Published : 19 Oct 2024 04:02 PM
Last Updated : 19 Oct 2024 04:02 PM
கோவை: உலகளவில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மை நாடாக விளங்குகிறது. இந்தியா 2022-2023-ம் ஆண்டில் 230 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்துள்ளது. தமிழகத்தில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நாள்தோறும் சுமார் 35 லட்சம் லிட்டர் பாலை ஆவின் கொள்முதல் செய்கிறது.
உலகிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இருந்த போதிலும், கறவை மாடுகளின் பால் உற்பத்தி திறனை பார்க்கும் போது, மற்ற நாடுகளை விட இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. குறைந்த இனப்பெருக்கத்திறன், தரமான தீவனமின்மை மற்றும் குறைந்த கால்நடை நல வசதிகள் போன்றவை கறவை மாடுகளின் உற்பத்தி குறைவுக்கான முக்கிய காரணங்களாகும்.
இதுபோன்ற காரணங்களால், இந்தியாவில் பால் பண்ணைகளில் மேலாண்மைசெலவுகள் அதிகரித்து, ஆண்டொன்றுக்கு பால் உற்பத்தியில் 20-30 டன் குறைந்து, சுமார் ரூ.50,000 கோடி இழப்பு ஏற்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கறவை மாடுகளில் பால்உற்பத்தி, இனப்பெருக்கத்திறன் பற்றிய தரவுகள்மற்றும் தகவல்கள், சிறு விவசாயிகளுக்கு சரியாககிடைக்கப்பெறாதது போன்றவையே, கறவை மாடுகளின் உற்பத்தி திறன் குறைவுக்கும், இனப்பெருக்கத்திறன் குறைவுக்குமான காரணங்களாகக் கருதப்படுகிறது.
தற்போது, கறவைமாடுகளின், இனப்பெருக்கத்திறன் பற்றிய தரவுகளை தருவதற்காக பல டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எதிர்கால பால் வளத்துறையானது, துல்லிய பால் பண்ணைகளுக்கான கோட்பாடு, துறையின் நிலைத்தன்மை மற்றும் அதுபற்றிய அறிவுத்திறன் ஆகியவற்றை சார்ந்ததாகும்.
அந்தவகையில், பால் வளத்துறையில் கறவை மாடுகளின் உற்பத்தி திறனை மேம்படுத்த பரவலான டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் மூலம், கோவையில் உள்ள குமரகுரு கல்லூரியில் கறவைமாடுகளுக்கான ஆராய்ச்சி திட்ட மேலாளர் தனம்மாள் ரவிச்சந்திரன்தலைமையில், இந்தோ-ஜெர்மன் அறிவியல் தொழில்நுட்ப நிதி ஆதரவில்,கோவை மற்றும் ஈரோடு பகுதிகளை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் “கறவை மாடுகளின் இனப்பெருக்கதிறனை கண்காணிப்பதில் டிஜிட்டல் தொழில் நுட்பங்களின் பங்கு” பற்றி கண்டறிய ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, ஆராய்ச்சியாளர் தனம்மாள் ரவிச்சந்திரன் கூறியதாவது: இந்த ஆய்வில் நித்தாரா (Nitara Farmer) செயலி,மாடுகளின் இனப்பெருக்க செயல் திறனை பதிவு செய்ய உபயோகப்படுத்தப்பட்டு, கறவை மாடுகளில் குறைந்த பால்உற்பத்திக்கான காரணிகள் கண்காணிக்கப்பட்டது. சுமார் 30 கிங்களில் 479 விவசாயிகளின் 2,258 கால்நடைகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
மாடு வளர்ப்பில் நல்ல லாபம் பெற, கலப்பின கிடேரிகள் 16-18 மாத வயதிலும், கன்று ஈன்ற பசுக்கள் கன்று ஈன்ற 3-4 மாதங்களுக்குள்ளாகவும் சினைஊசி போடப்பட்டு, சினைப்படுத்தப்பட வேண்டும். ஆராய்ச்சியில் 30 மாதங்கள் ஆகியும் 15 விழுக்காடுகிடேரி கன்றுகளுக்கு சினைப்பருவத்திற்கு வராமல் கருவூட்டல் செய்யப்படவில்லை என்றும், 32 விழுக்காடு கறவை மாடுகளில் கன்றுஈன்று 6 மாதங்களாகியும் கருவூட்டல் செய்யப்படாமல் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
மாடுகள் சினைக்கு வராததும், மாடுகள் சினைக்கு வருவதை மாடு வளர்ப்போர் சரியாக கவனிக்காததும், சரிவிகித தீவனம் இல்லாததும் இதற்கான காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன. மேலும், 404 கறவை மாடுகளை ஆய்வு செய்ததில் 18 விழுக்காடு மாடுகள் 3 முறைகருவூட்டலுக்கு பிறகும் சினை பிடிக்கவில்லைஎனவும் கண்டறியப் பட்டுள்ளது. இந்த ஆய்வில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் பகுப்பாய்வுகள், கறவை மாடுகளின் இனப்பெருக்க திறனை மேம்படுத்தும் விரிவாக்க பணிகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டன.
புதுவித டிஜிட்டல் தொழில்நுட்பங்களை கொண்டு கண்டறியப்படும் உற்பத்தி மற்றும் இனப்பெருக்க செயல்திறன் பற்றிய தரவுகள், ஆதார அடிப்படையான செயல்களை புகுத்தி, சிறு விவசாயிகளின் பண்ணையில் மாடுகளின் உற்பத்தியை மேம்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும். மேலும், பால் உற்பத்தியை அதிகரிக்க இனப்பெருக்க சேவை வழங்குவோரை, குறிப்பாக கருவூட்டல் செய்பவர்களை கண்காணிப்பது மிகவும் அவசியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, கால்நடை துறை அதிகாரிகள் கூறும்போது, “தமிழகத்தில் சுமார் 2.45 கோடி கால்நடைகள் உள்ளதாக 2019-ல் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. விவசாயிகள் அதிக பால் உற்பத்தி திறன் கொண்ட கலப்பின ஜெர்சி, கலப்பின ஹோல்ஸ்டீன் ப்ரீசியன், முர்ரா எருமைகளை வளர்த்து வருகின்றனர்.
இதுதவிர காங்கயம், உம்பளசேரி, ஆலம்பாடி,பர்கூர், புலிக்குளம் போன்ற நாட்டின பசுக்களும் வளர்க்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் சுமார் 2.64 லட்சம் கால்நடைகள் உள்ளன. இதில்70 சதவீதஅளவுக்கு பசு மாடுகள் உள்ளன. பொதுவாக மாடு கன்றுஈன்றதற்குப்பிறகு 45-வது நாளில் சினை ஊசி செலுத்தவேண்டும். முதல்ஊசியில் சினை பிடிக்கவில்லையெனில் அடுத்து 18 நாட்கள் கழித்து 2-வது சினை ஊசி செலுத்தவேண்டும்.
அப்போதும் சினை பிடிக்கவில்லையெனில் அடுத்த 18 நாள்களில் தொடர்ந்து 3-வது சினை ஊசி செலுத்த வேண்டும். அப்போதும் சினை பிடிக்கவில்லையெனில் அந்த கறவை மாட்டுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். கால்நடைகளுக்கு மருத்துவ குறிப்புகளும் பராமரிக்க வேண்டும். கால்நடைகளை முறையாகக் கவனித்து தாது உப்பு கலவை வழங்க வேண்டும். குடல் புழு நீக்கம் செய்ய வேண்டும். நேரத்திற்கு சினை ஊசி போடவேண்டும். அதே போல கோமாரி நோய்தாக்கப்பட்ட மாடுகளுக்கு சினை பிடிப்பது தாமதமாகும். இதற்காக மலடு நீக்க சிகிச்சை வழங்கப்படுகிறது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT