Last Updated : 08 May, 2018 10:49 AM

 

Published : 08 May 2018 10:49 AM
Last Updated : 08 May 2018 10:49 AM

சேதி தெரியுமா? - நீட் தேர்வு: அடுத்த நெருக்கடி

நீட் தேர்வு எழுதும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்த சிபிஎஸ்இ உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ஏப்ரல் 27 அன்று ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை மே 3 அன்று விசாரித்த நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்குத் தடைவிதிக்கப்பட்டது. இதனால் மே 6 அன்று நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வைத் தமிழ்நாட்டு மாணவர்கள் ராஜஸ்தான், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்குச் சென்று எழுதினர்.

காவிரி வழக்கு: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

மத்திய அமைச்சர்களும் பிரதமரும் கர்நாடகத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இருப்பதால், காவிரி வரைவு அறிக்கையைத் தயாரித்து ஒப்புதல் பெற முடியவில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மே 3 அன்று தெரிவித்தது. இந்நிலையில், இந்த வழக்கில் காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீரை தமிழ்நாட்டுக்கு உடனடியாக கர்நாடக அரசு திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உத்தரவு பிறப்பித்தார். அத்துடன், இந்த வழக்குத் தொடர்பான விசாரணை மே 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தொடர்ந்து தாமதப்படுத்திவருவதால் விவசாயச் சங்கங்களும் எதிர்க்கட்சிகளும் மீண்டும் போராட்டங்களைத் தொடங்கப்போவதாக அறிவித்திருக்கின்றன.

புதிய பாடத்திட்டம் வெளியீடு

தமிழ்நாட்டில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட பாடப் புத்தகங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 4 அன்று வெளியிட்டார். வரும் கல்வியாண்டு முதல் இந்தப் பாடத்திட்டம் தமிழகப் பள்ளிகளில் அமல்படுத்தப்படுகிறது. இந்தப் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் பற்றி ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை, ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவிருக்கிறது. இதைத் தொடர்ந்து 2, 7,10,12 –ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் 2019-20 கல்வியாண்டில் மாற்றப்படவுள்ளன. தேசிய அளவில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளை மாநிலவழிக் கல்வியில் படிக்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும்படி இந்தப் புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கியத்துக்கு நோபல் பரிசு இல்லை

இலக்கியத்துக்கான நோபல் பரிசு 2018-ம் ஆண்டில் யாருக்கும் வழங்கப்படாது என்று அப்பரிசை வழங்கும் தி சுவீடன் அகாடெமி மே 4 அன்று அறிவித்துள்ளது. இலக்கியத்துக்கான நோபல் பரிசை முடிவுசெய்யும் சுவீடிஷ் அகாடெமி உறுப்பினர்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளதால் இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு யாரையும் தேர்வு செய்யப்போவதில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

8CHGOW_CHAMLING-SIKKIMright

இந்நிலையில் 2018-ம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசுக்குரியவரை 2019-ம் ஆண்டு பரிசுக்குரியவரோடு சேர்த்து அடுத்த ஆண்டு தேர்வு செய்யப்போவதாகவும் அகாடெமி அறிவித்துள்ளது.

நீண்டகாலமாகப் பதவியிலிருக்கும் முதல்வர்

இந்தியாவில் நீண்ட காலமாகப் பதவியிலிருக்கும் மாநில முதல்வர் என்ற சாதனையை சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங் படைத்திருக்கிறார். தற்போது 63 வயதாகும் பவன் குமார், 32 வயதில் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கியவர். 1993-ம் ஆண்டு சிக்கிம் ஜனநாயக முன்னணி என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார்.

1994-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று சிக்கிம் மாநில முதல்வராகப் பதவியில் அமர்ந்தார். அன்று முதல் தொடர்ந்து ஐந்து முறை தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவியில் நீடித்துவருகிறார்.

அவர் ஏப்ரல் 29 அன்று, 23 ஆண்டுகள், நான்கு மாதங்கள், 17 நாட்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்து மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதி பாசுவின் சாதனையை முறியடித்திருக்கிறார்.
 

20 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள்

பிரதமரின் மருத்துவப் பாதுகாப்புத் திட்டம் 2020-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக மே 2 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 20 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாட்டிலுள்ள 73 மருத்துவக் கல்லூரிகள் மேம்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ரூ.14,832 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருகிறது. இதில் ஆறு மருத்துவமனைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் மருத்துவத் துறையின் பல்வேறு பிரிவுகளில் 3,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீர்கெட்ட 14 இந்திய நகரங்கள்

உலக சுகாதார மையம், உலகளாவிய நகர்ப்புறக் காற்று மாசுத் தரவுகளை மே 2 அன்று வெளியிட்டது. இதில் காற்று மாசால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் உலகின் 20 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பிடித்திருக்கின்றன. டெல்லி, வாராணசி, கான்பூர், ஃபரிதாபாத், கயா, பாட்னா, ஆக்ரா, ஸ்ரீநகர், குருகிராம், ஜெய்பூர், ஜோத்பூர் உள்ளிட்ட நகரங்களில் காற்று மாசின் அளவு பி.எம். (Particulate Matter) 2.5-க்கும் அதிகமாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த 20 நகரங்களில் குவைத்தில் உள்ள அல்-சலீம், சீனா, மங்கோலியாவில் உள்ள சில நகரங்கள் மட்டுமே வெளிநாட்டு நகரங்களாகும். இந்த ஆய்வுக்காக 108 நாடுகளின் 4,300 நகரங்களின் காற்று மாசு அளவிடப்பட்டிருக்கிறது.

ராணுவச் செலவில் 5-வது இடம்

உலக அளவில் ராணுவத்துக்கு அதிகமாகச் செலவிடும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருப்பதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் (SIPRI) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் ராணுவச் செலவு 2017-ம் ஆண்டில் 5.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இந்திய அரசு ராணுவத்தின் பல்வேறு தேவைகளுக்காக சுமார் 4,28,130 கோடி ரூபாயைச் செலவழித்துள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் ராணுவச் செலவுகளில் முதல் நான்கு இடங்களைப் பிடித்திருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x