகிறது. இந்தத் தேர்வு இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் சேவை, இந்திய வெளியுறவு சேவை உள்ளிட்ட 24 வெவ் வேறு சேவைகளுக்கான ஆள்களைத் தேர்ந் தெடுக்கிறது. உழைப்பே உயர்வுக்கு வழி என்று சொல்லப்பட்டாலும் கடின உழைப்பு மட்டுமே வெற்றியைத் தேடித் தந்து விடுவதில்லை.
தேர்வில் ‘வெற்றி’ எனும் இலக்கை அடைய மூன்று படிகள் மிகவும் இன்றியமையாதவை. இந்தப் படிகள் அனைத்துத் தேர்வுகளுக்கும் பொருந்தும். குறிப்பாக ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்கு அதிகம் பொருந்தும். அவை: திட்டமிடுதல், செயல்படுத்துதல், சரிபார்த்துத் திருத்திக்கொள்ளுதல். தேர்வாளர்கள் இம்மூன்று படிகளையும் கவனமாகப் பின்தொடர வேண்டியது அவசியம்.
தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, தனிப் பட்ட நேர்காணல் என ஆட்சிப்பணிக்கான தேர்வு முறை மூன்று நிலைகளைக் கொண்டது. இந்திய அரசமைப்பு, வரலாறு, புவியியல், சுற்றுச்சூழல், அறிவியல், தொழில்நுட்பம், சர்வதேச உறவுகள், நடப்பு விவகாரங்கள் ஆகியவை இதற்கான பாடத்திட்டத்தில் முக்கியமானவை.
எந்தவொரு பட்டதாரியும் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள், அதிகபட்ச வயது பொதுப் பிரிவினருக்கு 32, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 35, பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினருக்கு 37 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுப் பிரிவைச் சேர்ந்தவர் 6 முறையும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 9 முறையும் தேர்வில் பங்கேற்கலாம். பட்டியல், பழங்குடி இனத்தைச் சேர்ந்தவருக்கு முயற்சிகளுக்கு வரம்பு இல்லை.
போட்டித் தேர்வுக்கான ஒவ்வொரு பாடத்துக் கும் தரமான பாடப்புத்தகங்கள் உள்ளன. பாடங்களுக்கான சம்பந்தப்பட்ட என்.சி.இ.ஆர்.டி. (NCERT) பாடநூல்களும் போட்டியில் வெற்றிபெறத் தேவை யானவை. முதல் நிலைத் தேர்வுக்குக் குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்பே தேர்வாளர்கள் அர்ப்பணிப்போடு தயாராக வேண்டியது அவசியம். தேர்வு அட்டவணை ஒரு வருடக் காலத்தை உள்ளடக்கியது. வழக்கமாக ஜூன் மாதத்தில் முதல்நிலைத் தேர்வும், செப்டம்பரில் முதன்மைத் தேர்வும், அதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை தனிப்பட்ட நேர்காணலும் நடத்தப்படும்.
திட்டமிடுதல்: அனைத்துப் பாடங்களிலும் உங்களுடைய பலம், பலவீனத்தை முதலில் அறிந்துகொண்டு, அதற்கேற்ப பட்டியலிட்டு அட்டவணை தயார் செய்துகொள்ள வேண்டும். புதிய பாடங்களைப் படிக்கக் காலை வேளை யைப் பயன்படுத்தலாம். முந்தைய வருடங்களின் வினாத்தாள்களைக் கொண்டு பயிற்சிசெய்ய இரவு வேளையைச் செலவிடலாம். இப்படி நேரத்தைப் பிரித்துப் பயன்படுத்தினால் சோர்வடைவதையும் கவனச் சிதறலையும் தவிர்க்க முடியும். தேர்வு எழுதுவது போலவே காலக்கெடு வைத்துக்கொண்டு பயிற்சி மேற்கொள்வது சிறந்தது.
செயல்படுத்துதல்: நம் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை உண்டு. ஒருவரின் வாழ்க்கை, அவருக்குக் கிடைக்கக்கூடிய உணவு, வீட்டின் சூழல், உடல் ஆரோக்கியம், நண்பர்கள் என்று பலவற்றையும் மனதில் கொண்டுதான் தேர்வுக் காகத் திட்டமிட்டதைச் செயல்படுத்த முடியும். எனவே, அட்டவணையைப் பின்பற்றிப் பயிற்சி நேரத்திற் கேற்ப தேர்வுக்குத் தயார் செய்ய முடிகிறதா என்பதைச் சில நாள் களில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கணக்கில் கொண்டு, சுய பரிசோதனை செய்து கண்டறிய வேண்டும்.
தேர்வுக்குத் தயாராகும் உங்கள் திட்டத்தில் மாற்றம் தேவையென்றால் அதைச் சரிசெய்ய வேண்டும். முழு மனதோடு புத்திசாலித்தனத்துடன் அயராது உழைத்தால் வெற்றி நிச்சயம். முக்கியமாக, தேவையற்ற பொழுதுபோக்குகளில் நேரத்தை வீணடிக்காமல் படிக்க வேண்டும். தேவையற்ற பதற்றத்தைத் தவிர்க்க வேண்டும். அதிகாலையில் எழுந்து படிப்பது சிறந்தது. இரவு தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் எதையும் செய்ய வேண்டாம். இப்படித் திட்டமிட்டுத் தேர்வுக்குத் தயாராகும்போது வெற்றி உங்கள் வசப்படும்!
- கட்டுரையாளர், ஐ.ஏ.எஸ் அதிகாரி (ஓய்வு), ‘Polity Simplified’ நூலின் ஆசிரியர்; rangarajanias@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT