Last Updated : 18 Sep, 2024 06:13 AM

2  

Published : 18 Sep 2024 06:13 AM
Last Updated : 18 Sep 2024 06:13 AM

தேன் மிட்டாய் 21: கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது?

எப்படியாவது ஒரு பறவையின் பாடலை எழுதிவிட வேண்டும். இந்தக் கனவுதான் என்னைக் கவிதை உலகுக்குள் அழைத்து வந்தது. ஆனால், அங்கே கால்பதித்த பிறகுதான் தெரிந்தது, நான் நினைத்ததுபோல் ஒரு பறவையின் பாடலை எழுதுவது எளிதல்ல. பறவைகள் வானம் முழுக்க நிறைந்திருக்கின்றன. பல வண்ண உடல்களோடு. பலவிதமான சிறகுகளோடு. பலவிதமான வாழ்வோடு. இதில் நான் எழுத விரும்பிய பறவை எது? சாலையிலும் மலையிலும் காட்டிலும் பள்ளத்தாக்கிலும் கொத்துக் கொத்தாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன பாடல்கள். இதில் எது எனது கனவுப் பாடல்? அதை எப்படிக் கண்டறிவது?

எல்லாப் பறவைகளும் அழகாக இருக்கின்றன. எல்லாப் பாடல்களும் இனிக்கின்றன. எதை எழுதினாலும் நன்றாக இருக்கும்தான். ஆனால், அது ஏதோ ஒரு பறவையின் பாடலாக அல்லவா இருக்கும்? அதை நான் எழுதினால் அது ஏதோ ஒரு கவிதையாக அல்லவா மாறும்? எது எந்தப் பறவை என்று கண்டுபிடிக்க முடியாததுபோல், எது மாயா ஏஞ்சலுவின் கவிதை என்றும் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும் அல்லவா? எனது கனவுபோல் எனது கவிதையும் தனித்துவமானதுதானே?

என்னென்னவோ எழுதினேன் என்றாலும் நீண்டகாலத்துக்குப் பறவையின் பாடலை மட்டும் எழுதாமல் காத்திருந்தேன். நான் அழைத்தா ஒரு பறவை என்னிடம் வருகிறது? இவளை நம்பலாம், இவள் என்னை ஏற்பாள் எனும் நம்பிக்கை எந்தப் பறவைக்குத் தோன்றுகிறதோ அதுவே என்னை நெருங்குகிறது. கவிதையும் அப்படியே வரட்டும் என்று விட்டுவிட்டேன்.

வந்தது. எதிர்பாராத ஒரு நாளில். எதிர்பாராத ஒரு தருணத்தில். வேறு எதற்காகவோ காத்திருந்தபோது பஞ்சுபோல் ஒரு பாடல் பறந்து வந்து என்மீது மோதியது.

எங்கிருந்து வருகிறது, என்ன பறவை என்று தெரியவில்லை. ஆனால், கேட்ட சில நொடிகளில் தெரிந்துவிட்டது, நான் இதுவரை கேட்காத பாடல் இது. இதுவரை உணராத உணர்விது. எங்கிருந்து வருகிறது? மெல்ல, மெல்லக் கரையத் தொடங்கினேன். ஓர் இறகாக என் உடல் மாறுவதைக் கண்டேன். நானே ஒரு பறவையாக மாறிவிட்டேனா? அடுத்து நானும் பறக்க ஆரம்பித்துவிடுவேனா? வானில் எனக்கும் ஓர் இடம் கிடைத்துவிட்டதா?

கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். அங்கே மனிதர்கள் இருக்க மாட்டார்கள். பறவைகள் மட்டுமே இருக்கும். ஒரு பறவை என்னைக் கறுப்புப் பெண்ணாகப் பார்க்காது. ஒரு பெண்ணாகக்கூடப் பார்க்குமா என்று தெரியாது. உலகம் முழுக்க நிறைந்திருக்கும் எண்ணற்ற உயிர்களில் இதுவும் ஒன்றுபோலும் என்று நினைத்துக்கொள்ளுமோ என்னவோ. எப்படியும் பறவைக்கு வெறுக்கத் தெரியாது என்று உறுதியாகச் சொல்வேன்.

அங்கே நான் காண்பது போன்ற பிரிவுகள் இல்லை. ‘நீ கறுப்பு. எனவே நீ பறவையல்ல. வெள்ளைதான் உயர்ந்தது, இங்கே வராதே’ என்று காகத்தைப் புறா தள்ளிவிடுவதில்லை. பறக்க முடிகிற எல்லாப் பறவைகளையும் ஏன் எல்லா உயிர்களையும் வானம் ஏற்றுக்கொள்கிறது. கீழே விழுந்துவிடாமல் அணைத்துக்கொள்கிறது.

நிலையானதுபோல் உறுதியானதுபோல் தோன்றும் பூமிதான் என்னையும் என்னைப் போன்றவர்களையும் தடுமாற வைக்கிறது. இங்கே வராதே, அங்கே போகாதே என்று கதவையும் சாத்துகிறது. வானில் கதவுகள் இல்லை. என்னை உருக்கும் இந்தப் பாடல் என்னை வானில் ஒருவேளை அழைத்துச் சென்றால் கீழே குனிந்துகூடப் பார்க்க மாட்டேன் இந்தப் பூமியை. அவ்வளவு கோபம், அவ்வளவு வருத்தம். திகட்டத் திகட்டக் கேட்டு முடித்ததும், சரி பாடும் பறவையைப் பார்த்துவிடலாம் என்று எண்ணிக் கிளம்பினேன்.

பூங்காவில் தேடினேன். சாலையில் தேடினேன். மலையில் தேடினேன். பள்ளத்தாக்கில் தேடினேன். வீட்டு மாடியில், கோபுரத்தில், தோட்டத்தில், கட்டிடத்தில் தேடினேன். எங்கும் இல்லை என் பறவை. பாடல் மட்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. இதயத்தை உலுக்கிக்கொண்டே இருந்தது. இரைச்சலும் அழுக்கும் நெரிசலும் மிகுந்திருக்கும் ஓரிடத்தில் அந்தப் பாடலின் ஒலி இன்னும் தெளிவாகக் கேட்பதுபோல் இருந்தது. அழகிய, அமைதியான இடங்களில் அல்லவா பறவைகள் வசிக்கும்! கசப்பூட்டும் இந்த வீதியிலா வாழ்கிறது என் அரிய பறவை?

ஒரு வழியாகத் தேடிக் கண்டுபிடித்தபோது என் இதயத்தில் ஓர் இடி இறங்கியது. இருள் நிறைந்த ஒரு வீட்டுக்குள் ஓர் ஓரத்தில் அழுக்கோடு அழுக்காகக் கிடந்த ஒரு கூண்டுக்குள் அமர்ந்திருந்தது அந்தப் பறவை. நெருங்கினேன். மீண்டும் தன் பாடலை அது பாடத் தொடங்கியது. என்னைப் பார்த்தபடி. என் கண்களைப் பார்த்தபடி. அதே பாடல் என்றாலும் என் உடல் அதிரத் தொடங்கியது. கண்களிலிருந்து நீர் வழிய ஆரம்பித்தது.

என் அருமைப் பறவையே, என்னைப் போல் உன்னையும் கூண்டுக்குள்தான் அடைத்து வைத்திருக்கிறார்களா? உன் மெல்லிய உடலை, உன் அழகிய பாடலை, உன் கருணைக் கண்களை இரும்புக் கம்பிகளுக்குள் போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்களா? ஒரு பறவையைக் கூடவா சிறையில் தள்ளுவார்கள் இந்த மனிதர்கள்?

என் கூண்டின் பாடல். என் வலியின் பாடல். என் வதையின் பாடல். நான் எழுத வந்தது இதைத்தான். ஒரு கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது? அது தனக்காக மட்டும் பாடவில்லை. நமக்காகவும் பாடுகிறது. இனிமையாக ஒலித்தாலும் கவனித்துப் பார்த்தால் அதிலுள்ள கூர்மை தெரியும். எப்படி உன்னால் ஓர் உயிரை வெறுக்க முடிகிறது? எப்படி உன்னால் ஒரு பாடலைக் கம்பிக்குள் போட்டுப் பூட்டி வைக்க முடிகிறது? எப்படி உன்னால் ஓர் அழகிய பூமியைத் துண்டுதுண்டாக உடைக்க முடிகிறது?

அந்தப் பறவையின் பாடல்தான் என்னுடைய பாடலும். கூண்டுக்குள் இருக்கும் ஒரு பறவை ஏன் பாடுகிறது? அது விடுதலைக்காகப் பாடுகிறது. தன் விடுதலைக்காக அல்ல. நம் விடுதலைக்காக. பூமி இன்னொரு வானமாக மாறும்வரை கூண்டுப்பறவை பாடும். நான் பாடுவேன். எங்கள் பாடல் வாழும்.

(இனிக்கும்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x