Last Updated : 19 Oct, 2024 04:54 PM

 

Published : 19 Oct 2024 04:54 PM
Last Updated : 19 Oct 2024 04:54 PM

டிஜிட்டல் டைரி 16: கவனம் பெறும் ‘ஆடியோ’ சேவைகள்

'பாட்காஸ்ட்' எனச் சொல்லப்படும் வலையொலி சேவை, சமூக ஊடகப் பரப்பில் பிரபலமாகி வருவதை நீங்கள் அறிந்திருக்கலாம். இந்நிலையில், ‘ஸ்வெல்காஸ்ட்’ எனும் சேவை, ‘பாட்காஸ்ட்’ செய்வதை எளிதாக்கியிருக்கிறது. இத்தளத்தில் ஐந்து நிமிடங்கள் வரையிலான ஒலி இணைப்புகளை உருவாக்கலாம், பகிரலாம்.

‘ஸ்வெல்காஸ்ட்’இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://www.swell.life/) உறுப்பினராகச் சேர்ந்து, திறன்பேசியின் வழியே ‘மைக்’ மூலம் உங்களது கருத்துகளைப் பேசி பதிவு செய்யலாம். கருத்துகள், பயண அனுபவங்கள், தொழில்முறை ஆலோசனைகள், அனுபவ பாடங்கள், வாழ்க்கை நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் பகிரலாம். ‘எக்ஸ்’ தளத்தின் குறும்பதிவுகளை வாசிப்பதுபோல, இந்தக் குறும் ஒலி இணைப்புகளைப் பயனர்கள் கேட்கலாம். கூடுதலாக, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தின் உதவியோடு குரல் பதிவுகளுக்கான சுருக்கமான எழுத்து வடிவ விளக்கத்தையும் இத்தளம் உருவாக்கித் தருகிறது.

இத்தளத்தில் பயனராகப் பதிவு செய்திருப்பவரால், உங்களது குரல் பதிவுகளைக் கேட்க முடியும். அதோடு மட்டுமில்லாமல், ஆர்வம் இருப்பவரும் பதில்களைப் பதிவு செய்து உங்களோடு பகிரலாம். இது ‘ஆடியோ வழி’ உரையாடலுக்கு வழிவகுக்கும். ‘ஸ்வெல்காஸ்ட்’ சேவையில் இணைய விருப்பம் உள்ளவர், தங்களுக்குப் பொருத்தமான பிரிவுகளைத் தேர்வு செய்து இணையலாம். பல்வேறு தலைப்புகளின்கீழ் பிரிக்கப்பட்டுள்ள பிரிவுகளை ‘நிலைய’ங்கள் என்றழைக்கிறார்கள். மேலும், குறிப்பிட்ட ஏதாவது ஒரு தலைப்பை உருவாக்கி, ஒரு குழு அமைத்து உரையாடலாம். அதில் பங்கேற்க நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கலாம். இத்தளத்தில் உருவாக்கப்படும் ஒலி இணைப்புகளைச் சமூக வலைதளங்களிலும் பகிரலாம்.

பழைய டிவிட்டர் போன்றதொரு சேவைதான் ஏர்.சேட் (https://www.air.chat/). ஆனால், இது பேச்சு வடிவில் இயங்குகிறது. இத்தளத்தில் பதியப்படும் குறும்பதிவுகளை ஒலி வடிவில் பேசி பகிர வேண்டும். அப்படி பகிரப்படும் ஒலி வடிவத்தின் எழுத்து வடிவமும் தானாக உருவாக்கப்படும். ’ஸ்வெல்காஸ்ட்’, ‘ஏர்.சேட்’ போன்ற ஒலி சேவைகள் பிடித்திருந்தால் ‘நாப்கின்’ (https://napkin.one/) எனும் இணையக் குறிப்பேடு சேவையைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.

மின்னல் கீற்று போல மனதில் தோன்றும் எண்ணங்களை மறந்துவிடாமல் குறித்து வைப்பதற்கான சேவை இது. உங்களது எண்ணங்களை எழுதவோ அல்லது ‘டைப்’ செய்யவோ வேண்டாம், பேசினால் மட்டும் போதும்! எண்ணங்களை ஒலி வடிவில் உள்ளீடு செய்யும்போது அதை மாற்றி இச்சேவை எழுத்து வடிவில் பதிவு செய்துகொள்கிறது. இதோடு, இணையத்தில் நீங்கள் வாசிக்கும் மேற்கோள்களை புத்தகத்தில் குறித்து வைக்க விரும்பும் பத்திகளையும், இதில் ’ஸ்கேன்’ செய்து சேமித்து வைக்கலாம். தேவை இருப்பின், எடுத்து வாசிக்கலாம். இப்படி புதுமைகளைக் கொண்ட இந்தக் குறிப்பேடு சேவையான ‘நாப்கின்’ ஐபோன்களுக்கு மட்டுமே அறிமுகமாகியுள்ளது. ஆண்டுராய்டுக்கு இன்னும் இச்சேவை வழங்கப்படவில்லை.

முந்தைய அத்தியாயம் > டிஜிட்டல் டைரி - 15: இணையவாசிகளால் பாடம் கற்ற பிரபல யூடியூபர்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x