Published : 12 Jun 2018 10:35 AM
Last Updated : 12 Jun 2018 10:35 AM
நாம் யார், நம்முடைய விருப்பு, வெறுப்புகள் என்னென்ன எனத் தெரிந்துகொண்டால் நம்மையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் மேலாண்மை செய்துகொள்ள முடியும். சுயதொழிலுக்கான சிந்தனையும் அப்படித்தான். ஆண்டன் பிரதீஷ் அப்படித்தான் தன்னை அறிவது மூலமாகத் தனக்கான தொழிலைக் கண்டடைந்திருக்கிறார். அந்தத் தொழில் ‘ஸ்ப்ளாஷ்’ பழச்சாறு விற்பனை (Splash).
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த ஆண்டன் பிரதீஷ் ஒரு மென்பொருள் பொறியாளர். படித்தது சென்னையில். ஆண்டனுக்கு ஹோட்டல் உணவு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால் உணவுக்குப் பதிலாகப் பழச்சாற்றையே உணவாகக்கொண்டார். அப்படியான பழக்கத்தில் சுத்தமான பழச்சாறு கிடைப்பதில் உள்ள பிரச்சினை தெரிந்துள்ளது. அதையே தொழிலாக ஆக்கலாம் எனத் தனக்கான தொழிலைக் கண்டடைந்திருக்கிறார்.
படித்தது மென்பொருள், விற்பது பழச்சாறா?
இவரது குடும்பம் மரத் தொழிலில் ஈடுபட்டுவருகிறது. அதனால் ஆண்டனுக்கும் தொழில்தான் விருப்பம். ஆனால், இதுபோன்ற தொழிலை அவருடைய குடும்பத்தார் ஊக்குவிக்கவில்லை. நண்பர்களும் ‘மென்பொருள் படித்துவிட்டுப் பழச்சாறு விற்கப் போறியா?’ எனக் கேட்டிருக்கிறார்கள். ஆனாலும் ஆண்டன் இந்தத் தொழிலுக்கு இருந்த தேவையை உணர்ந்திருக்கிறார். அதனால் துணிச்சலுடன் தொடங்கியிருக்கிறார். அதேநேரம் பழச்சாறு கடையாகத் திறக்காமல் ஆன்லைன் மூலம் விற்பனையைத் தொடங்கியிருக்கிறார்.
பழச்சாறு ஆன்லைனில் விற்க முடிவெடுத்த பிறகு ஆன்லைனில் ஏற்கெனவே கிடைக்கும் பழச்சாறுகளை வாங்கிப் பார்த்திருக்கிறார். இதிலிருந்து வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்திருக்கிறார். அதற்காகப் பலவிதமாக ஆய்வுகளை மேற்கொண்டு தரத்தைப் பரிசோதித்துப் பார்த்துள்ளார். ஏற்கெனவே கிடைக்கும் பழச்சாறு பேக்கிங்கில் குறைபாடுகள் இருந்தன. அதனால், பாதுகாப்பானதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் இருக்கும் வகையில் வடிவமைத்துள்ளார். அப்போது, பாதி வெற்றி கிடைத்த மாதிரியான உற்சாகம் கிடைத்திருக்கிறது.
சாறு நீண்ட நாள் கெடாமல் பாதுகாக்கப் பதப்படுத்தும் ரசாயனம் எதுவும் சேர்க்கக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்திருக்கிறார். சந்தையில் கிடைப்பதைவிட ஆரோக்கியமான சாறை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருந்திருக்கிறார்.
பொறுமைக்குக் கிடைத்த வெற்றி
அதற்குப் பிறகு குறைந்த முதலீட்டில் சென்னை அமைந்தகரையில் தனது பழச்சாறு தொழிலைத் தொடங்கியுள்ளார். இந்தச் சாறு சந்தைக்குப் புதிது என்பதால் மெதுவாகத்தான் விற்பனை ஆகின்றது. பழச்சாறு குளிர்பதனப் பெட்டி இல்லாமல் 10-15 நிமிடம் வரைதான் கெடாமல் இருக்கும். அதேநேரம் 24 மணிவரை குளிர் பதனப் பெட்டியில் சேமிக்கலாம். ஆனால், முதலில் இதை வாடிக்கையாளர்கள் எதிர்கொள்வதில் தயக்கம் இருந்தாலும் பிறகு இந்தக் காரணத்துக்காகவே ஸ்பளாஷ் அதிகமாக விற்கத் தொடங்கியது.
2014 ஆகஸ்டில் தொடங்கி அடுத்த சில மாதங்கள்வரை வருமானம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், பொறுமைகாத்து தொடர்ந்து உழைத்திருக்கிறார் ஆண்டன். புதிய புதிய சாறு வகையை அறிமுகம் செய்திருக்கிறார். மொத்தம் 70-க்கும் மேற்பட்ட பழச்சாறு வகையைத் தயாரித்துவருகிறார். உணவு விற்கும் மொபைல் ஆப் வந்த பிறகு விற்பனை அதிகரித்துள்ளது. அத்துடன் நின்றுவிடாமல் பள்ளிகள், கல்லூரிகளில் சொந்தமாகக் குளிர்பதனப் பெட்டி வாங்கித் தனது சாறை விற்பனைக்கு வைத்துள்ளார். அங்கும் விற்பனை வெற்றிகரமாக நடக்கிறது. லாபம் இல்லாமல் பூஜ்ஜியத்தில் தொடங்கிய தொழிலில் இரண்டரை வருடத்துக்குள் முதலீட்டை எடுத்துள்ளார். இன்றைக்குக் கிட்டத்தட்ட லட்சம் ரூபாய் மாத வருமானம் தரக்கூடிய தொழிலாகவும் அது மாறியிருக்கிறது.
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT