Published : 08 Nov 2024 04:26 PM
Last Updated : 08 Nov 2024 04:26 PM
கோவை: ‘ஜென்டாங்கிள்’ என்பது தியானமும், கலையும் சேர்ந்த அழகான ஓவியப் படைப்பாகும். இந்த ஜென்டாங்கிள் ஓவியம் வழியாக பறவைகள், பட்டாம்பூச்சி மற்றும் பல்லுயிர் பெருக்கம் குறித்து சிறுவர், சிறுமியருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் கோவை பீளமேட்டைசேர்ந்த பறவையியல் ஆர்வலர் சாஹித்யா செல்வராஜ்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் எம்எஸ்சி தாவரவியல் படிப்பைமுடித்தேன். பின்னர் மருத்துவ தாவரவியல் ஆய்வுப் படிப்பில் பி.எச்டி. முடித்துள்ளேன். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு எனது தந்தை செல்வராஜுடன் ஆனைகட்டியில் மலையேற்றம் சென்றபோது, இயற்கை மீதான ஆர்வம் ஏற்பட்டது. பறவைகள், பட்டாம்பூச்சிகள் குறித்து புரிதல் ஏற்பட்டது. இந்த மலையேற்றங்கள் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் மண்டலங்களை அறிய ஒரு கண் திறப்பாக இருந்தது.
மலைக் காடுகளில் ஏற்பட்ட ஆரம்பகால அனுபவங்கள் இயற்கையைப் படிப்பதற்கும் பாதுகாப்பதற்கும் வாழ்நாள் அடித்தளத்தை அமைத்தது எனலாம். இயற்கை பாதுகாப்பின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. இது பறவைகள், பட்டாம்பூச்சிகள் மீதான முழுமையான ஆராய்ச்சிக்கு வழிநடத்தி செல்கிறது.
இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் கல்வியை ஓவியம் வழியாக பள்ளி மாணவ,மாணவிகளுக்கு ஏற்படுத்த முற்பட்டேன். இதற்காக ஜென்டாங்கிள் கலையை ஓராண்டுக்கு மேல் கற்றுக் கொண்டு பயிற்சி பெற்று வந்தேன். ஜென்டாங்கிள் ஓவியம் மூலம் மாணவர்களுக்கு மனதை ஒருமுகப்படுத்தும் திறன் மேம்படும். எந்த வயதினரும் கற்றுக்கொள்ளலாம். அடிப்படை ஜென்டாங்கிள் ஓவியத்தை ஒரு நாளில் கற்றுக் கொள்ள முடியும். ஓவியம் வரையும் ஆர்வம் இருந்தால் போதுமானது.
ஜென்டாங்கிள் ஓவியத்தைப் கணித வடிவங்கள் சார்ந்த கலைபோல கற்றுக் கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு புள்ளிக்கும், கோடுகளுக்கும் மாறுபட்ட வடிவங்களை வரைவது மூலமாக மாணவர்களுக்கு கவனக்குவிப்பு மற்றும் மன ஓய்வு கிடைக்கிறது. பள்ளி படிப்பின்போது ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கவும் சுய பரிசோதனைக்கும் சிறந்த வழியாக அமைகிறது.
ஜென்டாங்கிள் ஓவியம் வழியாக இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை ஏற்படுத்தி வருகிறேன். பல்லுயிர் பெருக்கம் மீது ஆர்வமுள்ள அனைவரும் ஜென்டாங்கிள் கலை வழியாக இணையலாம். எனது பயிற்சி பட்டறைகள் என்பது இயற்கையின் கருப்பொருள்களுடன் ஜென்டாங்கிள் கலையின் நினைவாற்றலை ஒருங்கிணைத்து நடத்தப்படுகிறது. மேலும், பங்கேற்பாளர்களுக்கு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் இயற்கை வடிவங்களின் அழகு போன்ற கருத்துக்களை பகிர்ந்து வருகிறேன்.
ஜென்டாங்கிள் ஓவியம் வழியாக பறவைகள், பட்டாம்பூச்சிகளை வரைய சிறுவர்களை ஊக்கப்படுத்தி வருகிறேன்.ஓவியங்கள் மூலம் பறவைகள், பட்டாம்பூச்சிகள் எவ்வாறு இயற்கை சூழலில் வசிக்கிறது என்பதையும், ஏன் அவைகளை நாம் பாதுகாக்க வேண்டும் என்பதையும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
ஓவியங்கள் வழியாக எடுத்து கூறும் போது மாணவ, மாணவிகளின் ஆழ் மனதில் பதிய வாய்ப்பு ஏற்படுவதுடன் எளிதாக புரிந்து கொள்ள முடியும். இந்த அணுகுமுறை என்பது இயற்கையோடு தனிப்பட்ட தொடர்பையும், அதன் உள்ளார்ந்த மதிப்பைப் பற்றிய புரிதலையும் வளர்க்கிறது. நான் ஏராளமான பறவைகள், பட்டாம்பூச்சிகளை புகைப்படம் எடுத்துள்ளேன்.
இத்துடன் கோவை நேச்சர் சொசைட்டி, இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பில் உறுப்பினராக உள்ளேன். கள ஆய்வுகள், பல்லுயிர் எண்ணிக்கை மற்றும் ஆராய்ச்சிகளில் பங்கேற்று வருகிறேன்.
இதன் தொடர்ச்சியாக பறவை மற்றும் பட்டாம்பூச்சி கண்காணிப்பில் தேசியமற்றும் சர்வதேச பல்லுயிர் தரவுத்தளங்களுக்கு பங்களிப்பை வழங்கிஉள்ளேன். அறிவியல் இதழ்களில் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளேன்.
கோவையின் பறவை இனங்கள் பற்றிய படைப்புகள் மற்றும் புகைப்படங்கள் கோவை பறவைகள் - பதிப்பு 1 மற்றும் 2 புத்தகத்தில் (Birds of Coimbatore - Editions 1 & 2) இடம் பெற்றுள்ளன. எனது பறவைகள், பட்டாம்பூச்சிகள் மற்றும் பிற உயிரினங்களை கொண்ட இயற்கை புகைப்படங்கள், அறிவியல் வெளியீடுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல்லுயிர்களின் அழகை மற்றவர்களுக்கு நெருக்கமாகப் பார்க்க உதவுகிறது.
பொதுவாக புகைப்படம் எடுத்தல் என்பது ஒரு படத்தைப் பிடிப்பது மட்டுமல்ல; நமது பூமியைப் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதர்களுக்கும் காட்டு வாழ்விடங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் கல்வி மற்றும் ஊக்கமளிக்கும் ஒரு கருவியாகும்.
மேலும் பொதுப் பேச்சுக்கள், கலைப் பட்டறைகள் மற்றும் நேரடிக் கல்வி மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பரந்த பார்வையாளர்களை சென்றடைய முடிகிறது. ஒவ்வொரு அமர்விலும், கலை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியலின், பல்லுயிர்களின் அழகையும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் விளக்கி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT