Last Updated : 13 Nov, 2024 06:10 AM

 

Published : 13 Nov 2024 06:10 AM
Last Updated : 13 Nov 2024 06:10 AM

எண்களால் வாழ்கிறேன்! | தேன் மிட்டாய் 28

“நியூட்டன், எப்படி இருக்கிறீர்கள்? உடல் நிலை இப்போது பரவாயில்லையா? போதுமான அளவுக்கு ஓய்வு எடுத்துக்கொள்கிறீர்களா? ஒழுங்காகச் சாப்பிடுகிறீர்களா? நண்பர்கள் நேற்று பேசிக்கொண்டிருந்தபோது இதோ இந்தப் புதிரைக் கொடுத்தார்கள். யாரோ ஒரு பெரிய அறிஞர் இந்தப் புதிரை அறிவித்திருக்கிறாராம். ஒரு மாதத்துக்குள் விடையைக் கண்டறிய வேண்டுமாம்.

பலரும் முயன்று, கைவிட்டுவிட்டார்கள். சரி, நியூட்டனைப் பார்க்கும்போது அவரிடம் கொடு என்று ஒருவர் சொன்னார். வயதாகிவிட்டது. அவரால் இதை எல்லாம் இப்போது கண்டறிய முடியாது என்று இன்னொருவர் சொன்னார். எதற்கும் இருக்கட்டும் என்று நான் கையோடு கொண்டு வந்திருக்கிறேன். முடியுமா என்று பாருங்கள். சரியாக ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும் எனும் அவசரம் எல்லாம் இல்லை. பொறுமையாகப் பாருங்கள். உங்களுக்கும் பொழுது போனதுபோல் இருக்கும்.”

“சரி, அப்படி வைத்துவிட்டுப் புறப்படுங்கள்” என்று அந்தத் தொணதொண மனிதரை அனுப்பிவிட்டு, கதவை இழுத்து மூடினேன். போன வாரம், இன்னொருவர் இதேபோல் வீடு தேடிவந்து அக்கறையோடு விசாரித்தார். “என்ன நியூட்டன், இந்த வயதில் புத்தகம் எல்லாம் படிக்கிறீர்கள்? இப்போது படித்து என்ன செய்யப்போகிறீர்கள்? கண் எல்லாம் வலிக்காதா?” “அதெல்லாம் ஒன்றும் வலிக்காது, நீங்கள் கவலைப்படாதீர்கள்” என்று அவரை அனுப்பி வைத்தேன். இவர்களை எல்லாம் என்னதான் செய்வது?

குடும்பம், உறவு, நட்பு எதுவும் வேண்டாம், நான் பாட்டுக்கு என் உலகில் வாழ்ந்து கொள்கிறேன் என்றால் விடுகிறார்களா? வந்து கதவைத் தட்டி நலம் விசாரிக்கிறேன் எனும் பெயரில் படுத்தி எடுக்கிறார்கள். எனக்கு வயதாகிவிட்டதாம். (வாழ்நாள் முழுக்கக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கும் எனக்கு என் வயதை எண்ணத் தெரியாதா?) முன்புபோல் இல்லையாம். (இல்லையா அல்லது இருக்கக் கூடாதா?) வேளா வேளைக்குச் சாப்பிடுவது.

சுருண்டு சுருண்டு படுத்துக்கொள்வது. 24 மணி நேரமும் என் உடம்பைப் பற்றி மட்டுமே நினைத்து வருந்துவது. இதை எல்லாம்தான் இனி நான் செய்ய வேண்டுமாம். (அதாவது, நாங்கள் எல்லாரும் இப்படித்தான் இருக்கிறோம். எனவே, நீயும் எங்களைப் போல் இரு என்பதுதான் இவர்களுடைய மாபெரும் தத்துவம்).

என்னை எந்த வகையிலும் வருத்தாமல், எப்போதும் அரவணைத்து அன்பு செலுத்தும் ஒரே தோழன், ‘கணிதம்’ மட்டும்தான். கணிதத்தை நம்பும் அளவுக்கு இந்த உலகில் வேறு எதையும், வேறு எவரையும் நான் நம்புவதில்லை. எழுத்துகளைவிட எண்களே என்னைக் கவர்ந்து இழுக்கின்றன. ஒரு கதையைப் போல் கணித நூலை என்னால் கடகடவென்று படித்து முடிக்க முடியும். ஒரு கவிதையைப் போல் ஒரு கணிதச் சமன்பாட்டை என்னால் ரசிக்க முடியும்.

நான் என் உலகை எண்களாகக் காண்கிறேன். ஒரு கட்டிடத்தைக் காணும்போது அதன் உயரம், அகலம், வண்ணம், ஒளி, நிழல் அனைத்தும் எண்களாகவே என் மனதுக்குள் படர்கிறது. ஒரு வானவில்லைப் பார்க்கும்போது அதில் கலந்திருக்கும் வண்ணங்களை அல்ல, வண்ணங்கள் பிரதி பலிக்கும் எண்களையே நான் காண்கிறேன். ஒளி என்பது ஓர் எண். சூரியன் என்பது ஓர் எண். வானம் ஓர் எண். அதிலுள்ள ஒவ்வொரு கோளும் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு துணுக்கும் ஓர் எண். ஒவ்வொரு வட்டமும் ஒவ்வொரு சதுரமும் ஒவ்வொரு முக்கோணமும் எண்களையே எனக்கு நினைவுபடுத்துகின்றன.

உடனே மனம் கணக்கு போட ஆரம்பித்துவிடுகிறது. என்னைத் தீண்டும் கதிரவனின் ஒளி. நட்சத்திரத்தின் சிமிட்டல். வளைந்து, வளைந்து பறக்கும் பறவை. கிளையில் இருந்து விழும் ஆப்பிள். ஒவ்வொன்றும் ஒரு புதிர். ‘நியூட்டன், நான் மறைந்துகொள்கிறேன். என்னைக் கண்டுபிடி பார்ப்போம்’ என்று குழந்தைபோல் என் கண்களை மூடிவிட்டு ஒவ்வொன்றும் ஓடி மறைந்துவிடும். நான் சிரித்தபடியே ஒரு காகிதத்தை எடுத்து வைத்துக்கொண்டு கணக்கு போட ஆரம்பித்து விடுவேன். மறைந்திருக்கும் ஒவ்வொரு குழந்தையையும் கண்டறியும்வரை உறக்கம் இல்லை எனக்கு.

யாரோ ஓர் அறிஞர் கொடுத்த புதிரை எடுத்துப் பார்த்தேன். மறைந்திருக்கும் மற்றொரு குட்டிக் குழந்தை. ‘யாராலும் கண்டுபிடிக்க முடியாத கடினமான ஓர் இடத்தில் ஒளிந்துகொண்டிருக்கிறேன். என்னை ஒரு மாதத்துக்குள் கண்டுபிடித்து விடுவாயா நியூட்டன்?’ எனக் கேட்பதுபோல் இருந்தது.

நான் ‘இதோ வருகிறேன்’ என்று காகிதத்தை எடுத்துப் பரபரவென்று கிறுக்க ஆரம்பித்தேன். கொண்டு வந்து கொடுத்த மனிதரை மறந்தேன். என் இருக்கையை, என் வீட்டை, என் நாட்டை, என் உலகை மறந்தேன். என் பெயரை, வயதை மறந்தேன். உணவு, உடை, நீர் எதுவும் எனக்குத் தேவையில்லை. என் உடலையும் அதிலுள்ள நூறு குறைகளையும் மறந்தேன். என் வலிகள் என்னைவிட்டு ஓடிச் சென்றுவிட்டன. என் வருத்தங்கள் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டன. சரியாக ஒரு மணி நேரத்தில் புதிரை விடுவித்துவிட்டேன்.

அடுத்த புதிருக்கு என் மனம் தயாராகிவிட்டது. என் உடலும்தான். கணிதம் நான் ஆர்வம் செலுத்தும் ஒரு துறை, அது என்னுடைய பொழுதுபோக்கு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தவறு. உயிர்போல் அதை நான் பற்றிக்கொண்டிருக்கிறேன். அன்போடு என்னை அணைத்துக் கொண்டிருக்கிறது கணிதம். எண்கள் இருப்பதால் நான் வாழ்கிறேன். எண்கள் இருக்கும் வரை நான் வாழ்வேன்.

- marudhan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x