Published : 24 Oct 2024 05:09 PM
Last Updated : 24 Oct 2024 05:09 PM

உலக அளவில் உதகைக்கு பெருமை சேர்க்கும் ‘ஹோம்மேட் சாக்லேட்’

உதகை: குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை சாக்லேட்டை விரும்பாதவர்கள் எவருமில்லை. மெக்சிகன் வார்த்தையான சாக்லேட் ஆரம்ப காலத்தில் திரவநிலையிலேயே இருந்தது. இதை அப்படியே குடிக்கலாம். அதையடுத்து 12-ம் நூற்றாண்டில் லத்தீன் அமெரிக்காவில் பிரபலமடைந்திருந்த சாக்லேட் கலாச்சாரத்தை ஆங்கிலேயர்களும் பின்பற்றத் தொடங்கினர். அதிலிருந்தே உலகெங்கும் சாக்லேட் பிரபலமானது.

இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்த ஆங்கிலேயர்கள் தங்கள் சுய தேவைகளுக்காக அவரவர் வீடுகளிலேயே சாக்லேட்டை தயாரிக்க ஆரம்பித்தனர். அவர்கள் காட்டிய வழிதான் இன்றைக்கு நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ள உதகையின் ஹோம் மேட் சாக்லேட்டாகும். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் உதகை, கொடைக்கானல் உட்பட குறிப்பிட்ட மலைப்பகுதிகளில் மட்டுமே ஹோம் மேட் சாக்லேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

இதற்கு முக்கியக் காரணம் மலைப்பகுதிகளில் நிலவும் இயற்கையான சீதோஷ்ண நிலையேயாகும். கொக்கோ மற்றும் வெண்ணெய் கலந்த சாக்லேட் பார்களை சுமார் 40 டிகிரி வெப்பநிலையில் உருக்கி கூழாக வரும் போது அதில் நமது விருப்பத்தின்படி தேவையானவற்றை சேர்த்தோ அல்லது தனியாகவோ தாம்பாளங்களில் ஊற்றி இயற்கையாக குளிர வைத்தாலே ஹோம் மேட் சாக்லேட் தயார்.

உதகை, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் அல்லாமல் மற்றப் பகுதிகளில் இத்தகைய சாக்லேட்டுகளை தயாரித்தால், அவற்றை உறைய வைக்க பிரம்மாண்ட குளிர்ப்பதன அரங்குகள் தேவைப்படும். ஆனால், இயற்கையில் உறைவதில் கிடைக்கும் சுவையைப்போல அந்த சாக்லேட்டுகளின் சுவை இருக்காது என்கிறார் உதகையில் சாக்லேட் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள என்.வி.பட்டாபிராமன்.

அவர் கூறும் போது, ‘சாக்லேட்டுகள் சர்வதேச பிராண்டுகளில் வெளியானாலும் அவற்றின் உற்பத்தி செலவு, சந்தைப் படுத்துதல் மற்றும் விளம்பர செலவு உள்ளிட்டவற்றால் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. ஆனால் ஹோம் மேட் சாக்லேட்டுகளுக்கு அத்தகைய செலவுகள் ஏதுமில்லை. அவரவர் கண் முன்பாகவே தயாரிக்கப்படும் சாக்லேட்டுகளை சுவையும், மணமும் மாறாமல் சுவைப்பதையே சுற்றுலாப் பயணிகள் விரும்புகிறார்கள்’ என்றார்.

நீலகிரியில் ஆங்கிலேயர்கள் தங்கியிருந்ததன் தொடர்ச்சியாக அவர்கள் கற்றுத்தந்த ஹோம் மேட் சாக்லேட் தொழில்நுட்பம் இன்றளவும் உதகையின் சாக்லேட் பெருமைகளை உலகளவில் பேசுகிறது. உதகையிலிருந்து மும்பை, பெங்களூரு, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் சாக்லேட்டுகள் விமானத்தில் பறக்கின்றன.

‘ஹோம் மேட் சாக்லேட்டுகள் தற்போது 16 வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் நட் ராக்ஸ், புரூட் அண்டு நட் மற்றும் ஒயிட் சாக்லேட்டுகள் மிகவும் பிரபலமானவை. அதேபோல, மோல்டட் ரகத்தினாலான சாக்லேட்டுகளைத்தான் ஆங்கிலேயர்கள் அதிக அளவில் விரும்புவதால், அவர்களின் ரசனைக்கேற்ப தயாரிக்கப்பட்டவை.

டிரப்புள், ரம் அண்டு ரெய்சன்ஸ் ஆகியவை. அத்துடன்சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடத்தக்க வகையில் சுகர் ப்ரீசாக்லேட்டுகள், எக்லெஸ் சாக்லேட்டுகள், ஜெயின் சாக்லேட்டுகள் என பல்வேறு ரகங்களிலும் விற்பனைக்கு உள்ளன. ஹோம்மேட் சாக்லேட் என்பது தற்போது உதகையில் ஒரு குடிசைத்தொழிலாகவே பரவி வருகிறது. தொடக்கத்தில் ஒரு சிலர் மட்டும் சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது 50-க்கும் மேற்பட்டோர் சாக்லேட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அவரவர் கைவண்ணத்திற்கேற்பவும், கைத்திறனுக்கேற்பவும் தனித்தனி சுவைகளைக் கூட்டி விற்கப்படும் ஹோம் மேட் சாக்லேட்டுகள் நமது பர்சையும் கடிக்காமல், சுவையையும் குறைக்காமல், குட்டீஸ்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே மகிழ்ச்சியை தரும் அம்சமாக இருக்கின்றன.

உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் வாங்கிச் செல்லும் பொருள்களில் ஒன்று ஹோம் மேட் சாக்லேட்டாகும். ஆனால், சாக்லேட் தயாரிப்பில் மற்றொரு முறையும் உள்ளது. ஹேண்ட் மேட் என்பதாகும். பழங்காலத்தில் இத்தகைய முறையே கடைபிடிக்கப்பட்டு வந்தது. தற்போது ஹோம் மேட் சாக்லேட் தயாரிப்பவர்களில் பெரும்பாலானோர் ஏற்கெனவே கொக்கோவை வைத்து தயாரிக்கப்பட்ட சாக்லேட் பார்களை வைத்து, அதில் தேவையான சுவையையும், தேவையான கூடுதல் பொருள்களையும் சேர்த்து சாக்லேட் தயாரிக்கின்றனர்.

ஆனால், கொக்கோ விதைகளை வாங்கி அதை வெயிலில் உலர வைத்து அதிலிருந்து கொக்கோ பொடியை உருவாக்கி அதைக் கூழாக்கி அதிலிருந்து தயாரிக்கப்படுவதே ஹேண்ட் மேட் சாக்லேட்டாகும். சாக்லேட்டுகளின் தாயகமாகக் கருதப்படும் மெக்ஸிகோ நாட்டில் இத்தகைய முறைதான் இன்னமும் கடை பிடிக்கப்படுகிறது. இது பீன் டூ பார் (கொக்கோ விதையிலிருந்து சாக்லேட்) என்றும் அழைக்கப்படுகிறது.

இத்தகைய முறை இந்தியாவில், ஒருசில இடங்களில் மட்டும் பயன்படுத்தப்பட்டாலும் நீலகிரி மாவட்டத்தில் முதன்முறையாக உதகையில் உள்ள சாக்லேட் அருங்காட்சியகத்தில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அருங்காட்சியகத்தின் உரிமையாளர் பசலூர் ரஹ்மான் கூறும் போது, ‘‘பொதுவாக சாக்லேட் தயாரிப்பில் மிக முக்கியமான முறை ஹேண்டு மேட் சாக்லேட்டாகும். இது திடமானது என்பதால் பெரும்பாலானோர் இம்முறையை விரும்புவதில்லை. ஆனால், உதகையில் பீன் டூ பார் என்ற புதிய முறையை சாக்லேட் மியூசியத்தில் கையாள்கிறோம். சாக்லேட் இனிப்புத் தன்மை வாய்ந்ததல்ல. அது லேசான கசப்புத் தன்மை கொண்டதாகும். இதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் போது தான் சாக்லேட்டின் உண்மையான சுவை வெளிப்படும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x