Last Updated : 02 Oct, 2024 06:13 AM

 

Published : 02 Oct 2024 06:13 AM
Last Updated : 02 Oct 2024 06:13 AM

என் மொழி, என் உயிர், என் உலகம் | தேன் மிட்டாய் 23

நான் விரும்பிப் படிக்கும் புத்தகங்கள் எல்லாம் ஏன் கிரேக்கத்திலும் லத்தீனிலும் எழுதப்பட்டுள்ளன? உலகம் கொண்டாடும் உன்னதமான படைப்புகள் எல்லாம் ஏன் பிற மொழிகளில் மட்டும் தோன்றியிருக்கின்றன? இந்தக் கேள்வி தோன்றிய அந்தத் தருணம் முதல் என் வாழ்க்கை அடியோடு மாறிவிட்டது. ஒரு படைப்பைப் படைப்பாக மட்டுமே கண்டுவந்த நான், அதன்பிறகு அது எந்த மொழியில் எழுதப்பட்டது என்பதையும் சேர்த்துக் கவனிக்கத் தொடங்கினேன். ஒவ்வொருமுறை கவனிக்கும்போதும் என் வருத்தம் அதிகரித்தது.

என்ன பாவம் செய்தது என் இத்தாலி? ஏன் என் மொழியில் இல்லை ஓர் இலியட்? ஏன் இல்லை ஓர் ஒடிசி? ஹோமரும் வர்ஜிலும் மொழி எல்லைகளைக் கடந்தவர்கள். உலகம் முழுவதற்கும் பொதுவானவர்கள், ஐயமில்லை. ஆனால், என் இத்தாலியில் ஏன் தோன்றவில்லை ஒரு ஹோமர்? எங்களிடம் ஏன் இல்லை ஒரு வர்ஜில்?

என்ன சொல்கிறார்கள் பார்ப்போம் என்று நினைத்து இந்தக் கேள்வியைப் பகிர்ந்துகொண்டபோது நண்பர்கள் என்னைத்தான் கோபித்துக் கொண்டார்கள். ‘உனக்கு எவ்வளவு துணிச்சல் இருந்தால் இப்படி எல்லாம் கேட்பாய் தாந்தே? கிரேக்கமும் லத்தீனும் வானில் இருக்கிறது என்றால் இத்தாலி பூமியின் அடியாழத்தில் புதைந்து கிடக்கிறது.

நம் மொழியை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் தாந்தே? எழுத்துக் கூட்டி இ...லி...ய...ட் என்று எழுத வேண்டுமானால் செய்யலாம். இலியட்போல் ஒன்றை ஒருபோதும் நம்மால் எழுத முடியாது. நம் மொழி அழுக்கானது தாந்தே. அது கொச்சை மொழி. வீட்டில் பேசுவதற்கும் வெளியில் சந்தைக்குப் போனால் பேரம் பேசிப் பொருள்கள் வாங்குவதற்கும் நிச்சயம் இத்தாலிய மொழி பயன்படும். அதற்கு மேல் அதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறாய்?’

‘எழுதுவதற்கு ஓர் அழகிய சொல்லாவது இருக்கிறதா நம் இத்தாலியில்? அதை வைத்துக்கொண்டு எப்படிக் காப்பியம் படைப்பது தாந்தே? கிரேக்கமும் லத்தீனும் கடவுளின் அருள் பெற்றிருக்கின்றன. நம் மொழி, சபிக்கப்பட்டது. அந்தச் சாபத்தைச் சுமந்துகொண்டுதான் நாம் வாழ வேண்டும்.

உனக்கு எழுத வேண்டும்போல் இருந்தால் கிரேக்கத்தில் எழுது, லத்தீனில் எழுது, பிரெஞ்சில் எழுது. நீ ஒரு கவி. உன் எழுத்துகளை நான்கு பேராவது படிக்க வேண்டும் என்றால் நாங்கள் சொல்வதுபோல் செய். இத்தாலிய மொழியில் ஏன் அது இல்லை, இது இல்லை என்று புலம்புவதை விட்டுவிட்டு எங்கே எல்லாம் இருக்கிறதோ அதை உன் மொழியாக ஆக்கிக்கொள்.’

இனி இத்தாலிய மொழியில்தான் எழுத வேண்டும் எனும் முடிவை அப்போதுதான் எடுத்தேன். அது எப்படி ஒரே ஓர் அழகிய சொல்கூட இல்லாமல் போகும் என் இத்தாலியில்? என் நிலத்தில் அழகிய வானம் தோன்ற முடியும் என்றால், என் நிலத்தில் அழகிய காடு செழிக்க முடியும் என்றால், என் நிலத்தில் அழகிய மனிதர்கள் வாழ முடியும் என்றால், என் மொழியில் அழகிய சொற்களும் நிறைந்துதான் இருக்கும்.

ஆனால், அவை அழகிய சொற்கள் என்பதை என் மக்களால் இன்னமும் உணர முடியவில்லை. அழகு என்றால் கிரேக்கமும் லத்தீனும்தான் என்று அவர்கள் நம்புகிறார்கள். உன்னதமானவை அனைத்தும் நம் மண்ணுக்கு வெளியேதான் இருக்கின்றன எனும் அப்பாவித்தனமான நம்பிக்கை அது. வேறு எதற்காக இல்லாவிட்டாலும் இந்த நம்பிக்கையை உடைப்பதற்காகவாவது நான் எழுதித்தான் தீரவேண்டும்.

எல்லா மொழிகளும் மனிதர்கள்உருவாக்கியவை. மனிதர்கள் பயன்படுத்துபவை. என் இத்தாலி எந்த மொழியை விடவும் உயர்ந்ததும் அல்ல, தாழ்ந்ததும் அல்ல. கிரேக்கத்தைக் கொண்டு என்னவெல்லாம் எழுத முடியுமோ, லத்தீனைக் கொண்டு என்னவெல்லாம் எழுத முடியுமோ அவை அனைத்தையும் என் இத்தாலிய மொழியைக் கொண்டும் எழுத முடியும்.

ஏன் இதுவரை யாரும் எழுதவில்லை என்றால் இந்த மொழியிலும் உன்னதமானவற்றை எழுத முடியும் என்று ஒருவரும் இதுவரை நம்பவில்லை. கேட்டதை எல்லாம் அளிக்கும் ஆற்றல் என் மொழிக்கு உண்டு. யாரும் அதைக் கேட்கவில்லை. அனைவரையும் அணைத்து அன்பு செலுத்த என் மொழியால் இயலும். யாரும் அதை நெருங்கவில்லை.

நிலம் கடந்து, பண்பாடு கடந்து உலகை ஆட்கொள்ளும் ஆற்றல் என் மொழிக்கு உண்டு. அதை உணராமல் சிறையில் சங்கிலி போட்டுப் பூட்டி வைத்திருக்கிறோம். நம் குறைகளையும் குற்றங்களையும் நம் மொழிமீது சுமத்துவது சரியல்ல.

என் இத்தாலிய மொழியை நான் விடுதலை செய்வேன். பூமிக்கு அடியில் இருந்து வானுக்கு உயர்த்துவேன். உலகம் என்னைப் படிக்க வேண்டும் எனும் விருப்பம் எனக்கும் உண்டுதான். ஆனால், முதலில் என் மக்கள் நான் எழுதியதைப் படிக்கட்டும். நம் மொழியின் செழிப்பையும் சிறப்பையும் அவர்கள் உணரட்டும்.

இத்தாலி வீட்டிலும் வீதியிலும் பேச வேண்டிய மொழி அல்ல. அது வானில் பறக்க வேண்டிய மொழி, உலகை வசப்படுத்தப்போகும் மொழி என்பதை அவர்கள் உணரட்டும். கிரேக்கம் என்று சொல்லும்போது அவர்கள் கண்ணில் தோன்றும் வெளிச்சம் இத்தாலி என்று சொல்லும்போதும் தோன்றட்டும்.

இத்தாலி என் தாய்மொழி. அதைப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நான் கொடுத்து வைத்திருக்கிறேன் என்று அவர்கள் பெருமிதம் கொள்ளட்டும். மொழி மட்டுமல்ல, இத்தாலி என் உயிர். நூறு ஹோமர்களும் நூறு வர்ஜில்களும் என் மொழியில் தோன்றுவார்கள். அதற்கான முதல் அடியை நான் எடுத்து வைப்பேன்.

சிறிய தீப்பொறிதான் ஆற்றல் கொண்ட சுடராக மாறுகிறது. - தாந்தே, உலகப் புகழ் பெற்ற இத்தாலியக் கவிஞர்.

- marudhan@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x