Published : 20 Nov 2024 06:06 AM
Last Updated : 20 Nov 2024 06:06 AM
வாழ்க்கையில் லட்சிய இலக்கை நிர்ணயித்துச் சிகரத்தை அடைய வழிதேடும் இளைய தலைமுறையினர், சிறிய எல்லைக் கோட்டை வரைந்து அந்த வட்டத்துக்குள் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இன்றைய வேலைவாய்ப்பு உலகம் வானளாவிய வாய்ப்புகளுடன் உரிய திறன் பெற்றவர்களைத் தேடிக்கொண்டிருக்கிறது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அல்லது தமிழக எல்லைக்குள் வேலை தேடும் மனநிலையிலேயே பெரும்பாலான மாணவர்கள் உள்ளனர். இவர்கள் மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எழுதுவதில் தயக்கம் காட்டுகின்றனர். தமிழ்நாடு அரசின் குரூப்-4 தேர்வுகளில் சுமார் எட்டாயிரம் பணியிடங்களுக்கு 20 லட்சத்துக்கு மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். எனவே, தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளின் மூலம் வேலைவாய்ப்பைப் பெற மாணவர்கள் முயலலாம்.
தேசிய அளவிலான சில போட்டித் தேர்வுகள்: ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகளுக்கான தேர்வு (CDS) நாட்டின் பாதுகாப்புக்கே முன்னுரிமை என்கிற வகையில் ஆண்டுதோறும் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணிகளுக்கான தேர்வை நடத்துகிறது.
இத்தேர்வின் மூலம் டேராடூனிலுள்ள இந்திய ராணுவ மையம் (IMA), கேரளத்தின் எழிமலையில் உள்ள இந்தியக் கடற்படை மையம் (INA), சென்னையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் (OTA), அதே மையத்தைச் சேர்ந்த மகளிருக்கான குறுகிய காலப் பணி மையம் (OTA-SSC(W)), ஹைதராபாத்தில் உள்ள இந்திய வான்படை மையம் (AFA) போன்ற பயிற்சி நிலையங்களின் அலுவலர் பணிக்குச் சேர்க்கை நடைபெறும். இப்பட்டியலில் உள்ள நான்கு பயிற்சி நிலையங்களுக்கும் ஆண்கள் விண்ணப்பிக்கலாம். பெண்கள் ஓ.டி.ஏவின் குறுகிய காலப் பணிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
தகுதி: இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் ஐ.எம்.ஏ., ஓ.டி.ஏ. நிலையங்களில் சேர ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஐ.என்.ஏவில் சேர பொறியியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஏ.எஃப்.ஏவில் சேர பட்டப்படிப்பு (பன்னிரண்டாம் வகுப்பில் கணிதம், இயற்பியல் பாடம் படித்திருக்க வேண்டும்) அல்லது பொறியியலில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் வயது தேர்வு நடைபெறவிருக்கும் ஆண்டின் ஜனவரி 1ஆம் தேதியன்று 20-24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வை இணையவழியில் மட்டுமே எழுத வேண்டும். இதற்காக இணையதளத்தில் ஒரு முறை பதிவுசெய்தால் போதும். இப்பதிவை மேற்கொள்ளத் தேர்வாளர்கள் மத்திய, மாநில அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையின் (ஆதார்/பான்/ஓட்டுநர் உரிமம்/வாக்காளர் அடையாள அட்டை/கடவுச் சீட்டு) விவரங்களைப் பதிய வேண்டும். இவ்விவரங்கள் முழுமையான அளவில் இருப்பின் தேர்வுக்கு ஏழு நாள்களுக்கு முன் தேர்வாளர்களுக்கு இ-நுழைவுச் சீட்டு வழங்கப்படும் (E-Admission card).
தேர்வு மையங்கள்: இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, வேலூர், கோவை, திருச்சி ஆகிய ஊர்களிலும் புதுச்சேரியிலும் நடைபெறும்.
தேர்வு நடைபெறும் முறை: இத்தேர்வுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.200. பெண்கள், பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. தேர்வு முறையானது எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இரண்டு பிரிவுகளாக நடைபெறும். ஐ.எம்.ஏ., ஏ.எஃப்.ஏ., ஐ.என்.ஏ. நிலையங்களில் அதிகாரிகளாக சேர ஆங்கிலம், பொது அறிவு, கணிதம் ஆகியவற்றில் தலா இரண்டு மணி நேரம் நடைபெறும் தேர்வுகளை எழுத வேண்டும்.
ஓ.டி.ஏவுக்குக் கணிதம், பொது அறிவுப் பாடங்களில் நடைபெறும் தேர்வுகளை எழுத வேண்டும். அது மட்டுமன்றி ஆயுதப்படை மருத்துவச் சேவைகளின் (AFMS) உடற்தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற வேண்டும். இத்தேர்வில் தவறான விடைகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு யு.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்க்கலாம்.
- கட்டுரையாளர், வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை முன்னாள் இணை இயக்குநர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT