Last Updated : 16 Oct, 2024 06:16 AM

4  

Published : 16 Oct 2024 06:16 AM
Last Updated : 16 Oct 2024 06:16 AM

நான் அகிம்சையை நம்புகிறேன் | தேன் மிட்டாய் 25

ஓவியம்: லலிதா

என்னை முதல் முறை பார்க்கும் ஒவ்வொருவரின் கண்களிலும் ஒரு குட்டி பயம் ஒளிந்து கொண்டிருக்கும். சீறிவரும் காளையை ஒரே அடியில் சுருண்டு விழவைக்கும் இவரா அகிம்சையைப் போதிக்கிறார்? இவரையா ‘எல்லை காந்தி’ என்கிறார்கள்? என்னை இழுத்துச் செல்லவந்த பிரிட்டிஷ் காவலர்களும்கூட என்னைக் கண்டதும் அப்படியே திடுக்கிட்டு நின்றுவிட்டனர்.

உருண்டு, திரண்டு நிற்கும் இவரை நம்மால் கைது செய்ய முடியுமா? இவர் திமிறினால் மோதி அடக்கும் வலு நம்மிடம் இருக்கிறதா? இவ்வளவுக்கும் அவர்களிடம் துப்பாக்கி இருந்தது, என்னிடம் ‘புன்னகை’யைத் தவிர எதுவும் இல்லை. இருந்தும் மிரட்சியோடுதான் நெருங்கினார்கள். “உங்களால் அமைதி கெடுகிறது என்று குற்றச்சாட்டு. மக்களை நீங்கள் கெடுக்கிறீர்களாம். கைது செய்து அழைத்து வரச் சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்கள்.”

ஒரு சொல் பேசாமல், புன்னகை கொஞ்சமும் குறையாமல் அவர்களோடு நடந்து சென்றேன். ஆனால், சிறையில் அடைத்து என்னைப் பூட்டிய பிறகும் அவர்களுடைய அச்சம் நீங்கவில்லை. ஒருவேளை கம்பிகளை உடைத்துக்கொண்டு நான் தப்பி ஓடிவிட்டால் என்ன செய்வது?

எனவே, என் கால்களிலும் விலங்கு பூட்ட விரும்பினார்கள். விதவிதமான விலங்குகளைக் கொண்டுவந்து பொருத்தினார்கள். எதுவும் என் பெரிய கால்களுக்குப் போதவில்லை. எப்படியாவது எதிலாவது நுழைத்துவிடலாம் என்று ஒவ்வொரு விலங்காக எடுத்து என் காலில் அழுத்திப் போட்டுப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

உயிர் போகும் வலி. ரத்தம் பெருகியது. அன்று இரவு என்னால் உறங்க முடியவில்லை. மறுநாள் காலை அதே காவலர்களைக் கண்டபோது மீண்டும் என் உதடுகளில் சிறு புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது. ‘நண்பா, நான் உன்னை மன்னித்துவிட்டேன்.’ என் புன்னகையின் பொருள் அதுதான்.

உங்களில் ஒருவர் மீதும் எனக்குக் கோபம் இல்லை. நீங்கள் அந்நியர்கள். என் நாட்டை ஆள்வதற்கோ என் மக்களை ஒடுக்குவதற்கோ உங்களுக்கு உரிமை இல்லை. உங்கள் சட்டம் அநீதியானது. உங்கள் வழிமுறை தவறானது. இந்தியா இந்தியர்களுடைய நாடு. இந்தியர்களே இந்தியாவை ஆளவேண்டும். பிரிட்டனோ வேறு நாடோ அல்ல. இதை வீதி, வீதியாக மக்களிடம் கொண்டு செல்வதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

நீங்கள் எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. எங்களை ஆள்வதற்கு உங்களுக்கு எந்தத் தகுதியும் இல்லை. எனவே, பிரிட்டிஷ் பேரரசை நான் எதிர்க்கிறேன். உங்கள் அரசு, உங்கள் அதிகாரிகள், உங்கள் காவல் துறை, உங்கள் நீதி, உங்கள் சிறைச்சாலை அனைத்தையும் எதிர்க்கிறேன். என் உயிர் உள்ளவரை தொடர்ந்து எதிர்க்கவும் செய்வேன்.

ஆனால், உங்களில் ஒருவரையும் நான் வெறுக்க மாட்டேன். என்னை நீங்கள் அடித்தே கொன்றாலும் என் சுண்டுவிரல் நகம்கூட உங்களைத் தீண்டாது. என் தோளைவிட, என் கரத்தைவிட, என் இதயத்தின் அளவு பெரியது. அதில் வன்முறை அல்ல, வன்முறையின் நிழலைக்கூட நீங்கள் காண இயலாது. ஏனென்றால், நான் காந்தியின் தோழன். காந்தியத்தின் தோழன். என் பலம், புன்னகை. என் மதம், அமைதி. என் தத்துவம், அகிம்சை. இவை போதும் உலகை வெல்ல.

உங்களுக்குள் நிறைந்திருக்கும் தீய குணங்களை எதிர்ப்பேனே தவிர உங்களை அல்ல. உங்களை ஆக்கிரமித்திருக்கும் தவறான சிந்தனைகளை முறியடிக்கப் பேராடுவேனே தவிர, உங்களை வீழ்த்த அல்ல. உங்களைப் பற்றிக்கொண்டிருக்கும் தீமை விலகினால், மறு நொடியே நீங்கள் புதிய மனிதராக மாறிவிடுவீர்கள். அந்த மாற்றம் ஓர் அதிசயம்போல் நிகழ்வதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.

சுருங்கிக் கிடந்த பல இதயங்களை அன்பு விரிவுபடுத்தி இருக்கிறது. ‘ஐயோ, காலில் ரத்தம் வர, வர அவரைத் துன்புறுத்திவிட்டோமே’ என்று அந்தக் காவலர் ஒரு கணம் நினைத்தால்போதும். அவர் ஒரு புதிய மனிதராக மாறிவிடுவார். அந்த மாயம் நிகழும் எனும்z நம்பிக்கையில்தான் நான் அவரைப் பார்த்துப் புன்னகைத்தேன்.

வன்முறையைக் கொண்டு எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினாலும் அது நிலைக்காது. காற்றோடு கலந்து காணாமல் போய்விடும். அகிம்சை ஒரு சிறு சலனத்தைதான் ஏற்படுத்தும். ஆனால், உலகைத் திருப்பிப் போட அந்தச் சிறு சலனம் போதுமானது. பிரிட்டிஷ் பேரரசை வீழ்த்துவதற்கு அவர்களைக் காட்டிலும் அதிக வன்முறையை நாம் பயன்படுத்தத் தேவையில்லை. அவர்களைக் காட்டிலும் அதிக அநீதிகளை நாம் இழைக்கத் தேவையில்லை. அவர்களைக் காட்டிலும் பெரிய ராணுவத்தை நாம் உருவாக்க வேண்டியதில்லை.

நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். காந்தியோடு கரம் சேர்த்து ஒரு மாபெரும் அகிம்சைப் படையை உருவாக்குவோம். ஒரு துளி வெறுப்பும் ஏந்தாத படை. எவ்வளவு பெரிய தீங்கையும் மன்னித்து மறக்கும் மாபெரும் இதயம் கொண்டவர்களின் படை. உண்மையைத் தவிர வேறு எதையும் ஏற்காத போராளிகளின் படை. உதடுகள் வலிக்கும்வரை புன்னகைக்கத் தெரிந்தவர்களின் படை. அந்தப் படையால் வெல்ல முடியாத சக்தி இந்த உலகில் எங்கும் இல்லை என்று நம்புகிறேன்.

என் மதம் உண்மை, அன்பு, கடவுளுக்கும் மனித குலத்திற்கும் சேவை செய்வது. - கான் அப்துல் கஃபார் கான், சுதந்திரப் போராட்டத் தலைவர்.

- marudhan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x