Published : 10 Oct 2024 04:00 PM
Last Updated : 10 Oct 2024 04:00 PM

பர்பி, எண்ணெய்க்கு எப்பவும் மவுசு... சேவூர் நிலக்கடலை தனி தினுசு..!

நிலக்கடலை அறுவடை பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

அவிநாசி: சத்து, சுவை மற்றும் தரம் நிறைந்த சேவூர் நிலக்கடலை கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பயிராகும். அவிநாசி பகுதி மழை மறைவு பிரதேசம். இப்பகுதியில் வறட்சியை தாங்கி வளரும் பயிர்களில் முதன்மையான இடம்பிடித்திருப்பது நிலக்கடலை. சேவூர் நிலக்கடலை சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டார மாவட்டங் களிலும் பிரசித்தி பெற்றது. பனை மரம் போல் வறட்சியை தாங்கி வளரும் உன்னத பயிராக விவசாயிகள் இன்றும் இதனை கருதி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சேவூர் குரும்பபாளையத்தை சேர்ந்த நிலக்கடலை விவசாயி கதிர்வேல் கூறியதாவது: சேவூர், குட்டகம், தண்ணீர் பந்தல் பாளையம், போத்தம் பாளையம், தாமரைக்குளம், பாப்பான் குளம், முறியாண்டாம் பாளையம், கானூர், நடுவச்சேரி, வடுகபாளையம், மங்கரசு வலையபாளையம், தண்டுக்காரன் பாளையம், ராமியம்பாளையம் என 30 கி.மீ. சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கடலை விவசாயம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.

வறட்சியை தாங்கி வளர்வதால், இப்பகுதி விவசாயிகளின் விருப்பத்தேர்வாக இந்த நிலக்கடலை சாகுபடி உள்ளது. மழைபெய்யும் போது கிடைக்கும் நிலத்தடி நீர் மற்றும் நீராதாரத்தை கொண்டு விளையும் மானாவாரி பயிர் என்பதால், பலரும் இந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோம். சிறு, குறு விவசாயிகளுக்கு பெரிய பொருட்செலவு இல்லை. குறிப்பாக செம்மண் கலந்த சரளை மண் என்பதால், மண்ணில் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே உள்ளது.

அதேபோல் விளையும் கடலைச்செடியிலும் பருப்புகள் தரமாகவும் மற்றும் சத்து நிறைந்து ஆரோக்கியமாகவும் இருப்பதால், இங்கு உற்பத்தி செய்யும் கடலைக்கு ஏக மவுசு. அதேபோல் கடலை பர்பி, கடலை எண்ணெய் மற்றும் வறுகடலைக்கு இந்த கடலைகள் நன்கு சுவையாகவும், இயற்கையாகவும் விளையும் தன்மை கொண்டதால் மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது.

அதேபோல் சுவையுடன், சத்தும் சேர்ந்திருப்ப தால் பலர் விரும்பி சாப்பிடுகின்றனர். அதே போல் கடலை எண்ணெயை பல்வேறு மாவட்டங்களில் இருந்து, இங்கு வந்து வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் உழவர் உற்பத்தியாளர் கூட்டுப்பண்ணை நிறுவனம் மூலம் மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி, விவசாயிகள் பலர் பயன்பெற்று வருகின்றனர். மானாவாரி விவசாயம் என்றால் ஆண்டுக்கு ஒருமுறையும், கிணற்று பாசனம் என்றால் ஆண்டுக்கு இருமுறையும் விளைவிப்போம்.

100 நாட்கள் தான் இதன் அறுவடை காலம். எங்கள் கோரிக்கையை ஏற்று, திருப்பூர் மாவட்டத்தில் குறுகிய நிலப்பரப்பில் விளையும் சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கி, சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சேவூர் நிலக்கடலை இந்த பகுதியில் 4600 ஏக்கரில் விளைவிக்கப்படுகிறது. ஓர் ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டைகள் வரை கிடைக்கும். ஒரு மூட்டை என்பது 60 கிலோ ஆகும். நல்ல தரமான, சுவையான சத்தான பருப்பாக இங்கு விளையும் கடலை இருப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டுதல்களின் படி, மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்பனை நடைபெறுகிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் உள்ளனர். சேவூர் கடலை மூலம் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய் வெகு பிரசித்தம். இதனை நாடும் நுகர்வோர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். புவிசார் குறியீடு கோரி விவசாயிகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x