Published : 24 Nov 2024 07:58 AM
Last Updated : 24 Nov 2024 07:58 AM
எத்தனையோ தடைகளைக் கடந்துதான் பெண்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது. தங்களுக்குக் கிடைக்கிற சிறு துரும்பைக்கூடப் பற்றிக்கொண்டு முன்னேறும் திறமை பெண்களுக்கு உண்டு. அவர்கள் முன்னேறுவதற்கு அரசாங்கமே கைகொடுத்து உதவும்போது சொல்லவா வேண்டும்? அப்படி அரசுத் திட்டங்களைப் பயன்படுத்தி வெற்றிகண்ட பெண்களின் சாதனைக் கதைகளைத்தான் இந்தப் பகுதியில் பார்க்கவிருக்கிறோம்.
அதற்கான அறிமுகப் பகுதியே இது...
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் வறுமை ஒழிப்பையும் தாண்டி, ஊரகத் தொழில் நிறுவன வளங்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்பட்டுவருகிறது ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் (TNRTP). நிதி ஆதரவு, தொழிற்திறன் பயிற்சிகளோடு நவீன தொழில்நுட்ப ஆதரவுகளை வழங்கி, நிலையான தொழில் வளத்தையும் உயர்வான பொருளாதார பலத்தையும் இந்தத் திட்டம் உறுதிசெய்கிறது. இந்தத் திட்டமானது உலக வங்கி மற்றும் தமிழ்நாடு அரசின் நிதி ஆதரவில் 70:30 சதவீத அடிப்படையில் ரூ. 919.73 நிதியில் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
திட்டம் செயல்படும் பகுதிகள்
தமிழ்நாட்டில் 31 மாவட்டங்களில் 120 வட்டங்களில் 3,994 ஊராட்சிகளில் பசுமைக்குத் தோழமையான தொழில் வளங்களை ஊக்குவித்து வருகிறது. இதன் மூலம் 70 சதவீதப் பெண் தொழில்முனைவோர் பலனடைந்துள்ளனர்.
தொழில்கள் ஊக்குவிப்பு
இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள், சுயஉதவிக் குழுக் குடும்பத்தார், பட்டியலினத்தோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளர்கள், இளைஞர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கிக் கொடுக்கப்படுகின்றன. வேளாண் தொழில்கள், வேளாண் சாராத் தொழில்கள், பசுமையை ஊக்குவிக்கும் புதுமையான தொழில்கள் ஆகியவை அதில் அடங்கும். நுண்தொழில்கள், குறுந்தொழில்கள், சிறுதொழில்கள், தொழிற்குழுக்கள் (EGs), உற்பத்தியாளர் குழுக்கள் (Pgs), உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் (PCs) ஆகியவை அதில் உள்ளடங்கும். பசுமை வளங்களை மீட்டுப் பாதுகாக்கும் நோக்குடன் செயல்படும் இத்திட்டத்தின் வழியாகத் தொழில்முனைவோர்களுக்குச் சமுதாயத் திறன் பள்ளிகள் (CSS), சமுதாயப் பண்ணைப் பள்ளிகள் (CFS) மூலமாகத் தொழிற்திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுத் திறன் உயர்த்தப்பட்டு வருகின்றனர்.
இணை மானிய நிதித் திட்டம் (MGP)
இணை மானிய நிதித் திட்டம் (MGP) என்பது தமிழ்நாட்டின் கிராமப்புற வளர்ச்சியோடு பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதில் தேவை மற்றும் விநியோக இடைவெளியை நிரப்ப உருவாக்கப்பட்ட ஒரு நிதியாகும். இது கிராமப்புறத் தொழில்முனைவோருக்கு முறையான வங்கி இணைப்பைப் பெறுவதை எளிதாக்குகிறது. நிதி நிறுவனங்களிடம் இருந்து வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தும் தொழில்முனைவோரை இணை மானிய நிதித் திட்டம் (MGP) ஊக்குவிக்கும்.
இந்தத் திட்டம் முறையான ஆவணங்களை உறுதி செய்தல், வணிகத் திட்டம் தயாரித்தல், உரிய நேரத்தில் கடனை வழங்குதல், அதைப் பயன்படுத்துதல், திருப்பிச் செலுத்துதல் ஆகியவற்றில் தேவையான வழிகாட்டுதல்களைப் பயனாளிகளுக்கு வழங்குவதன் மூலம் கடன் பெறுவோரின் நேரத்தையும் சிரமத்தையும் குறைக்கிறது.
இணை மானிய நிதி திட்டம், முதல் தலைமுறை தொழில்முனைவோர், பெண்கள் தலைமையிலான வணிகங்கள்/ நிறுவனங்கள் தொழிற்குழுக்கள், உற்பத்தியாளர் கூட்டமைப்பு, மாற்றுத்திறனாளிகள் தலைமையிலான நிறுவனங்கள் மற்றும் நிதித்துறைகளில் சவாலாகக் கருதப்படும் பிற வகை நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் கடன் தொகையில் 70% உடனடியாக திருப்பிச் செலுத்தினால், கடன் வாங்கியவர் 30% மானியத்திற்குத் தகுதிபெறுவார்.
உற்பத்தியாளர்-சந்தையாளர் ஒருங்கிணைப்பு
உணவுப் பொருள் வணிகத்தில் இடைத்தரகர்களைத் தவிர்த்து உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் நேரடியாகப் பயனடையும் வகையில் ‘உற்பத்தியாளர் - சந்தையாளர் ஒருங்கிணைப்பு’ இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வரான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் ஆதரவு பெற்ற 53 உற்பத்தியாளர் கூட்டமைப்புகளின் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு: 1800 599 1600/155 330
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT