Published : 22 Oct 2024 03:36 PM
Last Updated : 22 Oct 2024 03:36 PM
எங்களது தவிப்பைப் பார்த்து அங்கிருந்த பிரெஞ்சுக்காரர் ஒருவர் ‘செர்ன்’ உதவியாளரிடம் பேசினார். “பதிவு செய்பவருக்கு மட்டும்தான் அடையாள அட்டையை நாங்கள் வழங்குவோம். அடையாள அட்டை இல்லாதவருக்கு அனுமதி கிடையாது. வேறு வழியில்லை” என்று கூறினார் வரவேற்புக் கூடத்தில் அமர்ந்திருந்த பெண்மணி. (அவர் பெயர் ஃப்ரீடா என்பதையும் அவர் ‘கானா’ தேசத்தைச் சேர்ந்தவர் என்பதையும் பிறகு தெரிந்து கொண்டோம்). பிறகு அந்தப் பெண்மணி எங்களைப் பார்த்து, “இப்படித்தான் ஆன்லைன் புக்கிங்’ சிலசமயம் குழப்பத்தைத் தந்துவிடுகிறது” என்றார் ஆறுதலாக.
பன்னிரண்டரை மணி சுற்றுலாவுக்குப் பதிவு செய்தவர் அதற்குப் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பாகவே வரவேற்புப் பகுதிக்கு வந்துவிட வேண்டும் என்பதை மிகக் கண்டிப்பாக கூறி இருந்தார்கள். “பன்னிரண்டரை மணிக்கு யாராவது வந்து சேரவில்லை என்றால் அவரது அடையாள அட்டையை உங்கள் மகனுக்குத் தருகிறோம்” என்றார் ஃப்ரீடா. எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவ்வளவு தூரம் சென்று யாராவது வராமல் இருப்பார்களா என்ன?
ஆனால் 12.31 மணிக்கு ஃப்ரீடா எங்களை அழைத்தார். ஓர் அடையாள அட்டையை அளித்தார். அதில் ‘கோபாலகிருஷ்ணன்’ என்கிற இந்தியப் பெயர் காணப்பட்டது எங்களுக்கு வியப்பாக இருந்தது. ’வராமல் போன அந்தக் கோபாலகிருஷ்ணன் வாழ்க’ என்று வாழ்த்தியபடி எங்கள் மகன் அந்த அடையாள அட்டையைக் கழுத்தில் மாட்டிக் கொண்டார். ஆனால் அந்தச் சுற்றுலாவைத் தொடர்ந்த சிறிது நேரத்துக்குப் பிறகு வேலிக்கு வெளியே அந்தக் கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக நின்று கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
இது ஒருபுறமிருக்க பன்னிரண்டரை மணிக்குத்தான் சுற்றுலா தொடக்கம் என்கிற நிலையில் பத்து மணிக்கே வந்து சேர்ந்துவிட்டோம். அதுவரை வரவேற்புக் கட்டிடத்தின் மேல் மாடியில் உள்ள சில காட்சிப் பொருள்களைப் பார்வையிடச் சென்றோம். அறிவுக்கு விருந்தாக அமைந்திருந்தன அந்தக் காட்சி அரங்கங்கள். ‘செர்ன்’ ஆராய்ச்சிக் கூடத்தில் என்ன நடக்கிறது என்பதை 20 நிமிட திரைப்படமாக ஓர் அரங்கில் காட்டிக் கொண்டிருந்தார்கள். வர்ணனைக்குரல் முழுவதும் பிரெஞ்சு மொழியில் இருக்க, ‘சப்டைட்டில்’ முழுவதும் ஆங்கிலத்தில் வெளியாகின. ஆக அந்தக் குறும்படத்தை ரசிக்க முடிந்தது.
வியக்க வைக்கும் அறிவியல் உண்மைகள் பல அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. அவற்றில் சில: ‘சூரியக்கதிர் உலகை அடைவதற்கு எட்டு நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. அப்படியானால் எட்டு நிமிடங்களுக்கு முன்பு சூரியன் எப்படி இருந்ததோ அதைத்தான் பார்க்கிறோம். பல நட்சத்திரங்களைத் தொலைநோக்கி மூலம் காணும்போது அவை பல வருடங்களுக்கு முன்பாக எப்படி இருந்ததோ அதைத்தான் பார்க்கிறோம். ஏனென்றால் அவற்றின் ஒளி பூமியை அடைய மிகப் பல ஆண்டுகள் ஆகியிருக்கும். அதாவது தொலைநோக்கிகளின் வழியே பல ஆண்டுகளுக்கு முன்னால் இருக்கும் நிகழ்வைத்தான் நாம் பார்க்கிறோம்.
ஆக, நட்சத்திரங்களைக் காண்பதன் மூலம், அவற்றை ஆராய்வதன் மூலம், அவற்றின் வரலாற்றைத்தான் நாம் ஆராய்கிறோம். நட்சத்திரங்கள் உருவாவதற்கு முன்பு, விண்வெளியானது வாயுக் கூட்டங்களால் நிறைந்திருந்தது. சில இடங்களில் இந்த வாயுக்கள் குவிந்திருந்தன. சில இடங்களில் இல்லாமல் இருந்தன. பிரபஞ்சத்தின் ஈர்ப்புவிசைதான் இந்த வித்தியாசத்தை நடத்திக் கொண்டிருந்தது.’
(பயணம் தொடரும்)
முந்தைய அத்தியாயம் > ஸ்விஸ் எனும் சொர்க்கம் 12: ’செர்ன்’க்குள் ஓர் உலா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment