Published : 11 Sep 2024 06:15 AM
Last Updated : 11 Sep 2024 06:15 AM
குறிஞ்சிக் காட்டில் வசித்த குரங்கு சில நாள்களாகவே குழப்பத்தோடும் கவலையோடும் இருந்தது. அதைக் கவனித்த முயல் காரணம் கேட்டது.
“என் மகன் இன்னும் சில நாள்களில் சுற்றுலா செல்லப் போகிறான். அவனைப் பற்றிய கவலைதான்” என்றது குரங்கு.
“ஆஹா, உன் மகன் சுற்றுலா செல்வது மகிழ்ச்சியான செய்திதானே! எதற்காகக் கவலைப்படுகிறாய்?” என்று கேட்டது மான்.
“என் பிள்ளை ஒரு மாதம் சுற்றுலா போகிறான். அவன் வேளா வேளைக்குச் சாப்பிட வேண்டுமே. அவனுக்கு ஒரு மாதத்திற்கான உணவை எப்படிக் கொடுப்பது என்றுதான் கவலை” என்றது குரங்கு.
“நீ கவலைப்படாதே. சற்றுத் தொலைவில் வாழை, கொய்யா, மாம்பழம் எல்லாம் நன்றாகப் பழுத்துக் கிடக்கின்றன. நான் போய் அவற்றைப் பறித்துக்கொண்டு வருகிறேன். அவனுக்குக் கொடுத்து அனுப்பு” என்றது அருகில் இருந்த வெளவால்.
“என் பிள்ளைக்குப் பழங்கள் மிகவும் பிடிக்கும்தான். ஆனால், அவன் ஒரு மாதம் சுற்றுலா செல்கிறானே... பழங்கள் அழுகிப்போய்விடுமே...” என்றது குரங்கு.
“நீ சொல்வதும் சரிதான்” என்றது வெளவால்.
“நீ கவலைப்படாதே. நான் நிலக்கடலை, முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு போன்றவற்றைக் கொண்டு வருகிறேன். நீ அவற்றை உன் பிள்ளைக்குக் கொடுத்து அனுப்பு” என்றது அணில்.
“என் பிள்ளையோடு சேர்ந்து சுற்றுலா செல்லும் நண்பர்கள் போகிற வழியில் கடலையையும் பருப்புகளையும் சாப்பிட்டு விடுவார்கள். பிறகு என் பிள்ளைக்குச் சாப்பிட எதுவுமே இருக்காது” என்றது குரங்கு.
“கவலைப்படாதே. சுற்றுலா செல்லும் உன் பிள்ளைக்குச் சுவையானஉணவை நான் தருகிறேன். ஆற்றங்கரைக்கு அருகிலேயே நிறைய மரவள்ளிக் கிழங்குகளும் சர்க்கரைவள்ளிக் கிழங்குகளும் விளைந்திருக்கின்றன. ஒரு மூட்டை கிழங்குகளைக் கொண்டு வருகிறேன். கொடுத்து அனுப்பு” என்றது மான்.
“ஐயோ, ஒரு மூட்டைக் கிழங்குகளா? என் பிள்ளை ஒரு கிழங்கைத் தூக்கவே சிரமப்படுவானே” என்று கவலையோடு சொன்னது குரங்கு.
குரங்கும் அதன் நண்பர்களும் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த காகம், “நீங்கள் பேசுவதைக் கேட்டேன். உன் பிள்ளை ஒரு மாதம் என்ன, ஒரு வருடம் சுற்றுலா சென்றாலும் உணவுப் பிரச்சினை வராதபடி ஒரு யோசனை சொல்லட்டுமா?” என்று கேட்டது.
“எந்த யோசனையாக இருந்தாலும் சொல்லு. என் பிள்ளையின் உணவுப் பிரச்சினை தீர வேண்டும்” என்றது குரங்கு.
“யோசனையை உன்னிடம் சொல்ல மாட்டேன். உன் பிள்ளையிடம்தான் சொல்வேன். நான் சொன்ன யோசனை எப்படி இருந்தது என்று சுற்றுலா சென்று திரும்பிய பிறகு உன் பிள்ளையிடம் கேள்” என்றது காகம்.
‘எப்படியும் முடிந்த அளவு உணவு கொடுத்து அனுப்பத்தான் போகிறேன். காகம் சொல்லும் யோசனையும் பயனுள்ளதாக இருந்தால் நல்லதுதானே’ என்று நினைத்து, காகத்திடம் சம்மதம் சொன்னது குரங்கு.
குட்டிக் குரங்கு சுற்றுலா செல்லும் நாளும் வந்தது. காகம் குட்டிக் குரங்கின் காதில் ஏதோ சொன்னது. அப்படியே செய்வதாகச் சொல்லிவிட்டு, சுற்றுலாவுக்குப் புறப்பட்டது.
சுற்றுலா சென்ற குட்டிக் குரங்கு ஒரு மாதத்துக்குப் பிறகு திரும்பி வந்தது.
‘தன் பிள்ளை சரியான உணவு கிடைக்காமல் உடல் மெலிந்து களைத்துப் போயிருப்பானோ?’ என்று நினைத்துக் கவலையோடு இருந்த குரங்குக்குப் பிள்ளையைப் பார்த்ததும் மகிழ்ச்சியாக இருந்தது.
“சென்ற இடம் எல்லாம் உணவு கிடைத்ததா?” என்று கேட்டது குரங்கு.
“நன்றாகவே சாப்பிட்டேன் அம்மா. காகம் சொன்னபடி நடந்துகொண்டதால் எனக்கு உணவுப் பிரச்சினை ஏற்படவில்லை” என்றது குட்டிக் குரங்கு.
“அப்படியா? காகம் என்ன சொன்னது?”
“எங்கே சென்றாலும் எப்போதும் உழைக்கத் தயாராக இருக்க வேண்டும். போகும் இடங்களில் ஏதாவது வேலை செய்து, அதற்கு உணவைப் பெற்றுக்கொண்டால் உணவுப் பிரச்சினையும் இருக்காது. தூக்கிச் சுமக்க வேண்டியதும் இல்லை என்று சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரியே நானும் நண்பர்களும் புதிய இடங்களில் சிறு சிறு வேலைகளைச் செய்து உணவைப் பெற்றுக்கொண்டோம். எங்கள் உழைப்பின் மூலம் கிடைத்த உணவு ரொம்ப ருசியாகவும் இருந்தது” என்று குட்டிக் குரங்கு சிரித்தது.
“ஆஹா! காகம் சொன்னது உண்மைதான். உழைக்கத் தயாராக இருப்பவர்கள் ஒருபோதும் பசியால் தவிக்க மாட்டார்கள்” என்ற குரங்கு, காகத்துக்கு நன்றி சொல்வதற்குப் புறப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment