Last Updated : 15 Oct, 2024 02:35 PM

 

Published : 15 Oct 2024 02:35 PM
Last Updated : 15 Oct 2024 02:35 PM

ஸ்விஸ் எனும் சொர்க்கம் 11: வெள்ளிப்பனி மலை ‘டிட்லிஸ்’

‘வெள்ளிப்பனி மலையின் மீதுலாவுவோம்’ என்று பாரதியார் பாடியது நம் இமயமலை குறித்துதான். ஆனால், சுவிட்சர்லாந்தில் வெள்ளிப்பனி மலையின் மீதுலாவும் அற்புத அனுபவங்களை மூன்று இடங்களில் பெற முடியும். அவற்றில் ஒன்றான ‘டிட்லிஸ்’ நோக்கிப் பயணம் ஆனோம்.

மத்திய சுவிட்சர்லாந்தில் உள்ள மிக உயரமான மலை டிட்லிஸ். உலகின் முதல் ‘சுழலும் கேபிள் காரைக்’ கொண்டது. (இப்போதுகூட உலகில் உள்ள சுழலும் கேபிள் கார்கள் குறைவுதான்). தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து சேருகின்றனர். சுவிட்சர்லாந்தின் தலைநகரான பெர்ன், ஆப்வால்டன் மாவட்டம் ஆகிய இரண்டுக்கும் நடுவே அமைந்துள்ளது டிட்லிஸ். ஏங்கெல்பெர்க் என்கிற கிராமத்துக்கு மேலே அமைந்துள்ளது. 1992ஆம் ஆண்டில்தான் டிட்லிஸ் ஒரு சுற்றுலாத் தலமாக உருவானது.

மலை அடிவாரத்தில் உள்ள டிட்லிஸ் நிலையத்தில் உணவகங்கள் உண்டு. சாகசப் பூங்கா உண்டு. வாடகைக்கு இரண்டு சக்கர வாகன வசதி உண்டு. சைக்கிளில் செல்வதற்கென்றே அருமையான, அழகான, குறுகலான சாலைகள் உண்டு. டிட்லிஸ் பயணத்தின் முதல் கட்டத்தில், டிட்லிஸ் பள்ளத்தாக்கு நிலையத்திலிருந்து ‘டிட்லிஸ் எக்ஸ்பிரஸ்’ என்கிற ரயிலில் ஏறி ஏங்கெல்பெர்க் ரயில் நிலையத்தை அடைய வேண்டும். லூசர்ன் பகுதியிலிருந்து ஏங்கெல்பெர்க்கை ரயிலில் அடைய சுமார் 40 நிமிடங்களாகின்றன. தொடக்கத்தில் நேராகச் செல்லும் இந்தப் பாதை கடைசி 10 கி.மீட்டரில் பல கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டதாக இருக்கிறது. அபாயம் இல்லை என்றாலும் கடும் பனிக்காலத்தில் இந்தத் திருப்பங்கள் அச்சத்தைத் தர வாய்ப்பு உண்டு.

ஏங்கெல்பெர்க் அற்புதமான மலை அனுபவங்களுக்கான அழகான இடம். இங்குள்ள ஏதாவது ஒரு குடிலில் பல சுவிட்சர்லாந்து கலைஞர்கள்கூடி தங்கள் கலைப் படைப்பைக் காட்சிக்கு வைப்பது வழக்கம். இது பெரும்பாலும் ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை நடைபெறும். இங்குள்ள பெனெ டிக்டைன் புத்த மடாலயம் பார்க்கத் தக்கது. அதனருகே சீஸ் தயாரிப்பு நடைபெறுகிறது. ஓர் அருங்காட்சியகமும் உண்டு. ஒளியூட்டப்பட்ட குகை ஒன்றினுள் சென்றுவர முடியும்.

அடுத்த கட்டம் ஏங்கெல்பெர்க் பகுதியில் இருந்து ட்ருப்ஸீ பகுதிக்கானது. 1800 மீட்டர் தூரம் இது. கேபிள் காரில் செல்ல வேண்டிய பயணம். இங்கு பனிப் பூங்கா உள்ளது. உணவகங்களும் உண்டு. பின்னர் ஸ்டாண்ட் என்கிற பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து சுழலும் கேபிள் காரில் ஏறி அற்புதமான டிட்லிஸ் பனிக்கட்டிப் பாறைகளை அடைவோம். இந்தச் சுழலும் கேபிள் காருக்காக மட்டும் கொஞ்சம் அதிக நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரலாம்.

மேலேறும்போதே மெல்லத் தன்னைச் சுழல விட்டுக் கொள்கிறது இந்த கேபிள் கார். அண்மையில் அறிமுகமான மற்றொரு சுற்றுலா அம்சம் ‘கிளிப்ஃப் வாக்’. சிறிய தூரத்துக்குப் பனிமலையில் தொங்கு பாலத்தில் நடக்கலாம். தவற விடக்கூடாத ஒன்று இது. டிட்லிஸ் பனிக்குகை என்பது 150 மீட்டர் உள்ளே செல்கிறது. உள்ளே கொஞ்சம் சறுக்க வாய்ப்பு உண்டு என்பதால் டிட்லிஸ் பயணம் செல்பவர்கள் உறுதியான ஷூக்களையும், வெதுவெதுப்பான உடைகளையும் அணிந்து செல்ல வேண்டும்.

வானம் மேகமூட்டமின்றி இருந்தால் இயற்கைக் காட்சிகளை அதிகமாகக் கண்டு ரசிக்க முடியும். ஆல்ப்ஸ் மலையின் பல சிகரங்கள் பிரமிக்க வைக்கின்றன. ஒட்டுமொத்தமாகக் கடல்மட்டத்திலிருந்து 3,200 மீட்டர் உயரத்தில் நிற்கிறோம் என்பதே மூச்சடைக்க வைக்கிறது.

மேலே செல்ல இரண்டு மணி நேரமும் கீழ இறங்க ஒன்றரை மணி நேரமும் தேவைப்படும். போக வர என்று ஒரே டிக்கெட்டை அளிப்பார்கள். இதைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். காரணம் பல இடங்களில் இதைச் சோதனைக்கு உள்படுத்த வேண்டியிருக்கும். இயற்கை அற்புதத்தைப் பரவசத்துடன் ஓரளவு பயமும் சேர்ந்து உணர வைக்கும் பகுதியாக இருக்கிறது டிட்லிஸ்.

(பயணம் தொடரும்)

முந்தைய அத்தியாயம் > ஸ்விஸ் எனும் சொர்க்கம் 10: முடிவெடுக்கும் அதிகாரம் மக்களிடம் இருக்கிறது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x