Last Updated : 05 Jun, 2018 11:35 AM

 

Published : 05 Jun 2018 11:35 AM
Last Updated : 05 Jun 2018 11:35 AM

புதுத் தொழில் பழகு 08: ஆரோக்கியமான தித்திப்புத் தொழில்!

பயோகத்திலிருந்து மறைந்துபோய்விட்ட பொருள்கள் பல, இப்போது விழிப்புணர்வால் திரும்பிவந்திருக்கின்றன. பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாகச் சணல் பைகள், சில்வர் பாத்திரங்களுக்குப் பதிலாக மண்பானை, தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக்குக்கு மாற்றாகப் பித்தளைக் கோப்பைகள் என எல்லாத் துறைகளிலும் அவை கோலோச்சத் தொடங்கிவிட்டன.

01

கடல் உப்புக்கு மாற்றாகப் பாறை உப்பு, புளிக்கு மாற்றாகக் குடம்புளி என உணவுப் பொருள்களிலும் இந்த மாற்றம் நடந்திருக்கிறது. இதைப் பயன்படுத்தித் தென்னஞ்சர்க்கரை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுவருகிறார்கள் கோவையைச் சேர்ந்த மூன்று நண்பர்கள். அவர்கள் அதற்கு ‘தென்னை சர்க்கரை’ என்றே பெயர்வைத்துள்ளனர்.

படிப்பு வேறு சிந்தனை ஒன்று

மூவரில் ஒருவரான அசோக், இயந்திரவியல் பயின்றவர். சரவணன், கணக்குப் பதிவியல் பட்டதாரி, யுகந்தன் கலைஅறிவியல் பட்டதாரி. மூவரும் மூன்று விதமான படிப்புப் பின்னணியை, தொழில் பின்னணியைக்கொண்டவர்கள். ஆனால், மூவருக்கும் ஒரே சிந்தனை இருந்திருக்கிறது. சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம்தான் அது.

ஓர் உணவுவேளையில் அவர்களுக்குச் சட்டென யோசனைத் தோன்றியிருக்கிறது. அன்று வழக்கமாக எடுத்துக்கொள்ளும் வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரைக்கு மாற்றாகத் தென்னைநீர்ச் சர்க்கரை இருந்திருக்கிறது. அதன் சுவையே அலாதியாக இருந்திருக்கிறது. அந்தச் சர்க்கரை அவ்வளவாகப் பிரபலமாகவில்லை. அதனால் இதையே தொழிலாக ஆக்கலாம் எனக் களமிறங்கியிருக்கிறார்கள். தென்னை மரங்கள் அதிக அளவில் உள்ள கோயம்புத்தூர் இந்தத் தொழில் தொடங்க ஒரு சரியான தேர்வு என்பது அவர்களது திட்டம். பிறகு அதைத் தயாரிக்கும் முறைகளை அலைந்து திரிந்து கற்றிருக்கிறார்கள்.

IMG-20170516-WA0000 அசோக் rightவிலைதான் சவால்

“2017-ன் தொடக்கத்தில் தென்னைநீரில் சர்க்கரை தயாரிக்க ஆரம்பித்தோம். முதலில் 200 கிராம் தயாரித்துப் பார்த்தோம். அதன் முதல் வாடிக்கையாளர் நாங்கள்தாம். ருசித்துப் பார்த்தோம். சுவை தனியாக இருந்தது. இதை விற்கலாம் என்ற நம்பிக்கை வந்தது” என்கிறார் அசோக்.

பதநீர் இறக்குவதுபோல் தென்னங்குழைகளைச் சீவி அதிலிருந்து வடியும் நீரை எடுத்து, அதைப் பாத்திரத்தில் வைத்துக் காய்ச்சும்போது பாகுபோல் திரண்டுவரும். இதை ஆறவிட்டால், இறுதியில் சர்க்கரைத் துகள்கள் கிடைக்கும்.இதுதான் தென்னைநீர்ச் சர்க்கரை. உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் இது, சந்தையில் கிடைக்கும் சர்க்கரையைவிட விலை கூடுதலானது.

“நாங்கள் இதைச் சந்தைப்படுத்த நினைத்தபோது எங்களுக்குச் சவாலாக இருந்தது இந்த விலைதான். இதைவிட மிகக் குறைந்த விலையில் சர்க்கரை கிடைக்கும்போது இதை ஏன் வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்ற கேள்வி எழுந்தது” என்கிறார் சரவணன். முதலில் சில மாதங்கள் குறைவான அளவே உற்பத்திசெய்துள்ளனர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அந்த அளவு கூடியிருக்கிறது.

“இப்போது மாதம் 1 டன் அளவில் தயாரித்துவருகிறோம்” என்கிறார் யுகந்தன். மூவருள் இவர் மட்டும்தான் முழுநேரமாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகிறார். மற்ற இருவரும் பகுதிநேரமாக ஈடுபட்டுவருகிறார்கள். இப்போது இவர்கள் மொத்த விற்பனை செய்துவருகிறார்கள். சில்லறை விற்பனைமுயற்சியில் இப்போதுதான் இறங்கியிருக்கிறார்கள். முயற்சி திருவினையாக்கட்டும்.

கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x