Last Updated : 15 Nov, 2024 02:18 PM

 

Published : 15 Nov 2024 02:18 PM
Last Updated : 15 Nov 2024 02:18 PM

இந்தப் பொழுதில் எப்போதும் கவனம் தேவை | சக்ஸஸ் ஃபார்முலா - 26

சச்சுவுக்குத் தூக்கம் போய் பல நாள்கள் ஆகிவிட்டன. நாளுக்கு நாள் அவர் கண்களைச் சுற்றி இருக்கும் கரு வளையம் அடர்த்தியாகிக் கொண்டு வந்தது. அமெரிக்காவுக்குப் போகும் வாய்ப்பை இழந்த போது ஆரம்பித்தது இது. நிம்மதியாகத் தூங்கினால் எல்லாம் சரியாகிவிடும். ஆனால் அது முடியாமல்தான் தவித்துக் கொண்டிருந்தார்.

“சச்சு, இரண்டு நாளைக்கு முன்னாடி ஹாஸ்பிட்டல் போய், டெஸ்ட் எல்லாம் கொடுத்துட்டு வந்தியே, என்ன ஆச்சு?”

“சொல்ல மறந்துட்டேன், டெஸ்ட் எல்லாம் ஓகேதான். நான்தான் எதையோ யோசிச்சிட்டு இருக்கேன்னு சொல்றார். மருந்தும் கொடுக்கல. அதைக் கொடுத்திருந்தாலாவது தூங்கி இருப்பேன்.”

“இந்தத் தூக்கப் பிரச்னை எப்ப ஆரம்பிச்சது?”

“டாக்டரும் கேட்டார், சரியா தெரியலன்னு சொன்னேன்.”

“நான் சொல்றேன். அந்த அமெரிக்கா போற வாய்ப்பு தவறிப் போனப்புறம்தான் இப்படி ஆக ஆரம்பிச்சுது.”

சச்சு அழுதுகொண்டே, “நான் அதைப் பற்றி நினைக்கக் கூடாதுனுதான் பிஸியா இருக்கேன். இருந்தாலும் அது என்னை ரொம்ப தொந்தரவு பண்ணிட்டு இருக்கு.”

“நான் சொல்றதைக் கவனமா கேள். உனக்கும் தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் கேட்டுக்கோ” என்று ஆரம்பித்தேன்.

மனசுக்கு பாரமான விஷயம் ஒன்று நடந்துவிட்டால், அதிலிருந்து ஏதோ ஒரு வகையில் நாம் மீண்டு வந்துதான் ஆக வேண்டும். சிலருக்கு ஒரு வாரம் எடுக்கும், சிலருக்கு அதிகமான நாள்கள் தேவைப்படும். எது எப்படி இருந்தாலும் அதிலிருந்து மீண்டு வராதவரை அவர்கள் மனம் பல குழப்பங்களால் நிரம்பி இருக்கும். பகலில் பூச்சி சத்தம் நமக்குக் கேட்பதில்லை. ஆனால் இரவில் அதன் சத்தத்தைக் கூர்மையாகக் கேட்க முடியும். காரணம் இரவில் மற்ற சத்தம் எல்லாம் ஓய்ந்து போவதால் தனித்திருக்கும் பூச்சி சத்தம் தெள்ளத் தெளிவாகக் கேட்கும். நம் மனமும் அப்படியே, எதை நாம் மறக்க நினைக்கிறோமோ அது நம் இரவுகளை ஆக்கிரமிக்கும்.

சிலருக்குக் கடந்த காலத் துயரம் என்று எதுவும் இருக்காது. அல்லது அவர்கள் அதைக் கடந்து வந்து இருப்பார்கள். ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறதோ என்கிற கவலை அவர்கள் மனதை எப்போதும் குழப்பிக் கொண்டே இருக்கும். இவர்கள் காலையில் எவ்வளவு உழைத்தாலும், ஓடினாலும் அதில் ஒரு தொய்வும் சுணக்கமும் இருக்கும். தூக்கம் இல்லாத மனம் தெளிவற்ற எண்ணங்களால் நிறைந்திருக்கும். அது போதுமே அன்றைய பொழுதை ஒன்றுமில்லாமல் செய்து விட.

நிகழ்காலத்தில் வாழ்வது என்பது வெறும் தத்துவம் மட்டுமல்ல; அது ஒரு வாழ்க்கை முறை. நவீன உலகில், மனிதர்கள் கடந்த கால வருத்தங்களிலும், எதிர்காலக் கவலைகளிலும் சிக்கித் தவிக்கின்றனர். ஆனால், உண்மையான வாழ்வு என்பது நிகழ்காலத்தில் மட்டுமே சாத்தியமாகிறது.

நிகழ்காலத்தில் நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நம் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்று தெரிந்தும்கூட நாம் செயலில் கவனம் செலுத்தாமல் இருக்கிறோம். தவறு செய்தலும் கவனமில்லாமல் காலத்தை கழிப்பதும் கவலையில் மனத்தை ஊறப்போடுவதும் மனித இயல்பு. அதிலிருந்து விழிப்புணர்வோடு மீண்டு வரும் ஒவ்வொருவரும் சாதனை செய்திருக்கிறார்கள்.

உதாரணத்துக்கு அலி பாபா நிறுவனர் ஜாக் மா பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். பள்ளிக் காலம் தொட்டு, பணியில் சேரும் காலம் வரை தோல்விகளை மட்டுமே அனுபவித்து வந்தவர். குற்ற உணர்ச்சிகளிலிருந்து மீண்டு, இயலாமையை உதறித் தள்ளி, செய்ய வேண்டிய செயல்களில் கவனத்தைச் செலுத்தினார். அதன் மூலம் சாதாரண மனிதராக இருந்தவர் சாதனையாளர் ஆனார்.

கையிலிருக்கும் இந்த நொடி மட்டும்தான் உண்மை. அதை உணர்ந்தால் ஆற்றைப் போல வாழ்வும் மேடு பள்ளங்களைக் கடந்து அதன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கும். போய்ச் சேர வேண்டிய இடத்தையும் அடைந்துவிடும். அப்படி இல்லை என்றால் குட்டையாக மாறி ஒரே இடத்தில் தேங்கிப் போய் மணமற்றுப் போகும்.

நிகழ்காலத்தில் இருப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஆனால் சின்ன சின்ன மாற்றங்கள் மூலம் சாத்தியப்படும். அதற்கு இந்தப் பத்து வழிகளைப் பின்பற்றுங்கள்.

1. நடந்தது எதுவாக இருந்தாலும் அதை விட்டு விலகும் வழிகளைத் தேட வேண்டும். வலியோ துரோகமோ மீண்டும் மீண்டும் நினைப்பதால் அதை நீங்கள் தொடர்ந்து உயிர்த்திருக்கச் செய்வதன் மூலம் அங்கேயே தேங்கி நிற்கிறீர்கள் என்று அர்த்தம்.

2. தேவையற்ற அனுபவங்களிலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். மாற்றத்தைக் கொண்டுவரும் செயல்களில் மனத்தைச் செலுத்துங்கள்.

3. ஒரே நேரத்தில் பத்து வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்தால் மனம் பதற்றமடையும். 'இப்பொழுது' பாழாகும்.

4. இன்று, இப்போது, இந்த நிமிடம் என்பது எதுவோ அது மட்டும்தான் உண்மை என்று புரிந்து கொள்ளுங்கள்.

5. காலமும் காசும் ஒன்று என்பதை உணருங்கள். அதை எப்படிச் செலவு செய்கிறீர்கள் என்பதைப் பொறுத்து வாழ்க்கை மாறும்.
6. மனதில் இருக்கும் குப்பைகளை அகற்றச் சிறந்த வழி மூச்சைக் கவனிப்பது. அது தியானம், மூச்சுப் பயிற்சி என்று ஏதோ ஒன்று.

7. வாழ்க்கையை ஒவ்வொரு நாளாக வாழக் கற்றுக் கொள்ளுங்கள். அது மனதின் பாரத்தைக் குறைக்கும்.

8. மனதிற்குச் செய்யும் பயிற்சிகள் ஒருபுறமிருக்க உடலுக்கும் பயிற்சி அவசியம். உடம்பும் மனமும் ஒழுங்காக இருந்தால் மற்ற எதையும் சமாளித்துவிடலாம்.

9. இங்கு அனைவரின் வாழ்க்கையுமே நிச்சயமற்ற ஒன்றுதான். முடிந்ததைச் செய்து கொண்டிருந்தாலே நிறைவான மனம் கிடைத்துவிடும்.

10. கிடைக்காமல் போன எதைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். மனம் தெளிவாக இருந்தாலே சிறப்பான அனைத்தும் உங்களை வந்தடையும். தெளிவு என்பது நேற்றிலோ நாளை என்பதிலோ அல்ல, இங்கு இப்பொழுது என்பதில் இருக்கிறது.

- கட்டுரையாளர், எழுத்தாளர். 12 நூல்களை எழுதியிருக்கிறார். துபாயில் வசிக்கிறார். | தொடர்புக்கு: writernaseeema@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x