Last Updated : 09 Oct, 2024 06:06 AM

 

Published : 09 Oct 2024 06:06 AM
Last Updated : 09 Oct 2024 06:06 AM

ஆற்றில் இறங்கலாமா? - கதை

கொக்கு வந்து அந்தச் செய்தியைச் சொன்னதிலிருந்து நரியின் நாவில் நீர் ஊறிக் கொண்டிருந்தது.

“நண்பா, நான் இன்று இரைதேடிச் சென்றுவிட்டுத் திரும்பிவரும் வழியில் ஒரு பெரிய வெள்ளரித் தோட்டத்தைப் பார்த்தேன். அங்கே நிறைய வெள்ளரிக்காய்கள் காய்த்துக் கிடக்கின்றன. உனக்குத்தான் வெள்ளரிக்காய் என்றால் மிகவும் பிடிக்குமே” என்று நரியிடம் சொன்னது கொக்கு.

“தோழி, நீ எங்கே இரை தேடிச் சென்றாய் என்பது எனக்கு எப்படித் தெரியும்? எந்தத் திசையில், எவ்வளவு தொலைவில் அந்த வெள்ளரித் தோட்டம் இருக்கிறது என்று சொல்” என்று கேட்டது நரி.

“இன்று தெற்குத் திசையில்தான் சென்றேன். இங்கிருந்து சற்றுத் தொலைவில் ஆறு ஓடுகிறது. அந்த ஆற்றுக்கு மறுகரையில் அந்த வெள்ளரித் தோட்டம் இருக்கிறது” என்றது கொக்கு.

“ஆற்றைத் தாண்டி மறுகரைக்குப் போக வேண்டுமா?” என்று தயக்கத்தோடு கேட்டது நரி.

“ஆமாம், சுவையான வெள்ளரிக்காய் வேண்டும் என்றால் போகத்தானே வேண்டும்?” என்று சொன்ன கொக்கு, ஓய்வெடுக்கச் சென்றுவிட்டது.

‘வெள்ளரிக் காய்களை எப்படியாவது உண்ண வேண்டுமே’ என்று நினைத்த நரி, கொக்கு சொன்ன திசையில் நடந்து சென்றது. வழியில் ஆறு தென்பட்டது.

‘ஆற்றின் மறுகரைக்குச் செல்ல வேண்டுமே. ஆறு எவ்வளவு ஆழம் என்று தெரியவில்லையே. எனக்கு நீந்தத் தெரியாதே’ என்று யோசித்துக்கொண்டே ஆற்றின் கரையிலேயே நின்று கொண்டிருந்தது நரி. அப்போது சில வாத்துகள் ஆற்றின் மறுகரையிலிருந்து நீந்தி வந்து கரையில் ஏறின.

நரி, வாத்துகளைப் பார்த்தது. அவற்றின் உடலில் பாதி வரை மட்டுமே ஈரமாகியிருந்தது.

‘ஆற்றில் அரையடி ஆழத்திற்குத்தான் நீர் இருக்கும். ஆற்றுக்குள் இறங்கி நடந்தே மறுகரைக்குச் சென்றுவிடலாம்’ என்று நினைத்த நரி, ஆற்றில் இறங்கியது.

அவ்வளவுதான். நரி ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டது. சில நிமிடங்களில் மிதந்து வந்த ஒரு மரக்கட்டையைப் பிடித்து எப்படியோ கரை ஏறியது.

அங்கே வந்த ஆமை நரியிடம், “நண்பரே, பறவைகள் தண்ணீரின் மேல் பகுதியில்தான் நீந்தி வருகின்றன. அதனால் அவற்றைப் பார்த்து ஆற்றில் இறங்கக் கூடாது” என்றது.

“நீங்கள் சொல்வது சரிதான். யோசிக்காமல் ஆற்றில் இறங்கியது தவறுதான்” என்று சொல்லிவிட்டுத் தன் இருப்பிடத்திற்குச் சென்றது நரி.

மறுநாள் நரிக்கு மீண்டும் வெள்ளரிக்காய்களைச் சாப்பிடும் ஆசை வந்தது. அதன் நாவில் நீர் ஊறியது. அது மீண்டும் ஆற்றங்கரைக்கு சென்றது. எப்படியாவது மறுகரைக்குச் செல்ல முடியுமா என்று பார்த்தது. அப்போது ஓர் ஒட்டகச்சிவிங்கி ஆற்றிலிருந்து கரையேறி வருவதைப் பார்த்தது.

“நண்பரே, நான் ஆற்றின் மறுகரைக்குப் போக வேண்டும். ஆற்றில் எவ்வளவு நீர் போய்க் கொண்டிருக்கிறது?” என்று கேட்டது நரி.

“நரியாரே, ஆற்றில் முழங்கால் அளவுக்குத்தான் தண்ணீர் ஓடுகிறது” என்று சொல்லிவிட்டுச் சென்றது ஒட்டகச்சிவிங்கி.

‘முழங்கால் அளவுக்குத்தானா தண்ணீர் ஓடுகிறது’ என்று நினைத்த நரி, ஆற்றில் இறங்கியது. அவ்வளவுதான். மீண்டும் ஆற்று நீரில் இழுத்துச் செல்லப்பட்டது.

”ஐயோ, யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்” என்று அலறியது.

கரையில் இருந்த ஆமை இறங்கி, நரியின் காதுகளைத் தன் வாயால் கவ்விப் பிடித்தபடி, கரைக்கு நீந்தி வந்தது. நரி உயிர் தப்பியது.

“நண்பரே, என்ன தைரியத்தில் இன்று ஆற்றில் இறங்கினீர்?” என்று கேட்டது ஆமை.

“ஆமையாரே, மறுகரையிலிருந்து ஒட்டகச்சிவிங்கி ஆற்று நீரில் நடந்தே வந்தார். நான் அவரிடம் ஆற்றில் தண்ணீர் எவ்வளவு இருக்கும் கேட்டேன். முழங்கால் அளவுதான் தண்ணீர் ஓடுவதாகச் சொன்னார். அதனால்தான் நானும் இறங்கினேன்” என்றது நரி.

நரி சொன்னதைக் கேட்டுச் சிரித்தது ஆமை.

“நண்பரே, ஒட்டகச்சிவிங்கி எவ்வளவு உயரமானவர். அவர் தன் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் ஓடுவதாகச் சொல்லியிருக்கிறார். ஒட்டகச்சிவிங்கியின் முழங்காலே உங்களைவிட இரண்டு மடங்கு உயரமாக இருக்குமே. அதை யோசிக்கவில்லையா?” என்று கேட்டது ஆமை.

அப்போதுதான் நரிக்குத் தன் தவறு புரிந்தது.

“நண்பரே, எதற்காக மறுகரைக்குச் செல்ல வேண்டும்?”

“ஆமையாரே, ஆற்றின் மறுகரையில் வெள்ளரித் தோட்டம் இருப்பதாக என் தோழி கொக்கு சொன்னாள். வெள்ளரிக்காய்களை உண்ணும் ஆசையில்தான் நான் ஆற்றில் இறங்கினேன்” என்றது நரி.

“அப்படி என்றால் நீங்கள் நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள். அதுவே அறிவான செயல். உங்களுக்கு நீந்தத் தெரிந்தால் மறுகரைக்குச் சென்று வெள்ளரிக்காய்களை உண்ணலாம். நீந்தத் தெரியாமல் தத்தளிக்கும் மற்றவரையும் காப்பாற்றலாம்” என்றது ஆமை.

அதன் பிறகு ஆமையிடமே முறையாக நீச்சல் கற்றுக்கொண்டு மறுகரைக்கும் சென்று வந்தது நரி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x