Last Updated : 17 Nov, 2024 07:27 AM

 

Published : 17 Nov 2024 07:27 AM
Last Updated : 17 Nov 2024 07:27 AM

வாசிப்பை நேசிப்போம்: வாசகியர் கொடுத்த எழுத்தார்வம்

நான் இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். எனக்கும் படிப்பிற்கும் உள்ள தொலைவு சிறிது அதிகம். பள்ளியில் ஒரு நாள்கூட என் வகுப்பாசிரியரிடம் திட்டு வாங்கத் தவறியதில்லை. 11ஆம் வகுப்பில் சேர எங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் எனக்கு இடம் தர மறுத்து விட்டார். பிறகு இடம் கொடுத்தது தனிக்கதை. கல்லூரியில் கட்டணம் குறைவாக இருந்த காரணத்தால் பி.ஏ. தமிழில் சேர்ந்தேன். என் கல்லூரிப் படிப்பு என் வாழ்வில் பல மாற்றங்களை நிகழ்த்தும் என்று அன்றைக்குத் தெரியாது. தினமும் எங்கள் ஆசிரியர், ‘உங்கள் பாடத்திட்டத்தைத் தாண்டி நீங்கள் புத்தகங்களை வாசிக்க வேண்டும்’ என்று கூறுவார். அவரே புத்தகங்களை அறிமுகமும் செய்வார். புத்தகங்கள் பற்றிய விமர்சனங்களையும் முன்வைப்பார். புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் எனக்கு அப்படித்தான் உருவானது.

படிப்பதற்கு எளிதாக இருக்கட்டும் என்று ப.நடராஜன் பாரதிதாஸ் எழுதிய ‘ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்’ கவிதை நூலை ஆசிரியரிடமிருந்து வாங்கிப் படித்தேன். முடி திருத்தும் தொழில் செய்யும் ஒருவரது அவல நிலைகளையும் செய்யும் தொழிலால் ஒருவருக்கு இச்சமூகத்தால் ஏற்படும் பிரச்சினைகளையும் இந்நூலில் கவிதைகளாக எழுதியிருந்தார். ஒவ்வொரு கவிதையும் எனக்குப் புரிந்தது. அந்தக் கவிதைகளின் மொழி எனக்கு அறிமுகமானதாக இருந்தது.

அடுத்து கே.ஆர். மீரா எழுதிய ‘மீரா சாது’ நாவலைப் படித்தேன். நன்கு படித்த ஒரு பெண், ஓர் ஆணின் பொய்யான வார்த்தைகளை நம்பித் தன் வாழ்வைத் தொலைத்து நிற்கிறாள். ஒவ்வொரு முறையும் அவன் தவறிழைக்கும்போது மன்னிப்பு கேட்டு அவளது கால்களில் விழுந்து பாதத்தில் முத்தமிடுகிறான். இறுதியில் அவள் தன்னையும் வருத்தித் தன் குழந்தையையும் கொலை செய்கிறாள். காதல் என்பது தன் வாழ்வின் ஒரு பகுதி என்று கருதுபவர் காதலில் வெற்றி பெறுகிறார். தன் வாழ்க்கையே தன் காதல்தான் என்று கருதுபவர் காதலில் மட்டுமல்ல, வாழ்விலும் தோல்வியைத் தழுவுகிறார். இந்த நூல் ஆண்களின் செயற்கையான அன்பையும் நடிப்பையும் புரிந்துகொள்ள உதவியது என்றுதான் சொல்ல வேண்டும்.

கோ. கிருத்திகா

பெருமாள்முருகன் எழுதிய ‘வேல்’ சிறுகதைத் தொகுப்பை அண்மையில் முழுமையாக வாசித்தேன். இந்தத் தொகுப்பில் ‘வேல்’ சிறுகதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

ஜெயகாந்தன் எழுதிய ‘ஒரு பிடிச்சோறு’ கதை என் வாழ்க்கையில் முக்கியமானது. அடித்தட்டு மக்களின் அன்றாடத்தையும் அவர்களின் அன்பையும் இந்தக் கதையின் வழியாகப் புரிந்துகொண்டேன். தொடர்ந்த வாசிப்புப் பழக்கம் எனக்கு வேறோர் உலகத்தை அறிமுகப்படுத்தியது. யதார்த்த வாழ்க்கையைப் புரிந்துகொள்ளவும் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் நான் படித்த நூல்களே எனக்கு உதவின.

பல கல்லூரிகள் கலந்துகொண்ட கதை சொல்லும் போட்டியில் நான் முதலிடம் பிடிக்க வாசிப்புப் பழக்கம்தான் காரணம். எங்கள் கல்லூரியில் பி.ஏ., எம்.ஏ. தமிழ் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழைத் தினந்தோறும் வாங்கித் தருகிறார்கள். அதில் இணைப்பிதழாக வெளிவரும் ‘பெண் இன்று’ பகுதியைத் தொடர்ச்சியாகப் படித்து வருகிறேன். அதில் எழுதும் பெண்களைப் பார்த்துதான் என் வாசிப்பு அனுபவத்தை எழுதும் ஆர்வமும் எனக்கு வந்தது. மேலும், பாடநூல்களைத் தாண்டி வாசிக்கும்போது பாடநூல்களை வாசிப்பது எனக்குக் கடினமாகத் தெரியவில்லை.

- கோ. கிருத்திகா, காதர்வேடு, திருவள்ளூர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x