Published : 07 Oct 2024 02:13 PM
Last Updated : 07 Oct 2024 02:13 PM
ஐன்ஸ்டைனின் அறிவைக் கண்டு வியந்த உலகம், அவர் மறைந்த பிறகு அவருடையை மூளையை வைத்து ஆராய்ச்சி செய்தது! அந்த அளவுக்கு ஐன்ஸ்டைனின் அறிவு அறிவியலும் மக்கத்தான பங்களிப்பை அளித்திருக்கிறது. ஆனால், ஐன்ஸ்டைன் பள்ளியில் படிக்கும் வரை சாதாரண மாணவராகத்தான் இருந்தார். ஐன்ஸ்டைனிடம் வித்தியாசமான ஒரு பழக்கம் இருந்தது. வார்த்தைகளாகப் படித்து மனப்பாடம் செய்ய மாட்டார். காட்சிகளாக, படங்களாக மனதிற்குள் ஓட்டிப் பார்ப்பார். நேரம் கிடைக்கும்போது அதைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பார்.
ஐன்ஸ்டைனின் அப்பா பொறியாளர் என்பதால், மகனையும் பொறியாளராக்க நினைத்தார். பாலிடெக்னிக் இயற்பியல் படிப்பில் சேர்த்துவிட்டார். இயற்பியல், கணிதம் மீது ஐன்ஸ்டைனுக்கு ஈடுபாடு அதிகம் இருந்தது. எனவே பிரபஞ்சத்தின் மர்மத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினார். கல்லூரி மரத்தடியில் அமர்ந்து எப்போதும் எதைப் பற்றியாவது சிந்தித்துக்கொண்டே இருப்பார். படிப்பை முடித்ததும் அவருடை அறிவியல் ஆராய்ச்சிக்குத் தீனிபோட்டது காப்பீட்டு அலுவலக வேலை. ஏராளமான கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வந்தன. அவற்றைக் கவனமுடன் பரிசீலித்து, தகுதியானவற்றைத் தேர்ந்தெடுத்தார் ஐன்ஸ்டைன்.
வேலையின் நடுவே பிரபஞ்ச ரகசியத்தைக் கண்டுபிடிக்கும் ஆய்வாளராகிவிடுவார். இப்படி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, ஒரே நேரத்தில் நான்கு முக்கிய ஆய்வுகளை வெளியிட்டார். அதுவரை பேரண்டம் பற்றி வெளிவந்த அனைத்தையும் பொய்யாக்கியது ஐன்ஸ்டைனுடைய ஆராய்ச்சி. ஒளிமின் விளைவு அறிவியல் உலகை ஆட்டுவிக்கும் குவாண்டம் இயற்பியலுக்கு அடித்தளமிட்டது. E=mc2 மூலம் மிகச் சிறிய துகள்களால்கூட மிகப் பெரிய அளவுக்கு ஆற்றலை வெளியிட முடியும் என்பதை உணர்த்தினார்.
காலமும் வெளியும் ஒன்றோடு மற்றொன்று தொடர்புடையது. பார்வையாளரின் திசை வேகத்தைப் பொறுத்தே காலமும் வெளியும் சுருங்கியோ விரிந்தோ இருக்கலாம். வெளியும் காலமும் ஒன்றாகவே கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒன்றைப் பொறுத்து மற்றொன்று அமையும் என்கிறது ஐன்ஸ்டைனுடைய சிறப்புச் சார்பியல் கோட்பாடு. பேரண்டத்தின் வெளி இழுத்துக்கட்டப்பட்ட பிளாஸ்டிக் துணி போன்றது. சூரியனால்தான் புவியில் ஈர்ப்பும் அதன் சுழற்சியும் நடக்கிறது என்று விளக்கினார். இவை போன்ற கோட்பாடுகள்தான் இன்று விண்வெளி ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன்படுகின்றன.
1921ஆம் ஆண்டு சிறப்புச் சார்பியல் கோட்பாட்டுக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஐன்ஸ்டைனின் ’ஒளிமின் விளைவு’க்கு நோபல் பரிசு கிடைத்தது. இருபதாம் நூற்றாண்டின் மிகச் சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராகவும் இதுவரை வாழ்ந்த இயற்பியலாளர்களில் மிகச் சிறந்தவராகவும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை அறிவியல் உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT