Published : 18 Sep 2024 06:08 AM
Last Updated : 18 Sep 2024 06:08 AM
எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படுவதால் யாருக்கு என்ன லாபம், டிங்கு? - ஜி. இனியா, 8-ம் வகுப்பு, தி விஜய் மில்லினியம் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
பொதுவாக ஓர் எழுத்தாளர் மறைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் எழுதிய நூல் காப்புரிமையின் கீழ் வராது. அதனால், உலகம் முழுவதும் யார் வேண்டுமானாலும் அந்த நூல்களை வெளியிடலாம், மொழிபெயர்க்கலாம். யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை. மொழி வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம், அற்புதமான இலக்கியம் போன்றவற்றை ஓர் எழுத்தாளர் படைத்திருக்கிறார்.
அவரின் எழுத்துகளைக் கெளரவிக்கும் விதத்திலும் பெரும்பாலான மக்களுக்குச் சென்று சேரும் விதத்திலும் அரசாங்கம் நாட்டுடைமை ஆக்குகிறது. எந்த எழுத்தாளரின் படைப்புகள் நாட்டுடைமை ஆக்கப்படுகின்றனவோ அந்த எழுத்தாளருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு வழங்கிவிடுகிறது.
நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை இலவசமாக அரசு இணையத்தில் படிக்கவும் முடியும். நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்களை யார் வேண்டுமானாலும் புத்தகமாகக் கொண்டும் வரலாம். இப்படிக் கொண்டு வரும்போது புத்தகத்தின் விலையும் குறையும், அதிகமான மக்களுக்கும் சென்று சேரும். அதனால், நாட்டுடைமை ஆக்குவது எழுத்தாளர்கள், வாசகர்கள், பதிப்பாளர்கள் ஆகியோருக்கு நன்மை செய்கிறது, இனியா.
யானை, புலி போன்ற வலிமையான விலங்குகள் நிறைய இருக்கின்றன. ஆனால், சிங்கத்தை மட்டும் காட்டின் ராஜா என்று ஏன் சொல்கிறார்கள், டிங்கு? - ஆர். நிதின், 2-ம் வகுப்பு, ஆர்கா கிரீன் பள்ளி, அண்டூர், குமரி.
சிங்கத்தைக் காட்டு ராஜா என்று சிங்கமோ மற்ற உயிரினங்களோ தேர்ந்தெடுக்கவில்லை. சிங்கத்தின் கம்பீரமான தோற்றம், தன்னைவிடப் பெரிய விலங்குகளையும் வேட்டையாடும் திறமை, தனக்கென ஓர் எல்லையை வகுத்து அதற்குள் யாரையும் நுழையவிடாத குணம், பல கிலோ மீட்டர் தொலைவுக்குக் கேட்கும் கர்ஜனை, கூட்டமாக வசிப்பது போன்ற பல செயல்பாடுகளை வைத்து, மனிதர்களாகிய நாம்தான் அதைக் காட்டு ராஜா என்று அழைக்கிறோம். கதைகள், திரைப்படங்களில் காட்டு ராஜாவாகவே சிங்கத்தைக் காட்டுகிறோம். நம் கதைகளில் வருவதுபோலச் சிங்கங்கள் அடர்த்தியான காடுகளில் வசிப்பதும் இல்லை, தனியாக வேட்டைக்குச் செல்வதும் இல்லை, நிதின்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment